அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கொவிட் தொடர்பான நோயாளிகளின் தவறான நிருவாக நடைமுறைகள் மூலம் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அவரது செயற்பாடுகள், அவர்களின் நிருவாக முறைகேடுகள், நிருவாக அடக்குமுறைகள், தொடர்பிலும் கொரோனா உச்சகட்டத்தினால் ஏற்படபோகும் நிலைகள் தொடர்பில் அவருக்கு எடுத்துகூறியும் தயார் படுத்தலில் பின்தங்கிய நிலை காணப்பட்டதனால் அதனை கையாளுவதில் சிரமம் காணப்படுகிறது. இந்த பிராந்திய கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் போகும் என்பதை பலதடவைகள் வலியுறுத்தியும் அவர் ஏற்பாடுகள் செய்யாதமையை உணர்ந்து அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தோம். அதில் எவ்வித அரசியல் நோக்கங்களோ அல்லது பிரதேச வாதங்களோ இருக்கவில்லை என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் அங்கு கருத்து தெரிவித்த வைத்தியர்கள், 20 கட்டில்களுடன் கூடிய கொரோனா சிகிச்சை நிலையத்தை அமைக்க ஒரு வருடத்திற்கு முன்னர் ஆலோசனை வழங்கியும் இதுவரை அது அமைக்கப்படவில்லை. கொரோனாவை எதிர்கொள்ள நாங்கள் பின்தங்கிய நிலையிலையே இருக்கின்றோம். போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த பிராந்தியத்தில் முக்கிய வைத்தியசாலைகளில் ஒன்றான இந்த வைத்தியசாலை ஆரம்பத்தில் இருந்த வளங்களுடன் இயங்கிக் கொண்டிருப்பதுடன் விசேட வைத்திய நிபுணர்கள் இல்லாத குறை இருக்கிறது. மாத்திரமின்றி அவசர சிகிச்சை பிரிவிலும் எந்தவித ஆயத்தங்களுமில்லாத நிலையே தொடர்கிறது. இது தொடர்பில் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாத நிலையில் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தள்ளப்பட்டது.
வளப்பற்றாக்குறை மற்றும் விசேட நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக மிகமுக்கிய அறுவை சிகிச்சை செய்யமுடியாத நிலை உள்ளது. இப்படியான இழுபறி நிலைகளுக்கு வைத்திய அத்தியட்சகர் காரணமாக இருக்கிறார். அவருக்கு எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இது சம்பந்தமாக நாங்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளோம். இவற்றுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் போனால் நாடுதழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளோம். இதனை அரசியலாக்கியுள்ளதை வண்மையாக கண்டிக்கிறோம்.
சகல இன மருத்துவர்களுக்கும் சம உரிமை வழங்கி இலங்கையில் சக்திவாய்ந்த மிகப்பழமையான தொழிற்சங்கமாக இருக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த காலம் முதல் வினைத்திறனுடன் செயலாற்றும் இந்த சங்கத்தை உள்ளூர் அரசியல்வாதிகள் இனவாத, பிரதேச வாத நோக்கோடு வழிநடத்த முனைவதை வண்மையாக கண்டிக்கிறோம் என்றார்கள்.
0 comments :
Post a Comment