நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுக்குமத்தியில் அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசமக்கள் கொடிய வரட்சியை எதிர்காண்டுள்ளார்கள்.
குறிப்பாக திருக்கோவில் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாமம், காஞ்சிரன்குடா ,திருக்கோவில்.4 போன்ற கிராமங்கள் வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள 1291 குடும்பங்களைச் சேர்ந்த 4265 பேர் தண்ணீருக்காகவும் ,சமகால கொரோனாவால் உணவுக்காகவும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்தில் உலருணவு நிவாரணப்பணியில் ஈடுபட்டுவரும் " பேரிடர்கால பெருந்துயர் துடைக்கும்" அணியின் தலைவரும்சமுகசெயற்பாட்டாளருமான தவிசாளர் கி.ஜெயசிறில் வரட்சிநிலையை கேள்வியுற்று, அங்கு நேரடியாக விஜயம்செய்து உலருணவு விநியோகத்தை கட்டம்கட்டமாக ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை, வரட்சியையொட்டி திருக்கோவில் பிரதேச செயலகத்தால் வவுசரில் குடிதண்ணீர் விநியோகிக்கும் பணி குறித்த கிராமங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனிடம் கேட்டபோது:
வழமையாக இக்காலகட்டத்தில் குறித்த பிரதேசங்கள் வரட்சிக்குள்ளாவது வழமை.
குறிப்பாக எமது பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான தங்கவேலாயுதபுரத்தில் 208குடும்பங்களும், கஞ்சிகுடிச்சாற்றில் 190குடும்பங்களும் , சாகாமத்தில் 283குடும்பங்களும் ,காஞ்சிரன்குடாவில் 160குடும்பங்களும், திருக்கோவில்.4 இல் 450குடும்பங்களும் வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு எமது அனர்த்த முகாமைத்துவப்பிரிவினரால் இரண்டு வவுசர்களில் நாளாந்தம் 12ஆயிரம் லீற்றர் தண்ணீர் வழங்கப்பட்டுவருகின்றது. வாரத்திற்கு 4தடவைகள் வீதம் குறித்த 4கிராமங்களுக்கும் வவுசரில் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. போதாதவிடத்து பிரதேசசபையும் வழங்கிவருகிறது.
கொரோனா காலகட்டமென்பதால் அந்த மக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அரச நிவாரணம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமும் அவ்வப்போது சில உதவிகளை செய்துவருகிறோம் என்றார்.
அங்குள்ள பயிர்பச்சைகள் வரட்சியால் மஞ்சளாகி வருகின்றன. அவர்களது வாழ்வாதாரம் முற்றாக இழக்கப்பட்டிருக்கிறது.கால்நடைகள் தீவனத்திற்காகவும் குடிதண்ணீருக்காகவும் அலைகின்றதையும் காணக்கூடியதாயுள்ளது.
0 comments :
Post a Comment