சாய்ந்தமருது - பெரிய நீலாவணை கடற்கரையை அழகுபடுத்தி பூங்காக்கள், நடைபாதைகள், உணவகத் தொகுதிகள் அமைக்க ஏற்பாடு



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கடற்கரையை அழகுபடுத்தி, பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் உணவகத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.

கல்முனை மாநகர கரையோர அபிவிருத்தி திட்டமிடல் குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை (21) மாநகர சபையின் முதல்வர் செயலகத்தில் நடைபெற்றபோது இவ்வேலைத்திட்டம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர்களான ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, எம்.ஐ.எம்.றியாஸ், நில அளவையாளர் எம்.எம்.இப்ராஹிம், கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ.மப்ரூர், நகர அபிவிருத்தி அதிகாரி சபையின் திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.எம்.முஸ்தாக், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.ஐயூப், ஐ.எம்.ஜௌபர், மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌசாத், பட வரைஞர்களான ஏ.எல்.முக்ஸித், எம்.என்.எம்.மின்ஹாஜ், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, எம்.ஏ.சப்ராஸ் நிலாம், ஏ.எல்.எம்.ஆஷிர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தில் உள்ளடங்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்து கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக முன்னெடுக்கப்பட வேண்டிய பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன் இவற்றுக்கான நில அளவை செய்தல், வரைபடங்கள் தயாரிப்பு மற்றும் இதர பணிகளை முன்னெடுக்கும் பொறுப்புகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இத்திட்டத்தினுள் சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா, கல்முனை சிறுவர் பூங்கா, மருதமுனை சிறுவர் பூங்கா என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன் சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கடற்கரைப் பகுதியின் இன்னும் சில இடங்களில் பொது மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப் பூங்காக்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை வீதியை அகலப்படுத்தி விஸ்தரித்தல், நடைபாதைகள் அமைத்தல், வாகனத் தரிப்பிடங்கள் அமைத்தல், மருதூர் சதுக்கம் உட்பட சாய்ந்தமருது முகத்துவாரப் பகுதியின் இரு பக்கங்களையும் அழகுபடுத்தல், ஒரே கூரையின் கீழ் பல உணவகங்கள் இயங்குவதற்கான கட்டிடத்தொகுதிகள் அமைத்தல், அவ்வாறே ஒரே இடத்தில் அனைத்து வாடிகளும் செயற்படுவதற்கான கட்டிடத் தொகுதிகள் அமைத்தல் என பல்வேறு அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறன.

இதற்காக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் கடற்கரை வீதிக்கு கிழக்குப் பக்கமாகவுள்ள கடற்கரைப் பகுதியிலுள்ள கட்டுமானங்கள் அனைத்தையும் அவசரமாக அகற்றுதல், மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டிய வாடிகள் மற்றும் உணவகங்கள் நடத்துவோரின் விபரங்களை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்களும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இதன்போது வழங்கப்பட்டன.

உரிய காலப்பகுதியினுள் கட்டுமானங்களை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறும் நபர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இது விடயத்திலும் யாராக இருந்தாலும் எந்த அரசியல், தனிப்பட்ட செல்வாக்குகளுக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டிருப்பதனால் முந்திய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன்படி கடற்கரைப் பகுதியில் குடியிருப்பதற்கோ வேறு கட்டுமானங்களுக்கோ எவ்வித அனுமதியும் வழங்குவதில்லை என்ற இறுக்கமான தீர்மானத்தை கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கண்டிப்பாக அமுல்நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :