முஸ்லிம் சமூக, விஞ்ஞானக் கல்விக்கு உழைத்த அதிபர் ஏ.சீ.எம். செய்ர்தீன்



என்.எம்.அமீன்-
நாட்டின் கல்வித் துறைக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் விஞ்ஞானக் கல்வி எழுச்சிக்கு அரும் பங்களிப்பு செய்த கல்விமானும் நிர்வாகியுமான மாத்தளை அல்ஹாஜ் ஏ.சீ.எம் செய்ர்தீன் ஜுன் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். அவரது ஜனாஸா வெள்ளியன்று ஜும்ஆவுக்கு முன் குடும்பத்தவர்கள் சிலரது பிரசன்னத்துடன் ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அவரால் நாடு முழுவதிலும் உருவாக்கப்பட்டு இன்று உயர் நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு தமது இறுதி மரியாதைச் செலுத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
மாத்தளையில் இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்து பின்பு வர்த்தகராகச் செயற்பட்ட அப்துல் காதரின் மகனாகப் பிறந்த மர்ஹும் செய்ர்தீன், மாத்தளை சாஹிராக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இந்தியா சென்று சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர் கல்வியைப் பெற்று, விஞ்ஞானப் பட்டதாரியாக பட்டம் பெற்று, நாடு திரும்பியதும் இப்போது பவளவிழாக் காணும் அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக 1960இல் நியமிக்கப்பட்டார்.

இன்றும் அக்கரைப்பற்று மக்களால் நன்றியுடன் நினைவு கூறப்படும் இவர், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் விஞ்ஞான துறையை ஆரம்பிப்பதற்கு அப்போதைய அதிபர் ஐ. இப்றாலெப்பையுடன் இவர் முன்னோடியாகச் செயற்பட்டுள்ளார். கலைத்துறை மட்டும் இருந்த இப்பாடசாலையில் பலரது எதிர்ப்புக்கு மத்தியில் விஞ்ஞானப் பிரிவினை ஆரம்பித்தார். இன்று அக்கரைப்பற்றில் சுமார் 40 டாக்டர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 4 பேர் வைத்திய நிபுணர்களாகவும் இருக்கின்றார்கள்.
இது தவிர, பல பொறியியலாளர்களும் இருக்கிறார்கள். இவர்களது உருவாக்கத்தின் முன்னோடி செய்ர்தீன் சேர் என அவரது மாணவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற கமத்தொழில் உத்தியோகத்தர் அக்கரைப்பற்று பிரமுகர் மீராசாஹிப் தெரிவித்தார். நன்றிக்கடனாக மர்ஹும் செய்ர்தீனின் மறைவு குறித்து அக்கரைப்பற்றில் விசேட பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மீராசாஹிப் தெரிவித்தார்.

மர்ஹும் செய்ர்தீன் நகரப் புறத்திலிருந்து சென்ற போதும் பிரதேச மக்களுடன் ஒன்றாகக் கலந்து பாடசாலையின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளை இன்றும் பிரதேச மூத்தவர்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

பாடசாலைக்கு வேலி எதுவும் இல்லாத நிலையில் மாணவர்களுடன் காட்டுக்குச் சென்று மரங்களை வெட்டி வந்து வேலி போட்டது பற்றி இன்று மக்கள் நினைவு கூர்கின்றனர். மரங்களை வெட்டி எடுத்து வரும் போது பொலிஸாரால் மாணவர்கள் கைது செய்யப்பட்டபோது அக்கரைப்பற்றிலிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றினூடாக காட்டு வழியாக, அப்போது அம்பாறையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்து பின்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த, தனது மூத்த சகோதரர் ஏ.பி.ஏ.கபூரின் உதவியைப் பெற்று பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பற்றியும் மக்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர்.
அக்கரைப்பற்றில் இருந்து மாத்தளை சாஹிராவுக்கு மாற்றம் பெற்று வந்த இவர், அங்கு அதிபராக பணி புரிந்த பின், மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்று பல வருடங்களாகப் பணி புரிந்தார். இவர் அதிபராக இருக்கும் போது நான் க.பொ.த உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். கல்வித்துறைக்கு மேலதிகமாக மாணவர்கள் மத்தியில் ஒழுக்க மேம்பாட்டினை வளர்ப்பதற்கு கரிசனையுடன் செயற்பட்டார்.
கலைத்துறையில் மட்டும் உயர்வகுப்பு இருந்த மாவனல்லை ஸாஹிராவின் விஞ்ஞான வகுப்புக்களை இவர் ஆரம்பித்தார். மாவனல்லை ஸாஹிரா விலிருந்து பல விஞ்ஞானப் பட்டதாரிகள், டாக்டர்கள், பொறியியலாளர்கள் உருவாகுவதற்கு இவர் முன்னோடியாக இருந்தார்.

இவருக்கு முன் அதிபராகப் பணிபுரிந்த மர்ஹும் எம்.எஸ்.ஏ வாஹித், இக்கல்லூரியில் உருவாக்கிக் கட்டமைப்பினை முன்னெடுத்து, இலங்கையிலே முன்னணிக் கல்லூரியாக மாற்றுவதற்கு மர்ஹும் செய்ர்தீன் ஆற்றிய பங்களிப்பினை மாவனல்லை மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். சாஹிரா வரலாற்றில் இந்த இரவு அதிபர்களும் பெயர்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.

மாவனல்லை ஸாஹிராவில் பணிபுரியும் போது அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் அழைப்பின் பேரில் கம்பளை சாஹிராவின் அதிபராகப பதவியேற்றார்.

முன்னாள் அமைச்சர் எம்.எச். முஹம்மத் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, இவர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை நிர்வாக சேவைக்கு வெளியாக இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், மூன்று வருடங்களாக இப்பதவி வகித்தபின் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டார்.

முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளராகப் பணிபுரியும் போது இவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பதில் அதிபராக நியமிக்கப்பட்டார். ஏ.ரி.அலஸ் கல்லூரிப் பணிப்பாளராக பணிபுரிந்த போது சாஹிராவில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போதே இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது. அங்கு காணப்பட்ட கொந்தளிப்பு நிலை காரணமாக அவரால் சிறிது காலமே அதிபராகப் பணிபுரிய முடிந்தது என அப்போதைய பிரதி அதிபர் ஏ.எம்.நஹியா தெரிவித்தார். மர்ஹும் செய்ர்தீன் நல்ல பண்புமிக்க ஒருவர் என்றும் சமூகத்தைப் பற்றி அக்கறைமிக்கவராகவே இருந்தார். அவரால் சாஹிராவில் தொடர்ந்து அதிபராக இருக்க முடியாமல் போனது துரதிஷ்டமே என நஹியா தெரிவிக்கிறார்.

றெஹான் என்பவரை கரம் பிடித்த இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இரு ஆண் மக்களான அஹமட் ருஷ்டி, செய்யது உமர் ஆகியோர் அமெரிக்காவில் ஐ.ரீ. நிபுணர்களாக இருக்கின்றனர்.

கொழும்பில் வைத்திய நிபுணராகப் பணிபுரியும் தனது ஒரே மகளை அதிபர் செய்ர்தீன் ஒரு வைத்தியராக்க வேண்டும். அதிலும் மகப்பேற்று வைத்தியராக்க வேண்டும் என்பதில் தீவிர கரிசனை காட்டியுள்ளார். முஸ்லிம் சமூகத்தில் பெண் மகப்பேற்று டாக்டர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கும் நிலையில், இவர் தனது மகளை இத்துறையில் படிப்பித்தார். எனது தந்தை என்னை படிப்பிப்பதில் கூடிய ஆர்வமும் அக்கறையும் காட்டினார். அதற்காக பெரும் தியாகங்களைச் செய்தார். மாத்தளையில் இருந்து கண்டிக்கு தினமும் என்னை தனது வாகனத்தில் விசேட வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார். படிக்கும்போது என்னை குடும்ப நிகழ்வு ஒன்றுக்கும் அவர் அழைத்துச் செல்லவில்லை. அது படிப்புக்குத் தடையாக அமையலாம் என்று கூறி கல்வியிலே கவனம் செலுத்துமாறு எப்போதும் புத்திமதி கூறுவார். தன் தந்தையின் கனவை நனவாக்கி, இன்று மகப்பேற்று வைத்திய நிபுணராகப் பணிபுரிந்து, நாட்டுக்கும் குறிப்பாக சமூகத்துக்கும் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. எனது தந்தையார் குடும்பத்தின் கல்வியில் போன்று சமூகத்தின் கல்வியிலும் கூடுதலான அக்கறை காட்டினார். அவரால் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள், தொழில் வல்லுனர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பல தரப்பட்டோர் நாட்டில் உருவாகி இருக்கின்றனர்.

இறுதிக் காலத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டிய இவர், மாத்தளை மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இவர் போட்டியிட்ட போதும் அவருக்கு வெற்றி வாய்ப்புக் கிடைக்கவில்லை.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து, தனது மகளுடன் வாழ்ந்து வந்த இவர், மகளுடன் நாடு திரும்பி, கொழும்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நோய்வாய்ப்பட்டு சில தினங்களில் இறைவனடி எய்தினார். அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :