வருடாந்தம் இடம்பெற்று வருகின்ற கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு தெரிவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் தொடர்ந்தும், தொடராக செய்து வருகின்ற பிழையான செயற்பாடுகளினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல கலைஞர்களும், எழுத்தாளர்களும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கலைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தராக இருக்கின்றவர் இந்தச் செயற்பாட்டை தொடர்ந்தும் பிழையாகவே முன்னெடுத்து வருகின்றார் என்ற முறைப்பாட்டை முன்னாள் பிரதேச செயலாளராக இருந்த ஜே.லியாக்கத் அலியிடமும், இன்னாள் பிரதேச செயலாளராக இருக்கின்ற எம்.ஏ.சி.சாபிரிடமும் முன்வைத்தும் கூட இந்த புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு - 2021 தெரிவுக்கான பெயர்களை தெரிவு செய்ததில்கூட கலாச்சார உத்தியோகத்தர் பிழையான செயற்பாடுகளை முன்னெடுத்து குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் தனிப்பட்ட முறையில் அறிவித்தல்களை வழங்கியதாகவும், இது தொடர்பில் குறித்த உத்தியோகத்தரிடம் வினவியபோது, 2021 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு தெரிவு இடம்பெற்றதாகவும், அதன் பெயர் விபரங்கள் மாகாண பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தெரிவை எவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டபோது, இந்த அறிவித்தலை பெயரளவில் மாத்திரம் ஒரு நாள் பத்திரிகையிலும், தபால் நிலையத்திலும், நூலகங்களிலும், தனக்குத் தெரிந்த கலைஞர்களுக்கு வட்சப் மூலம் தெரியப்படுத்தி தெரிவு செய்தேன் என்றும் குறித்த உத்தியோகத்தர் தெரிவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக, கடந்த வருடமும், இவ்வருடமும் எமது நாட்டின் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், ஊரடங்கு மற்றும் பயணத்தடைகள் இன்றுவரை இருக்கின்ற நிலைமையை எல்லோரும் அறிவார்கள். இதனால் அரச மற்றும் அரச சார்பற்ற எல்லா நிறுவனங்களும் முறையாக இயங்காமலும், பொதுமக்கள் வீடுகளில் முடக்கப்பட்டு இன்றுவரை இருப்பதை யாரும் மறுக்க முடியாத விடயமாகும்.
இந்நிலைமையில், இவர்கள் விடுத்த அறிவிப்பை எவ்வகையிலும் அறிந்துகொள்வதென்பது சாத்தியமற்ற விடயமாகும். இவ்வாறு இருக்கின்றபோது கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு - 2021 தெரிவுக்கான பெயர்களை அந்த உத்தியோகத்தர் எவ்வாறு தெரிவு செய்ய முடியும் என்ற கேள்விகளை நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.
இது தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்ற விடயம் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், கவலையடையச் செய்துள்ளதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பான முறைப்பாட்டுக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிரதிகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித்த பீ. வணிகசிங்க, கிழக்கு மாகாண காலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவனீதன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.சாபீர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment