கிழக்கு மாகாண இடமாற்றம் கைவிடப்படுமானால் நீதிமன்றம் செல்லவும் பின்நிற்கப் போவதில்லை என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.



எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்றம் கைவிடப்படலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா, செயலாளர் எம்.கே.எம். நியார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாகாண இடமாற்றம் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம். புதிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் வலயங்கள் பலவற்றில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். அவரது பதவியேற்றலின் பின்னர் இடமாற்றமொன்று கைவிடப்படுவதை அல்லது பிற்போடப்படுவதை அவர் அங்கீகரிக்கமாட்டார் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆசிரியர்களின் உணர்வுகளை மதித்துச் செயல்படுவதனூடாகவே தமது பதவியினை மேன்மைப்படுத்த முடியும் என்பதே எமது ஆலோசனையாகும்.
மாகாண இடமாற்றம் என்ற பெயரில் இவ்வாறான கேலிக் கூத்துக்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்திருக்கின்றன. தொடர்ந்தும் அவை அரங்கேறுவதனை எம்மால் அங்ககரிக்க முடியாது.

அதிகாரங்களில் இருந்து கொண்டு தீர்மானங்களை எடுக்க முடியாமல் அரசியல் அழுத்தங்களை விழுங்கிக் கொண்டு செயல்படுகின்ற முதுகெலும்பற்ற அதிகாரிகள் மூலமே கல்விக்கு சாபக் கேடு ஏற்பட்டுள்ளது
ஆசிரியர் சமூகத்தின் உரிமைகள் வலய மட்டங்களிலும் மாகாண ரீதியிலும் தேசிய ரீதியிலும் மறுக்கப்படுகின்ற கேவலமான சூழ்நிலைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்தும் ஆசிரியர் உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது
இடமாற்றத்திற்கான ஆசிரியர்களின் பெயர்கள் உத்தியோக பூர்வமான இணையத்தில் வெளியிடப்பட்டு, இடமாற்ற சபைகள் மற்றும் மேன்முறையீட்டு சபைகள் பல நாட்கள் இருந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் கைவிடப்படும் நிலையேற்படுமானால் மாகாண இடமாற்றங்கள் மீது ஆசிரியர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கு நம்பிக்கையீனமற்ற சூழ்நிலை உருவாக வழிவகுக்கும்
மாகாண இடமாற்றத்தின் ஆளணி ஒதுக்கீட்டை நம்பி பல வலயங்கள் இடமாற்றங்களை மேற்கொண்டுள்ள நிலையிலும் இன்னும் சில வலயங்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையிலும் மாகாண இடமாற்றமானது இழுத்தடிப்புச் செய்யப்படுவது வலய மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உண்டு.

மிக நீண்ட காலமாக வெளிமாவட்டங்களிலும் வலயங்களிலும் வேலை செய்து இடமாற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் முன்னர் தங்கியிருந்த இடங்களை விட்டு வெளியாகிய மன நிலையில் மீண்டும் அவர்களை இக்கட்டான நிலைக்கு ஆளாக்குவது உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் கூட மாகாண அதிகாரிகளின் அழைப்பினை ஏற்று மேன்முறையீட்டு சபைகளில் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. அழுத்தங்கள் சில இருக்கின்ற போதிலும் இடமாற்றமானது கைவிடப்பட மாட்டாது , கட்டங்கட்டமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றெல்லாம் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிருவாகத் தரப்பினர் மீறுவார்களேயானால் அதற்கான விளைவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இடமாற்றங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலை பற்றி அறிந்து, அதனை செயற்படுத்தலாம் என்கின்ற விடயங்களைப் பெற்றுக் கொண்ட பின்னரே இடமாற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திடீர் திடீரென இடைநிறுத்தல் அறிவிப்புக்களை வெளியிடும் நிலையில் ஒரு மாகாணத்திணைக்களம் செயற்படுவது பொறுப்பற்ற செயற்பாடாகும். இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் இடமாற்ற சபைகளில் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புக்கள் கேள்விக்குறியாக அமையலாம்.

இடமாற்றங்களுக்காக விண்ணப்பித்த ஆசிரியர்களின் மன உணர்வுகளையும் குடும்ப சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டு மாகாண இடமாற்ற நியதிகளுக்கு உட்பட்ட வகையில் அனுமதியளிக்கப்பட்ட இடமாற்றத்தினை உடனடியாக அமுல்படுத்த மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடிதங்களை விரைவாக அனுப்பி வைத்து சங்கடங்களையும் சிரமங்களையும் குறைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :