மறைந்த சட்டத்தரணி சம்சுதீன் தூர நோக்குடன் செயலாற்றியவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்



மூகத்தைப் பற்றி தூரநோக்குடன் சிந்தித்து,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்தில் ஸ்தாபகப் பெருந் தலைவருக்கு துணை புரிந்தவர்களில் மறைந்த சட்டத்தரணி எம்.ஐ,சம்சுதீன் குறிப்பிடத்தக்க ஒருவர் என அவரது மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , பாராளுமன்ற உ றுப்பினரருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் காணப்படுவதாவது,

பாலமுனையின் மூத்த கல்விமானாகவும் முதலாவது கலைப்பட்டதாரியாகவும், பட்டப்பின் கல்வி டிப்ளோமா சான்றிதழ் பெற்றவராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பாலமுனையின் முதலாவது சட்டப்பட்டதாரியாகவும் தன்னுடைய கல்வித் தகைமைகளை மேம்படுத்திக் கொண்டு , இளைஞர்களுக்கு ஓர் ஆதர்சமாகத் திகழ்ந்த அன்னாரின் இழப்பையிட்டுக் கவலையடைகின்றேன்.

பொது ஆசிரியர் பயிற்சியையும் பின்னர் வணிக சிறப்பு ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டு, தனது பிரதேசத்திலும், தலைநகரிலும் ஆசிரியராகவும் அதிபராகவும் அவர் கல்விப்பணியும் ஆற்றியுள்ளார்.

1978ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம், அத்துடன் அதன் தலைப் பிரசவமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைத் தொடர்ந்து தங்களுக்கிடையே ஒற்றுமைப்படாத நிலையிலிருந்த முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் எத்தகைய துன்பங்களுக்கு முகங்கொடுக்கப்போகின்றது என்பதைத் தூரநோக்குடன் தெளிவாகப் புரிந்துகொண்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபிக்கும் பாரிய சவால்மிக்க போராட்டத்தில் பெருந் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுடன் 1979ஆம் ஆண்டிலிருந்து தோள்கொடுத்து உழைத்தவர்களில் ஒருவராக மறைந்த சட்டத்தரணி சம்சுத்தீனும் இருந்திருக்கிறார்.

அத்துடன் பெருந் தலைவர் அஷ்ரஃபின் முஸ்லிம் ஐக்கிய முன்னணியிலும் அவர் உறுப்பினராக இருந்து தலைவர் அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றியுள்ளார். 1980 செப்டம்பர் 21ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்திருந்த பாலர்பாடசலையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் முதலாவது மகாநாடு நடைபெற்றபோது மகாநாட்டுக்கான களப்பணிகளில் காத்தான்குடி சட்டத்தணி ஜவாட் முன்னணியில் நின்று உழைக்க, அலுவலகம் சார்ந்த பணிகளில் தன்னுடைய அதிபர் பதவியையும் பொருட்படுத்தாது அயராது உழைத்ததாக தலைவர் அஷ்ரஃப் அவரை நன்றியுடன் நினைவுகூர்வதுண்டு.

எல்லாம்வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை அருள்வதோடு, துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளிப்பானாக.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :