ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரப் காணி அவர்கள் தலிபான்களுக்கு எதிராக போர் செய்வதற்கு இராணுவத்தினர்களை ஒழுங்குபடுத்துவதிலும், அங்குள்ள தலிபான்களுக்கு எதிரான இயக்கங்கள் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தும் இறுதிக்கட்டத்தில் அவைகள் எதுவும் பயனளிக்கவில்லை.
மேலும், தலிபான்களுக்கு எதிராக எஞ்சியுள்ள ஆப்கான் இராணுவத்தினர் மூர்க்கத்துடன் போராட தயங்கியதனாலும், ஏராளமான இராணுவத்தினர்கள் சரணடைந்து தலிபான்களாக மாறியதனாலும், நாட்டின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பெற்றியதனாலும், தனது அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் தலிபான்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததனாலும், ஜனாதிபதி அஸ்ரப் காணி தனது அதிகாரத்தை வேறுவழியின்றி கைமாறவேண்டிய நிலை ஏற்பட்டது.
காபூல் நகருக்குள் தலிபான்கள் ஊடுருவுவதற்கு முதல்நாள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது தலைநகராக கருதப்படுகின்ற “கந்தகார்” நகரை கைப்பெற்றி இருந்தனர். இந்த இரு பெரு நகரங்களும் தலிபான்களினால் கைப்பெற்றபடும்போது பெரும் போர் வெடிக்கும் என்றும், ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவரும் எதிர்பாராதவிதமாக அமைதியானமுறையில் இரு நகரங்களும் தலிபான்களிடம் வீழ்ந்தது.
இருபது வருடங்களாக தலிபான்களுடன் போர் செய்து வருகின்ற அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர்களினால் தலிபான்களை அழிக்க முடியவில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி அடைந்துகொண்டே வந்தனர்.
ஆப்கானில் வெற்றியடைய முடியாதென்பதனை புரிந்துகொண்ட அமெரிக்கா கடந்த 2020 லிருந்து கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் தலைநகர் தோஹாவில் தலிபான்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியது.
அதன் பிரகாரம் 2021 செப்டம்பர் 11 க்கு முன்பாக அமெரிக்கா தலைமையிலான அனைத்து நேட்டோ படையினர்களும் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு வெளியேறி சில மாதங்களில் தலிபான்களின் கை ஓங்கும் என்றே கணித்திருந்தனர்.
ஆனால் அமெரிக்க படைகள் காபூல் நகரைவிட்டு வெளியேற முன்பாகவே அதிவேகமாக நாட்டின் அதிகாரத்தினை தலிபான்கள் கைப்பெற்றியுள்ளனர்.
தோல்வியடைந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தினர், இனிமேலும் தங்களால் வெற்றிபெற முடியாதென்ற நிலை ஏற்பட்டால், போர்க் களத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தங்களுக்கு எதிராக போரிடுகின்ற கெரில்லாக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியபின்பே வெளியேறுவார்கள்.
அவ்வாறு போராளிகளுடன் உடன்பாடு காணாமல் போர் களத்திலிருந்து வெளியேறும்போது போராளிகளின் மூர்க்கமான தாக்குதல்காரணமாக பலத்த உயிர் இழப்புக்களுடன், கனரக ஆயுத தளபாடங்களையும் போராளிகளிடம் பறிகொடுத்துவிட்டு பெருத்த அவமானத்துடன் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை தவிர்க்கவே அமெரிக்கா விரும்பியது.
சோவியத் ரஷ்ய படையினர் 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்தபின்பு அங்கு ஒன்பது வருடங்கள் நடைபெற்ற போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக போராளிகள் இயக்கமான முஜாஹிதீன்களோடு 1988 இல் சமாதான ஒப்பந்தம் செய்துவிட்டு 1989 இல் சோவியத் ரஷ்யாவின் இறுதிப்படைப்பிரிவு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது.
அதுபோலவே தோல்வியடைந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர்கள் ஆப்கானைவிட்டு பாதுகாப்பாக வெளியேறும் நோக்கிலேயே தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களே தவிர, அமெரிக்காவின் அடிமைகளாக ஆட்சி செய்யும் சாத்தியம் தலிபான்களிடம் இல்லை.
தலிபான்களின் ஆட்சியை கவிழ்த்து இருபது வருடங்கள் ஆதிக்கம் செய்த அமெரிக்கா இறுதியில் தோல்வியடைந்த நிலையில் ஆப்கானைவிட்டு வெளியேறுகின்றது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment