முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ராஜதந்திரம் மெச்சத்தக்கது.-முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு



காலத்திற்குக் காலம் நிலவிய வேறுபட்ட அரசியல் , சமூக சூழ்நிலைகளின் போது இந்திய மத்திய அரசுக்கும், தமிழக மாநில அரசுக்கும் இடையிலான இழுபறிகளை இயன்றவரை குறைத்து, அவற்றிற்கிடையிலான சமநிலையைச் சரிவரப் பேணுவதற்கு மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கையாண்ட இராஜதந்திர அணுகுமுறைகள் மெச்சத்தக்கவையென அன்னாரின் 98ஆவது ஜனன தினத்தின் போது சுட்டிக்காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆருயிர்ப் புதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் , இந்நாள் தமிழக முதல்வராக அந்தப் பதவியை அலங்கரித்துவரும் வேளையில், இந்த நினைவுச் செய்தியை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
சென்னையில் நடந்த எழுச்சி விழாவில் மறைந்த கலைஞரை நினைவு கூர்ந்து அங்கு நான் வந்து ஆற்றிய உரை இன்றும் நினைவில் நிறைந்தி ருக்கின்றது.

தமிழ் நாடு முதலமைச்சராக இரண்டு தசாப்த காலங்கள் ,ஐந்து தடவைகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கும் போது, இளமை தொட்டே பல்துறை ஆளுமைமிக்கவராக அவர் பிரகாசித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெரியார் ஈ.வே.ராமசாமியின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டும், திராவிட சிந்தனைப் போக்கில் பற்றுறுதி கொண்டும் விளங்கிய கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரையின் நட்பின் பயனாக நன்கு புடம் போடப்பட்டவராக சம காலத்திலேயே திரைக்கதை வசன கர்த்தாவாகவும், அரசியல்வாதியாகவும் மிளிர்ந்திருக்கின்றார்.

எழுத்தாற்றலும், நாவன்மையும் ஒரு சேர வாய்க்கப் பெற்றிருந்த கலைஞர் , மக்கள் மனங்களை வென்று வாழ்ந்தவர் என்பதால் தேர்தல்களில் ஒப்பாரும், மிக்காரும் இன்றி நெடுகிலும் வெற்றிவாகை சூடினார்.

சட்டசபை உறுப்பினராக, அமைச்சராக, எதிர்கட்சித் தலைவராக, முதலமைச்சராக என எல்லா படித்தரங்களிலும் அவர் கால்பதித்திருக்கின்றார்.தி.மு.கா வின் வளர்ச்சியோடு அன்னார் இரண்டறக் கலந்திருந்தார்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்ட பழுத்த அனுபவம் அவருக்கு வாய்த்தி ருந்தது.தமிழகத்தில் மட்டுமல்லாது, அவர் அண்டை நாடான எமது இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் மீதும் அதிக கரிசணை கொண்டிருந்தார் .அவ்வாறே முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய அரசியல் கட்சிகளுடனும் அவர் நல்லுறவைப் பேணிவந்தார்.

மறைந்த கலைஞரின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் இனிய நெஞ்சங்களுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :