இனக்கலவரத்தை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட முனைபவர்களின் நாடகமே இந்த காணி அபகரிப்பு விடயம். ஆங்கிலேயர் காலத்தின் வரைபடம் முதல் எனது (தனிநபர்) காணி தான் என்பதை நிரூபிக்கும் உறுதிகள் வரை சர்ச்சைக்குள்ளாகியுள்ள காணி விடயத்தில் உள்ளது என சுலைமா லெப்பை ஹமீட் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை உப பிரதேச செயலக கிராம நிலைதாரியை தாக்கியதாக கண்டன ஆர்ப்பாட்டங்களும், வழக்கு தாக்குதல்களும், ஊடக செய்திகளுமாக இருக்கும் கல்முனை இஸ்லாமாபாத் காணிவிடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (06) மாலை கலந்துகொண்டு பேசும் போதே சர்ச்சைக்குள்ளாகியுள்ள காணி உரிமையாளரான சுலைமா லெப்பை ஹமீட் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குறித்த நபருக்கும் எனக்கும் இடையில் சம்பாஷனை நடந்து கொண்டிருந்த போது வீதியால் சென்றவர் அவரை தாக்கியதாக பொய்யான குற்றசாட்டை முன்வைத்து கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்து வலது குறைந்த அந்த சகோதரரை 24 மணித்தியாலயங்களுக்கு மேலாக கம்பி கூட்டுக்குள் வைத்துள்ளார்கள். இது அநியாயமான ஒன்றாகும். தகவலறியும் சட்டம் முதல் இலங்கை அரசின் சகல வழிகளிலும் என்னுடைய காணிதான் அந்த காணி என்பதற்கான சகல ஆதாரங்களையும் வைத்துள்ளேன். சமூக செயற்பாடுகளில் முன்நிற்கும் என்னுடைய ஆளுமையை கேள்விக்குட்படுத்தி என்னை முடக்கும் விதமாகவே இந்த போலியான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த காணி அமைந்திருக்கும் கல்முனை - 01 க்கு பொறுப்பான கிராம சேவக பிரிவின் அதிகாரி டீ .ஆர். அலாவுதீன், வாடிவீட்டு வீதி, வயல், கடல், கல்முனை நகர் போன்றவற்றை எல்லைகளாக கொண்டுள்ள இஸ்லாமாபாத், கல்முனை நகர் போன்ற பிரிவுகளுக்கு கிராம நிலதாரியாக இருக்கும் எனக்கு எனது பிரிவை பற்றி நன்றாக தெரியும். 1989 காலப்பகுதிக்கு முன்னர் ஒன்றாக இருந்த கல்முனை பிரதேச செயலகம் பின்னாட்களில் சில நபர்களினால் மற்றுமொரு உப அலுவலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து பிரச்சினைகள் நீண்டுகொண்டே இருக்கிறது.
காலத்திற்கு காலம் வேறு பெயர்களை கொண்டு அழைத்தாலும், சரியான எல்லைகளோ அல்லது நிர்வாக முறைகளோ இல்லாத கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை 1சீ கிராம சேவகர் முறைகேடாக அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸில் நடவடிக்கைக்காக முறைப்பாடு செய்துள்ளேன். இது முதல் தடவையல்ல கடந்த காலங்களிலும் வாடி வீட்டு வீதியில் உள்ள தனிநபர் 13 பேருக்கு சொந்தமான காணிகளில் மாகாண காணி ஆணையாளரின் அனுமதியில்லாமல் அரச காணி அறிவித்தலை காட்சிப்படுத்தினார்கள். அந்த வழக்கும் இப்போது வரை விசாரணைக்காக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனது பிரதேச முஸ்லிங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியவர் நானே. வேறு பிரிவு கிராம சேவகர் அல்ல.
குறித்த காணி தொடர்பில் அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளோம். தனியார் காணி என்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் அரச காணி என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா? அரசியல் ஆதாயம் தேட அரசியல்வாதிகள் போடும் நாடகங்களே இவை. எங்கள் பிரதேச சகோதர்கள் இஸ்லாமிய வழியில் பொறுமையாக இருந்து இனக்கலவரமொன்றை தடுத்துள்ளார்கள் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த இஸ்லாமாபாத் முக்கியஸ்தரான எஸ்.எம். அபூபக்கர் கல்முனை மாநகர சபை உறுப்பினரான சந்திரசேகரம் ராஜன், பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், தமிழ் இளைஞர்கள், சில இனவாத நோக்கம் கொண்ட நிருபர்கள் என பலரும் அத்துமீறி எங்களுக்கு சொந்தமான காணிக்குள் தமிழர்களின் காணி என கூறிக்கொண்டு அட்டூழியம் செய்துள்ளார்கள். முழுமையாக அரசியலை நோக்காக கொண்டே இந்த காரியங்கள் நடக்கிறது. கல்முனை பிரதேச செயலக இழுபறி நிலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இல்லாது போனால் எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் சமூகம் மனம் நோக்கும் நிலை வரும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
0 comments :
Post a Comment