யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்தின் 2019 / 2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட - 46 ஆம் அணி மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் விஞ்ஞானமாணி கற்கை நெறியைத் தொடருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டு, பதிவு செய்த மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு இன்றையதினம் திங்கட்கிழமை இணைய வழியாக - நிகழ் நிலையில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் துணைவேந்நதர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பல்கலைக்கழக ஆங்கில மொழி கற்கைகள் நிலையத்தின் தலைவர், கணினி அலகின் தலைவர், நலச்சேவைகள் பணிப்பாளர், தொழில் வழிகாட்டல் அலகின் பணிப்பாளர் மற்றும் சட்ட நிறைவேற்று அதிகாரி ஆகியோர் புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் உரைகளை வழங்கினர்.
விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் நேரடியாகவும், நிகழ் நிலையிலும் கலந்து கொண்டனர்.
பதிவு செய்த சுமார் 417 புதுமுக மாணவர்கள் நிகழ் நிலை வாயிலாக இணைந்து கொண்டனர். இவர்களுக்கான கணினி மற்றும் ஆங்கில மொழி விருத்தி வகுப்புகள் திசைமுகப்படுத்தல் செயற்பாடுகள் இணைய வழியாக - நிகழ் நிலையில் இன்று முதல் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment