முன்னாள் உயர் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்த ஹக்கீம் பிரஸ்தாப சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேலும் கூறியதாவது,
நாங்கள் இன்று சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை விவாதிக்கின்ற போது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரும், அதன் செயலாளரும் முன்னர் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாக பதவி வகித்தவர்கள் என்பதாகும். அதன் பயனாக உயர் கல்வி துறைக்கு பொற்காலம் பிறப்பதாகத் தான் நாங்கள் நினைத்தோம்.
ஆனால், காலம் போகப்போக அந்த எதிர்பார்ப்பு முழுமையாகவே மங்கிப் போய்விட்டதாகவே கூறியாக வேண்டும். இந்த சட்டமூலத்தை நியாயப்படுத்துவதற்கு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த சபையில் அவர் அனுபவித்த அவஸ்த்தையை பார்த்த போது நான் கவலைப்பட்டேன்.
அவரது கூற்று சிறுபிள்ளைத்தனமானதாகவே இருந்தது. அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் பலவற்றுக்கு உரிய பதிலை அளிக்காமல் வெறும் மளுப்பலாகவே அவரது பதில் அமைந்திருந்தது. அவருக்கு அது தெரிந்திருக்கும். ஆனால், செய்வதற்கு எதுவுமில்லை. அவருக்கு பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப அவர் செயற்பட வேண்டியிருந்திருக்கின்றது. அதனால் தான் சட்டமூலத்தை இங்கு தூக்கிக்கொண்டு வந்து அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கின்றார்.
இந்த விவாதம் இன்னொரு நாளைக்கு பிற்போடப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் அவர்களது உள்ளார்ந்த பிரச்சினைகள் காரணமாகவே அவ்வாறு நேர்ந்திருக்கின்றது. இது சுற்றிவளைத்து, மறைமுகமாக தனியார்மையப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த சட்டமூலத்தை எவ்வாறாவது நிறைவேற்றிக் கொள்வதற்கு பிரயத்தனம்படுகின்றார். மூடிமறைத்து இந்த காரியத்தை செய்ய வேண்டிய அவசியமில்லை.
அதாவது, தொண்டைக்கு தெரியாமல் மருந்தை விழுங்க வேண்டிய துர்பாக்கிய நிலை இவ்வாறான அமைச்சர்களுக்கு நேர்ந்துள்ளது. அது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
சேர் ஜோன் கொத்தலாவலையின் அளப்பரிய அர்ப்பணிப்பின் பயனாக உருவாகிய இந்தப் பல்கலைக்கழகம், அதன் தரச் சிறப்பை அடைவதற்கு ஓரளவு காலம் தேவைப்படும். அவ்வாறாகத்தான் அது மேம்பாடடைய முடியும். ஆனால், இங்கு நாங்கள் அவதானிக்கின்ற விடயம் தான் பல்கலைக்கழக கட்டமைப்பை பொறுத்தவரை மானியங்களை பகிர்ந்தளிக்கின்ற பொழுது ஏற்படுகின்ற பாரபட்சமான நிலைமையாகும்.
ஏனைய பல்கலைக்கழகங்களை விட இந்த பல்கலைக்கழகத்திற்கு பாரியளவிலான வளங்களும், மானியங்களும் கிடைக்கின்றன. ஆனால், அவை மட்டும் போததாது. வெறுமனே கட்டடங்களை கட்டியெழுப்புவதால் பயனில்லை. வழங்கப்படுகின்ற பட்டங்கள் தரமானவையாக அமைந்திருக்க வேண்டும். தரச் சிறப்பு எட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்கப் போனால், இன்னும் நாங்கள் ஆரம்பித்து வைத்த இடத்திலேயே இருக்கின்றது. அவை இந்த அரசாங்கத்தினால் இன்னும் செயலுருப்படுத்தப்படவில்லை என்பதாகவே தோன்றுகின்றது.
குறிப்பாக, தர உத்தரவாதம் மற்றும் தர நிர்ணயம் தொடர்பான ஒரு ஆணைக்குழுவொன்றை இந்நாட்டிலே அறிமுப்படுத்தினோம். அதற்கு என்ன நடந்தது என்றே தெரியாது. நன்றாக பரிசிலிக்கப்பட்ட அந்த சட்ட மூலமானது, உலக வங்கியின் நிதியுதவியோடு இந்நாட்டின் பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடனும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பங்களிப்புடனும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இன்னும் அமுல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. அந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தாத வரை இந்த நாட்டின் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயம் ஒரு பாரிய பிரச்சினையாகவே இருக்கப் போகின்றது.
அதேவேளையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெறுமனே நிதியை பங்கிடுகின்ற ஒரு நிறுவனமாகவே ஆகியிருக்கின்றது. அந்த அடிப்படையில் இயங்க முடியாது. பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு கல்வியின் தரச் சிறப்பிலும், தர நிர்ணயத்திலும் நேரடியாக தலையிட முடியாது. அது தனியான நிறுவனங்களால் கையாளப்பட வேண்டியதாகும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்ற வகையில் மானியங்களை பங்கிடுவதால் மட்டும் பெரிதாக எதுவும் ஆகப் போவது ஒன்றுமில்லை. பல்கலைக்கழகங்களில் தரச் சிறப்பையும், தர நிர்ணயத்தையும் பொறுத்தவரை பாரிய பிரச்சியை உருவாகியுள்ளது. உலகின் ஏனைய பல்கலைக்கழகங்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது எங்களது பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயம் அவற்றிற்கு அண்மையில் கூட இல்லை என்பது வெளிப்படையாகும். உயர்தரமான பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடுகையில் இந்த பிராந்தியத்திலே நாம் அவற்றிற்கு அருகிலும் செல்ல முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றோம்.
மானியங்களை பகிர்ந்தளிக்கும் போது ஏற்படுகின்ற பாரபட்சங்களை பாருங்கள். பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்னும் தற்காலிக கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றது. ஆனால், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஏராளமான கட்டடங்கள் உள்ளன. தரச்சிறப்பு பேணப்படுகின்ற இடத்தில் கட்டடங்கள் இல்லை. கட்டடங்கள் அமைந்துள்ள இடத்தில் தரச்சிறப்பு இல்லை. இதுதான் நிலைமை.
கல்வி அமைச்சின் செயலாளர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்த போது, எங்களது தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஒரு பாரிய பங்களிப்பைச் செய்தார். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கு விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவிய போது, இனவாத சக்திகளின் செயற்பாட்டால் அங்கிருந்து அந்த பீடத்தை அப்புறப்படுத்த எத்தனிக்கப்பட்ட போது அவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து விரிவுரையாளர்களை அங்கு அனுப்பி உதவினார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
அவர் அமைச்சின் செயலாளராக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் பல முக்கியமான மாற்றங்களை உயர் கல்வி துறையில் ஏற்படுத்தியாக வேண்டும். எவற்றைச் செய்ய வேண்டுமென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவற்றை மேற்கொள்வதற்கான அதிகாரம் அவரிடம் இருந்தாக வேண்டும். குறிப்பாக, பிரஸ்தாப சட்ட மூலத்தினால் ஏற்படப் போகின்ற விளைவுகளை பொறுத்தவரை இது பற்றி உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் விளைவை பாருங்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈவிரக்கமற்ற முறையில் கையாளப்பட்ட விதத்தை பாருங்கள். சட்டபூர்வமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரபல ஆசிரிய தொழிற் சங்கவாதி ஜோஸப் ஸ்டாலின் உட்பட மொத்தமாக காவிச் செல்லப்பட்;ட விதம் பலமாக கண்டிக்கத்தக்கதாகும். வயது முதிர்ந்த மூதாட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை. அரசாங்கம் நிலைமையைக் கண்டு அஞ்சுகின்றது. சர்வாதிகாரத்தினால் அடக்கி ஆள முனைகின்றது என்றார்.
0 comments :
Post a Comment