தடுப்பூசி வழங்காமல் புறக்கணிக்கப்பட்ட கல்முனையில் கொரோனா தீவிரம்;முதல்வர் ஏ.எம்.றகீப் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால், அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவசரமாக கொவிட் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர் இன்று (29) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

எமது நாட்டில் தீவிரமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

இதன் ஓர் அங்கமாக நீங்கள் மேற்கொண்ட முயற்சியினால் இம்மாத முற்பகுதியில் மாத்திரம் 04 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டு, சுகாதார அமைச்சினால் அவை நாடு பூராகவும் மாவட்ட மட்டத்தில் ஏக காலத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டு, தேவையுடைய மக்களுக்கு வெற்றிகரமாக ஏற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் கிழக்கு மாகாணத்தின் 03 சுகாதாரப் பிராந்தியங்களுக்கும் 75,000 சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் கல்முனைப் பிராந்தியம் உள்வாங்கப்படாமல் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இப்புறக்கணிப்பானது இப்பகுதி மக்களிடையே பாரிய விமர்சனங்களையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிது. எனினும் அப்போது இங்கு கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைந்தளவில் இருந்தமையினாலேயே கல்முனைப் பிராந்தியத்திற்கு தடுப்பூசி கிடைக்கவில்லையென பிராந்திய சுகாதாரத் தரப்பினரால் கூறப்பட்டது.

அதேவேளை, எமது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் இவ்விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். அதன்போது அடுத்த கட்டத்தில் கல்முனைப் பிராந்தியத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கல்முனை மாநகர பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதுடன் மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. தற்போது கல்முனையின் இந்த நிலைவரமானது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்பகுதியில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியவர்களுக்கு அது கிடைக்காமல் தவிர்க்கப்பட்டதன் விளைவே இத்தொற்று பரவல் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகிறது.

ஆகையினால், இனியும் தாமதிக்காமல் இத்தொற்றில் இருந்து இப்பகுதி மக்களை பாதுகாப்பதற்காக கல்முனை மாநகர சபைக்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைப்பதற்கு அவசரமாக ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றேன்- என முதல்வர் ஏ.எம்.றகீப் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :