கல்முனை கடற்கரை பகுதியில் அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை;ஹரீஸ் எம்.பி. தலைமையிலான கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை கடற்கரைப் பகுதியிலுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்றி, திறந்த வெளியாக மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை (16) பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்களின் ஏற்பாட்டில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.நிசார், ஏ.சி.ஏ.சத்தார், ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, பொறியியலாளர்களான ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, எம்.எம்.றியாஸ், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.மப்ரூர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்களும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபை எல்லையினுள் கடலில் இருந்து 65 மீட்டர் பிரதேசமானது குடியிருப்புகளுக்கும் கட்டுமானங்களுக்கும் தடை செய்யப்பட்ட வலயமாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருந்ததுடன் இப்பிரதேசமானது பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்திற்கு உரித்தாக்கப்பட்டது.

இதன் பிரகாரம் சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த இப்பிரதேச மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டிருப்பதனால் இப்பிரதேசத்தில் குடியிருப்புகளுக்கோ வேறு தேவைகளுக்காக கட்டுமானங்களை அமைப்பதற்கோ எவருக்கும் உரித்து இல்லை எனவும் ஏதேனும் தேவைக்காக இப்பகுதியிலுள்ள காணியை எவரும் பயன்படுத்த வேண்டுமாயின் கரையோரம் பேணல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இப்பகுதியில் பலர் குடியிருப்பதுடன் கட்டுமானங்களையும் அமைத்திருப்பதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இவர்களில் சிலர் தமக்கு மாற்று வீடு கிடைக்கவில்லை எனக் கூறுவதாகவும் இன்னும் சிலர் வேறு வேறு காரணங்களைக் கூறுவதாகவும் கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை சிலர் இப்பகுதியிலுள்ள நிலங்களை விற்பனை செய்தும் உள்ளனர். எனினும் அவை வாங்கியவர்களுக்கு சொந்தமாகாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எவ்வாறாயினும் முதற்கட்டமாக கடற்கரை வீதியில் இருந்து கடல் பக்கமாக சுமார் 25 மீட்டர் பரப்பைக் கொண்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள், வாடிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது எனவும் முதற்கட்டமாக கரையோரம் பேணல் திணைக்களத்தினால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கால அவகாசம் வழங்கி, சிவப்பு அறிவித்தலை விடுப்பது எனவும் உரிய காலப்பகுதியினுள் கட்டிடங்களை அகற்றாத நபர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கரையோர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இக்குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை பிணையில் விடுவிக்க நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் மேல் நீதிமன்றத்தின் மூலமே அவர் பிணை கோர முடியும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இக்கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் திறந்த வெளியாக மாற்றி, அழகுபடுத்தல், பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களை அமைத்தல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவதுடன் கடற்கரை வீதியை அகலமாக்குவதற்கும் அவசர நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வலியுறுத்தினார்.

இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நிதியொதுக்கீடு செய்ய முன்வந்திருப்பதாகவும் இதற்கான திட்ட முன்மொழிவு, நில அளவை மற்றும் வரைபடங்கள் துரிதமாக தயாரிக்கப்பட்டு, ஆரம்பப் பணிகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதுடன் பொறியியலாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இத்திட்டத்திற்காக குறித்த கடற்கரைப் பகுதி முழுவதிலுமுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அவசரமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டதுடன் இது விடயத்தில் எவரது செல்வாக்கிற்கும் இடமளிக்காமல் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டுடன் இத்தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை, வாடிகள் மற்றும் உணவகங்கள் வைத்திருந்த நபர்களுக்கு மாத்திரம் அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கடற்கரையின் சில இடங்களில் மாத்திரம் கொத்தணி அடிப்படையில் அத்தொழில்களுக்கான இடங்களை ஒதுக்கிக் கொடுப்பது எனவும் சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டிருப்பதனால் குடியிருப்புகளுக்கோ வேறு தேவைகளுக்கோ இப்பகுதியில் எக்காரணம் கொண்டும் இடமொதுக்கிக் கொடுப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :