பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் "சமூக கலை இலக்கிய எழுத்துலக வாழ்வில் அந்தனி ஜீவா" எனும் தலைப்பில் அமைந்த அந் நிகழ்வு அந்தனி ஜீவா அவர்களின் கலை இலக்கிய வாழ்வின் சகல அத்தியாயங்களையும் மீட்டிப் பார்ப்பதாக அமைந்தது.
பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தனதுரையில் மலையகம் குறித்த தனித்துவத்தை தேசிய ரீதியிலும், சரவதேசங்களிலும் எடுத்துச்சென்றதில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றார். கொழும்புத் தமிழ்ச் சங்க பணிகளோடு நீண்டகாலம் ஒன்றிணைந்து செயற்பட்ட நினைவுகளை மீட்டுப்பார்க்கின்றேன்.என்றார்.
பள்ளிகால அனுபவங்களை அந்தனி ஜீவா அவர்களின் பால்ய நண்பர் பிரபல பாடகர் சூரியகுமார் வி.முத்தழகு பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். தொடரந்து இளமைப்பருவ கலை.இலக்கிய ஈடுபாடுகள் தொடர்பில் பிரபல ஓவியர் எஸ்.பி.சாமி அவர்கள் தனது அனுபவத்தையும் அந்தனி ஜீவா அவர்களது கலை இலக்கிய முன்நகர்வு பற்றியும் கொழும்பு நாடக அரங்கில் அவரது ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பில் பதிவுசெய்தார். அந்தனி ஜீவாவின் கண்டி பிரவேசத்தின் பின்னர் மலையக இலக்கிய தளத்தின் மறுமலர்ச்சி குறித்த விடயங்களை கவிஞர் சு.முரளிதரன் அவர்கள் தனது அனுபவங்களை தெளிவுறுத்தினார். அத்தோடு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக தலைவர் பெ.முத்துலிங்கம் அந்தனி ஜீவாவின் தோழமையின் முக்கியத்துவதகதையும் அந்தனி ஜீவா உட்சுமந்திருந்த அரசியல் குறித்த தெளிவூட்டலையும் வழங்கினார்.
தொடரந்து மேமன் கவி கொழும்பை களமாகக்கொண்ட பணிகளையும் தேசிய ரீதியிலான செயற்பாடுகளையும் தெளிவுறுத்தினார். நிகழ்வில் பேராசிரியர்களான மெளனகுரு, மு.நித்தியானந்தன். கருணாநிதி, கிறிஸ்டோபர் (தமிழகம்) விமர்சகர் கே.எஸ்.சிவக்குமாரன். மற்றும் எம்.வாமதேவன், சட்டத்தரணிகளான இராஜகுலேந்திரா, பதுளை சேனாதிராஜா, எழுத்தாளர் மாத்தளை சோமு. விரிவுரையாளர்களான சரவணகுமார், மெத்தியூ, மூ.அகிலன், எழுத்தாளர்களான மு.சிவலிங்கம், இரா.நித்தியானந்தன், சிவனு மனோகரன், பாத்திமா மைந்தன், அதிபர் வேனுகோபால் சர்மா, பிரதி அதிபர் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட சுமார் 60 ற்கு மேற்பட்ட நபர்கள் பங்கேற்றார்கள். நிகழ்வுக்கான தொகுப்பு, நன்றியுரையை நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தி செயற்பாட்டாளர்களான வே.இராமர், ஏ.வைத்திலிங்கம் ஆகீயோர் நிகழ்த்தினார்கள்.
அந்தனி ஜீவா.
1944.05.26 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர்; கவிஞர். இவரது தந்தை செபஸ்டியன்; தாய் லட்சுமி அம்மாள். கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்புளோமா பட்டம் பெற்றுள்ளார். தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். கொழுந்து, குன்றின் குரல் சஞ்சிகைகளின் ஆசிரியர். லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
நாடகத்துறையிலும் பங்களித்துவரும் இவர் எழுதிய முதல் நாடகமான 'முள்ளில் ரோஜா' 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார். இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. 1980களில் தெரு நாடகங்களைக் கொழும்பு, மலையகப் பகுதிகளில் நடாத்தினார்.
ஈழத்தில் தமிழ் நாடகம் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசையர் (1990), மலையகமும் இலக்கியமும் (1995), முகமும் முகவரியும் (1997), மலையக மாணிக்கங்கள் (1998), அக்கினிப் பூக்கள் (1999), சி. வி. சில நினைவுகள் (2002) குறிஞ்சிக் குயில்கள் (2002), மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகம் வளர்த்த கவிதை (2002), கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002), திருந்திய அசோகன் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2003), மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம் (2007), ஒரு வானம்பாடியின் கதை (2014) போன்றவை இவரது நூல்கள். தான் செயலாளராகப் பணியாற்றும் மலையக வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்களின் எழுத்துக்களைத் தொகுத்து குறிஞ்சி மலர்கள் (சிறுகதைகள், 2000), குறிஞ்சிக் குயில்கள் (கவிதைகள், 2002), அம்மா(சிறுகதைகள், 2004) போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். இவர் அரச சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இலங்கையின் முதல் அரசியல் நாடக நூலான தேசபக்தன் கோ.நடேசய்யரின் "தொழிலாளர்களின் அந்திரப்பிழைப்பு" நாடக நூலை 2017ம் வருடம் மீள்பிரசுரம் செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது. மலையக கலை இலக்கிய பேரவை அமைப்பின் முக்கிய பிரதானியாகவும், வெளியீட்டாளராகவும் இவரது பணிகள் தனித்துவ பார்வையில் சிறப்பிடம் பெறுகின்றன.
0 comments :
Post a Comment