ஏறாவூர் பொதுமக்கள் வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஏறாவூரில் தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவற்காக வீதிக்கு வந்த சில பொதுமக்கள் பாதுகாப்புக்கடமையில் இருந்தவர்களால் வீதியில் இருகைகளையும் உயர்த்தி முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
இந்த நாடு ஜனநாயக நாடு. சட்டவாட்சி அமுலில் உள்ள நாடு. எனவே, எல்லாவற்றையும் சட்டரீதியாகவே அணுக வேண்டும். அதுவும் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அரசியலமைப்பு வாசகத்துக்கமைய எல்லோருக்கும் சட்டம் அமுல் படுத்த வேண்டும். சட்டம் பாரபட்சமாக அமுல்படுத்தப் படக்கூடாது என்பதையே இந்த வாசகம் எடுத்துக்காட்டுகின்றது.
ஏறாவூர் சம்பவம் சட்டத்துக்கு புறம்பானது. மனிதாபிமானமற்றது. ஒவ்வொருவருக்கும் சுய கௌரவம் உள்ளது. வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட இச்சம்பவம் அவர்களது சுயகௌரவத்தை கொச்சைப்படுத்துகின்றது.
பயணத்தடை அமுலில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நாடு முழுவதும் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் நடமாடுகின்றன. அதேபோல பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வீதிகளில் பயணிப்பதை நாம் காண்கிறோம்.
இந்நிலையில் ஏறாவூரில் தமது அன்றாடத் தேவையை நிறைவேற்ற வந்த பொதுமக்களை மட்டும் வதைக்கின்ற செயல் நாட்டில் நியாயமான சட்டவாட்சி இல்லை என்பதை உறுதிப் படுத்துகின்றது. சட்டம் பொதுவாக எல்லோருக்கும் தான் அமுல் படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த நாட்டில் சட்டம் பாரபட்சமாக அமுல்படுத்தப்படுவதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
நாட்டில் நீதிமன்றக் கட்டமைப்பு மிகத் தெளிவாக செயற்படுகின்ற நிலையில் சட்டத்தை தமது கையில் எடுத்து தண்டனை வழங்கும் அதிகாரத்தை இந்த அரசு காவல் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கியுள்ளமையையே இது எடுத்துக் காட்டுகின்றது. அரசின் பக்கச்சார்பான இந்தச் சர்வாதிகாரப் போக்கு குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த அப்பாவி மக்கள் இவ்வாறு வீதியில் தண்டிக்கப்பட்ட போதும் கூட 20 முதல் அரசுக்கு புதிதாக ஆதரவு தெரிவித்து வருகின்றவர்கள் இது குறித்து மௌனம் சாதிப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.
அவர்களுக்கு இந்த மக்கள மீது உண்மையான அன்பு இருக்குமாயின் சட்டத்துக்கு புறம்பாக இந்த நடவடிக்கைகயில் ஈடுபட்டவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment