மாகாணசபை வைத்தியசாலைகள் தொடர்பில் சுகாதார அமைச்சரின் கருத்துத் தொடர்பில் ரெலோ கண்டனம்



யாழ் லக்சன்-
மாகாண சபை வைத்தியசாலைகள் தொடர்பில் சுகாதார அமைச்சரின் கருத்துத் தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்றைய பாராளுமன்ற உரையிலே மாகாண சபை வைத்தியசாலைகளை கையகப்படுத்த மாட்டோம் ஆனால் நிதியும் ஒதுக்க மாட்டோம் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர் மாகாணசபை வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் மாத்திரமே நிதி வழங்குவோம் என்ற மிரட்டல் மூலம் மாகாணசபை அதிகாரங்களை பணயம் வைக்க முயல்கிறார். இது ஒரு அரசியல் குற்றம் என்பதை அவர் உணரத் தவறி இருக்கிறார்.

அமைச்சரின் கூற்று தற்போது அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அரசியல் சாசனத்தின் ஊடாகவும் மாகாணசபை சட்டத்தின் மூலமாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் மாகாணசபையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வைத்தியசாலைகள், மத்திய அரசினால் கையகப்படுத்துவது அரசியல் யாப்பை மீறும் செயலாகும். மாகாணசபையின் ஒப்புதலுடன்தான் இதை நடைமுறைப்படுத்த முடியும். மாறாக மாகாணசபைகள் இயங்கு நிலையில் இல்லாத சூழலில் கையகப் படுத்துவது தவறானதாகும்.

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட் அதிகாரங்கள் மக்களின் உரிமை என்பதையும் மத்திய அரசின் திறைசேரி நிதியும் மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்டதால் மக்களுக்கே உரித்தானது என்பதை மறந்துவிட்டார் அமைச்சர். நிதி ஒதுக்கீடு என்பதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் அடிப்படையில் தான் என்பதையும் மாகாணசபைக்குரிய வைத்தியசாலைகளால் பயனடைவது திறைசேரிக்கு வரிசெலுத்தும் மக்களே என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஆகவே நிதி ஒதுக்கீடு என்பது பயனாளிகளின் நலன்கருதி இருக்க வேண்டுமே தவிர அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கு மிரட்டுகிற அல்லது பணயம் வைக்க கையாளுவது அரசியல் குற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாகாணசபையின் அதிகாரத்திற்குள் வைத்தியசாலைகள் இயங்கும் பொழுது கூட மத்திய அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கி அவற்றின் தரத்தை உயர்த்த முடியும். அப்படி பல வைத்தியசாலைகள் சிறந்த முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி அடைந்த நிலையில் பல மாகாணங்களில் காணப்படுவதையும் அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும்.

அண்மையில் ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1ல் குறிப்பிடப்பட்ட சரத்துக்களின் பிரகாரம் 13ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவைகளின் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்குவதை இலங்கை அரசு உறுதிப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீறும் செயலாக இதை நோக்குகிறோம். மாகாணசபைகளின் நிர்வாகத்தை குழப்பும் முகமாக அல்லது மிரட்டு முகமாக அமைச்சர் தெரிவித்த கூற்றினை மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாக கருதி ஐநா மனித உரிமைப் பேரவையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :