அஷ்ரபின் சிந்தனையில் உருவான பல்கலைக் கழகத்தின் அறுவடை கண்டு தென்கிழக்கு மண் பூரிப்படைகிறது



பேராசிரியர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் மு.கா. தவிசாளர் மஜீத் பெருமிதம்
அஸ்லம் எஸ்.மௌலானா-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஐவர் பேராசிரியர்களாக பதவியுயர்வு பெற்றிருப்பதையிட்டு எமது தென்கிழக்கு மண் பூரிப்படைகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இப்பேராசிரியர்களை வாழ்த்தி, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவான தென்கிழக்குப் பல்கலைக் கழகமானது அவரது கனவை நனவாக்கும் வகையில் சிறந்த அறுவடையைத் தந்துகொண்டிருப்பது குறித்து நாம் பெருமிதமடைகிறோம்.

இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை அது பிரசவித்துள்ளது. ஆனால், ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் இப்பல்கலையின் சிறப்பு யாதெனில், எமது சமூகத்திலுள்ள திறமையான மாணவர்களை வெறுமனே பட்டதாரிகளாக மாத்திரம் அல்லாமல் அதையும் தாண்டி பெரும் கல்வியியலாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் உருவாக்கி வருகின்றமையாகும்.

இந்த வாய்ப்பானது ஏனைய பல்கலைக்கழகங்களில் கிடைப்பதென்பது மிகவும் அரிதான விடயமாகும். எமது சமூகத்திலுள்ள மாணவர்கள் எவ்வளவு திறமைமிக்கவர்களாக இருந்தும் ஏனைய பல்கலைக் கழகங்களில் வாய்ப்பு வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டு, புறமொதுக்கப்பட்டு வந்தமை வரலாறாகும்.

எவ்வாறாயினும் தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது எவ்வித இன, மத, பிரதேச பேதமுமின்றி ஒரு தேசிய பல்கலைக்கழகம் என்ற ரீதியில் சிறப்பாகப் பங்காற்றி வருகின்றது.

அதன் பெறுபேறாகவே கலாநிதி எஸ்.குணபாலன், கலாநிதி ஏ.எம்.றஸ்மி, கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால், கலாநிதி எம்.எம்.பாஸில், கலாநிதி சப்ராஸ் நவாஸ் ஆகிய சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவியுயர்வு பெற்றிருகின்றனர். இதையிட்டு தென்கிழக்கு மண் பூரிப்படைகின்றது. அதிலும் விசேடமாக எமது சாய்ந்தமருது மண் பெருமையடைகின்றது. இவர்களுள் மூவர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்கள் என்பதும் இம்மூவரும் ஆசிரியர்களாக, அதிபர்களாகப் பணியாற்றி, இப்பிரதேசத்தின் கல்வித்துறைக்கு பெரும்பாங்காற்றிய செம்மல்களின் புத்திரர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

கல்விப்புலத்தில் தமது விடா முயற்சி, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு காரணமாக உயர் கல்வியில் முன்னேறியுள்ள இப்பேராசிரியர்கள் ஐவரும் எதிர்காலத்தில் இன்னும் உயர்ச்சிகளைப் பெற எமது மண் சார்பில் வாழ்த்துகின்றேன்.

இதற்கான களத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகம் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்பல்கலையில் கற்று, இங்கேயே பட்டம் பெற்று, இங்கேயே கலாநிதியாகவும் பேராசிரியராகவும் பதவியுயர்வு பெற்று, இப்பல்கலைக் கழகத்திற்கே ஜனாதிபதியினால் உபவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கின்ற றமீஸ் அபூபக்கர் அவர்களின் இமாலய சாதனை எல்லோருக்கும் முன்மாதிரியான விடயம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இதை விட சந்தோஷமான தருணம் அவருக்கு வேறெதுவும் இருந்திருக்காது என்பதில் சந்தேகமில்லை. தனது ஓய்வு காலத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் ஒரு வருகைதரு விரிவுரையாளராக பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். அந்தளவுக்கு இப்பல்கலைக் கழகத்தை உயிரோட்டமாக நேசித்திருந்தார். அவரது எண்ணம் வீண் போகவில்லை என்பதையே இப்பல்கலையின் பேராசிரியர்களது பிரசவம் உணர்த்துகிறது- என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :