பரிமாணப் பார்வைக்குள்; பஷிலின் பாராளுமன்ற பிரவேசம்?



சுஐப் எம் காசிம்-
ரசியலமைப்பின் இருபதாவது திருத்த எதிரொலிகளில் இன்னுமொன்றுதான், நாமெல்லோரும் இப்போது கேட்டுக்கொண்டிருப்பது. இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவரும் அரசியலில் பங்கேற்கலாம், அமைச்சராகலாம் என்பதற்கான சட்ட அங்கீகாரம் பெறப்பட்ட கையோடுதான் இந்த எதிரொலியையும் சிலர் எதிர்பார்த்தனர். ஆனாலும், அவசரமின்றிக் காரியமாற்றுவதில் கர்மவீரர்களான ராஜபக்ஷவினர், கனிவான காலத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவரிடம் அரசியலின் ஏகபோக உரிமைகள் குவிவதைத் தடுத்திருந்த 19 ஐ இல்லாமலாக்கி, ஒரு ராஜபக்ஷ உச்சளவில் உயர்ந்திருக்கையில், அதே வேகத்தில் அடுத்த ஒருவரை அமைச்சராக்குவது, கூட்டுக் கட்சிகளை குழப்பத்திலாழ்த்தும்.
72 வருட அரசியல் அனுபவமுள்ள ராஜபக்ஷவினருக்கு இது தெரிந்த விடயம். இதனால்தான், பஷிலின் பாராளுமன்ற வருகையிலும் இவர்கள் அவசரம் காட்டவில்லை. ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் அமைச்சரவையில் இருப்பதென்பது, உலக அரசியலில் அதிசயமில்லையா? இந்த அதிசயத்துக்கு நீண்ட ஆயுள் அவசியமே தவிர, அவசரம் அவசியமில்லை. கூட்டுக் கட்சிகளின் குழப்பத்தைக் கட்டுப்படுத்தலாம், எதிர்க்கட்சிகளின் கூக்குரல்கள் தென்னிலங்கையைக் குழப்பக் கூடாதென்பதில்தான், ராஜபக்ஷக்களின் குறிகளிருந்தன. இதனால்தான், பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்றக் கதிரை ஒரு வருடமாகக் காத்திருக்க நேரிட்டது. ஒரு கதிரையா இவரின் அமர்வுக்கு காத்திருந்தது? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 தேசியப் பட்டியலும் காத்திருக்கத் தயார்தான். இப்போதே, ஜெயந்தகெட கொட, ஜெயந்த வீரசிங்க மற்றும் ரஞ்சித் பண்டார ஆகிய எம்.பிக்கள் பதவி விலகி, பஷிலுக்கு வழிவிடக் காத்திருக்கின்றனர். கூட்டுக் கட்சிகள் எப்படித்தான் எதிர்த்தாலும், 113 எம்.பிக்கள் ஒப்பமிட்டு, பஷிலை அமைச்சராக்க ஒப்புதலும் அளித்துள்ளனர்.

‘புதிய அரசியலமைப்பில் அனைத்தும் சரி செய்யப்படும், இப்போது இருபதை ஆதரியுங்கள்’ என்ற அறிவுரைக்கு இரையாகிய இந்தப் பங்காளிகள், இப்போது பேசி என்ன பலன்? ஒருவாறு வெளியேறிச் சென்றால், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரப் பெரும்பான்மைப் பலமில்லாது போகலாம்தான். ‘இப்போது, போனால் எமக்கென்ன, 113 உடன் அரசாங்கம் உருளும்’ என்பதுதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு. குடும்ப ஆட்சியைத் தூக்கிப்பிடித்து ஜனநாயகத்தை சலவை செய்த நல்லாட்சி அரசாங்கம், 2015 இல் வீட்டுக்கு அனுப்பிய எதிரியை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க முடியாமல் போனது. இவர்களின், இந்த இயலாமைகளில் எழும்பியதுதான் இன்றைய அரசாங்கம். இதன் (engine) இயந்திரம்தான் இந்தவாரப் பேசுபொருள்.

எதிர்க்கட்சிகள் என்னதான் சொன்னாலும் "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்" என்ற தத்துவத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தூக்கி எறியப்பட்ட குடும்பம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதனால், புதிய தெரிவு ஏமாற்றி உள்ளதாகவே பொருள். இத்தனைக்கும், இந்த ராஜகுடும்பத்தில் பதவியேற்பாரென எதிர்பார்க்கப்படுபவர், எல்லா இனத்தவரையும் ஒரு காலத்தில் ஈர்த்திருந்தவர். வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், மகநெகும மற்றும் சமுர்த்தி வாழ்வாதாரம் எனத், தன்னிடமிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் அனைவரையும் அரவணைத்துக் கொண்ட அரசியல்வாதியும் இவர்தான். இப்போது, இவருக்கு இந்த அமைச்சுடன் நிதி இராஜாங்கமும் வழங்கப்பட்டு, துறைமுக நகரமும், முதலீட்டு ஊக்குவிப்பு சபையும் இணைக்கப்படுகிறதாம். சிறுபான்மைச் சமூகங்களின் சிந்தனைகளைக் கிளறிய, மத, இன உணர்வுகளைச் சங்கடப்படுத்திய யுத்தகாலம் மற்றும் பேருவளை, அழுத்கமை பதற்ற காலங்களிலும் சரி, மிகப் பக்குவமான கருத்துக்களையே வெளியிட்டு, தனது மென்மையான பக்கங்களை, அரசியல் பரப்பில் வெளிக்காட்டியவர். இதனால், ஏனைய சகோதரர்களை விடவும் சகல சமூகங்களுக்கும் பொருத்தமாகவே இவர் பார்க்கப்படுவதுண்டு. பொதுவாக அரசுக்கு ஏற்பட்டுள்ள சிறு சிறு கீறல்களை இல்லாமலாக்கும் வேலைகளும் இவரிடம்தான் ஒப்படைக்கப்படவுமுள்ளன.

ஜனாதிபதி, பிரதமரின் கொள்கைகள் தோற்றுப்போனதாலே, பஷில் வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எதுவானாலும், ராஜபக்ஷக்களிலிருந்துதான் ராஜ்யத் தெரிவுகள் இருப்பதாகவும் சம்பிக்கவின் கருத்திலுள்ளதே! 2019 தேர்தலில், சிறந்த வேட்பாளரைத் தேடித்திருந்த சிறுபான்மைத் தலைமைகளில், எனக்கு நெருக்கமான ஒன்று என்னிடம் ஒன்றைச் சொன்னது. ‘பஷில் வேட்பாளராகியிருந்தால் முடிவில் நான் தடுமாறியிருப்பேன்’ என்றார். வடக்கிலும் இலகுவாக விற்கக்கூடிய அரசியல் சொத்துத்தான் பஷில் என, அத்தலைமையுடன் நானும் உடன்பட்டிருந்தேன். எனவே, புதியவரின் வருகையால், பிறக்கப்போகும் பிரதிபலன்களைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :