நாட்டில் கோவிட் -19 தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ஏனைய மாவட்டங்களைப் போன்று திருகோணமலை மாவட்டத்திலும் கோவிட் தொற்று அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிவதாகத் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது:
நாட்டில் ஏனைய மாவட்டங்களைப் போன்று திருகோணமலை மாவட்டத்திலும் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அத்துடன் கந்தளாய்,மூதூர் உப்புவெளி மற்றும் திருகோணமலை நகரப் பிரதேசங்களில் அதிகளவிலான கோவிட் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கோவிட் -19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் இவர்களுள் அநேகமானவர்கள் கோவிட் நிமோனியா நோயினால் மரணித்ததாக எவ்வித தரவுகளும் கிடைக்கப் பெறவில்லை.
அத்துடன் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட அநேகமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதைத்தவிர 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் அநேகமானவர்கள் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி பெற்று வருகின்றனர்.
இவர்களுள் மிகவும் குறுகிய அளவிலானவர்களே கோவிட் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கின்றனர். மேலும் விரைவில் இவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க மாகாணத்தில் உள்ள அனைத்து ஆயுர் வேத வைத்தியசாலைகளும் கோவிட் வைத்தியசாலைகளாக முன்னெடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலை கோவிட் நோயாளிகளுக்காகச் சரியாக இயங்குவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,,
கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையானது கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க இன்றுவரை கோவிட் நோயாளிகளுக்கான வைத்தியசாலையாக இயங்குவதாகவும், கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக அதிகளவிலான கோவிட் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
எதிர்காலத்தில் இவ்வாறான பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள பொது வைத்தியசாலைகளை எடுத்துக்கொண்டால் கோவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலைகளாக கந்தளாய் தள வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் மூதூர் தள வைத்தியசாலைகள் இயங்குவதாகவும் இவற்றுள் எந்த ஒரு வைத்தியசாலைகளிலும் இதுவரை இடப்பற்றாக்குறை ஏற்படவில்லை எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment