மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி வலியுறுத்து



யாழ் லக்சன்-
மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு எதிர் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் உழைக்கும் மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மீனவர்கள் உள்ளிட்ட கடற்தொழிலாளர்கள் அண்மைக்காலமாக வாழ்வாதாரம் சார்ந்து பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

அதேவேளை நாட்டில் முப்பது வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த கோர யுத்தம் நிறைவுக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீள கட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் அதி நவீன ரோலர் படகுகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற கடல் வளக் கொள்ளை இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் ஒரு பகுதியினராகிய மீனவ சமூகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது.

மேல்மாகாணம் சார்ந்த கடல் பிராந்தியம் எதிர்நோக்கும் பிர்ச்சனைகள் பூதாகரமானதாக மாறிவருகின்றது. குறிப்பாக துறைமுக நகர பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்காக ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட கடற்பரப்பு மண்ணால் நிரப்பப்பட்டது. அதற்கான மணலும் கொழும்பு தொடங்கி நீர்கொழும்பு வரையான கடற்படுக்கையில் பல்லாயிரக்கணக்கான கியூபிக் மணல் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களின் மீள் உற்பத்திக்கான இடங்கள் அழிக்கப்பட்டன. தற்போது மணல் அகழப்பட்ட மேற்கு கரையில் ஆங்காங்கே மணலறிப்பு ஏற்பட்டு வருகிறது.

இது மேற்குக்கரையை ஆதாரமாகக் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் ஆக்கியுள்ளது. ஏலவே கடல் வள அழிவையும் மீன்பிடி தொழிலில் நளிவையும் மீனவர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ,, X-Press Feeders நிறுவனத்தின் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் பல மெற்றிக் டன்கள் ஆபத்து மிக்க இரசாயனங்களுடன் தீப்பற்றி ஏரிந்து முற்றாக கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த மிகவும் நச்சு தன்மைமிக்க இரசாயன பொருட்கள் கடற்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் பிளாஸ்டிக் மணிகள் போன்றன கடலில் கலந்தன. இது கடல் கடல் சார் சூழலுக்கும் உயிரினங்களுக்கும் கரையோர வளங்களுக்கும் பாரிய அழிவை உண்டாக்கி வருவதுடன் நாட்டின் வட கிழக்கு கடற்கரை வரை கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. கப்பலில் இரசாயன பொருள் கசிவு உள்ளதை அறிந்தும் துரிதமாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் விரைந்து செயற்பட முடியாமல் போனதற்கு இலங்கை அரசின் பொறுப்பற்றத்தனமும் அசமந்த போக்கும் கையாலாகாதனமுமே காரணம்.

தற்போது எக்ஸ்பிரஸ் கப்பலினால் கடற்கரைகளில் வைக்கப்பட்டுள்ள வள்ளங்கள்இ மீன்பிடி வலைகள் உபகரணங்கள் இரசாயன கழிவு கரையொதுங்கியதன் காரணமாக தொடர்ந்து பயன்படுத்த முடியாதவாறு பழுதடைந்து வருகின்றது. இந்நிலையில்இ கொரோனா பயணத்தடை பொருளாதார முடக்கம் என்பவற்றோடு தற்போதைய எரிபொருள் விலையேற்றம் ஏக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் என்பன காரணமாக மேற்கு கடல் பிரதேச கடற்தொழிலாளர்கள் கடந்த ஒருமாதமாக தமது தொழிலில் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீனவத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஏற்கனவே நலிந்த நிலையில் இருந்தஇபல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை இன்று சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக மாறியுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், அழிவடைந்துள்ள கடற்வளத்தை மீளப்புதுப்பிக்க விஞ்ஞான பூர்வமான திட்டங்களை அமுல்படுத்தவும் அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவ்வறிக்கையில் எமது நாட்டின் கடல் வளத்திற்கும் மீனவ சமூகத்திற்கும் அரசின் மக்கள் விரோதஇ சூழலுக்கு எதிரான பொருளாதார கட்டுமானங்களால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் தொடர்பில் அரசியல் கட்சிகளும் சூழல் ஆர்வலர்களும் வெகுஜன அமைப்புக்களும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதே வேளை மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தையும் கடல் வளத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவற்றை கண்டு கொள்ளாமல் ஊதாசீனப்படுத்தி வரும் கோட்டபாய- மஹிந்த அரசாங்கம் பயணத்தடை தனிமைப்படுத்தல் சட்டம் என்ற திரைக்குள் ஒழிந்துக்கொண்டு தமது அரசியல் பொருளாதார திட்டங்களை கபடத்தனமாக அமுல்படுத்தியும், அதற்கு தேவையான மக்கள் விரோத சட்டங்களையும் உருவாக்கி வருகிறது. அதேவேளை தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்களின் குரல்களை நசுக்கவும் மக்கள் சார்பாகச் செயற்படும் அமைப்புகளை அச்சுறுத்தவும் தனிமைப்படுத்தல் சட்டங்களை பயன்படுத்தி வருகின்றது. இதன் பின்னணியில் கொழும்பு மோதரை டீ-லாசல் மீனவ கிராமத்தில் இம்மாதம் 20.06.2021ம் திகதி மீனவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போலீஸ் தாக்குதலையும் அடாவடித்தனத்தையும் அந்த ஆர்ப்பாட்டதிற்கு ஆதரவு வழங்க தமது தோழர்களுடன் சென்ற முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொடவை மோதர போலீசார் அராஜகமாக கைது செய்ய முயற்சித்ததையும் தமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியத்துடனும் துனிச்சலுடனும் முன்வரவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :