இலங்கையில் கொவிட் தாக்கத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரிய செலவுச்சுமையை ஓரளவாவது குறைப்பதற்கு கிழக்குமாகாண அரச ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்கி தமது பங்களிப்பை வழங்குங்கள் என்று கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஸித பி வணிகசிங்க அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வேண்டுகோள் அடங்கிய சுற்றுநிருபத்தை சகல செயலாளர்கள் பிரதிப்பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
ஊழியர்களின் சம்மதம் தெரிவிக்கும் படிவமும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதமசெயலாளரின் வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையிலேற்பட்ட கொவிட் தொற்றினால் நோயாளர்களின் மருத்துவப்பராமரிப்பு தடுப்பூசி பெறுதல் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் வைரஸ்தடுப்புச்செற்பாடுகள் என பலதரப்பட்ட செலவீனங்கள் ஏற்பட்டன. அதனால் அரசாங்கம் பாரிய நிதிநெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது.
எனினும் இதுவரை 2மில்லியன் அரச ஊழியர்களைப் பராமரித்து அவர்களின் சம்பளம் எவ்வித குறைவுமில்லாமல் வழங்கிவருவது பாராட்டுக்குரியது.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு உதவவேண்டிய தார்மீக பொறுப்பை ஆளுநரும் வலியுறுத்தியுள்ளார். எனவே அரச ஊழியர்கள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை சுய விருப்பத்தின்பேரில் செலுத்தி அக்டோபர் மாத சம்பளத்தில் பங்களிக்கவேண்டுமென்பது எமது அன்பான வேண்டுகோளாகும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment