செவிப்புலனற்றவர்கள் மற்றும் கைகை மொழிப் பயன்பாட்டளர்களின் மொழியியல் அடையாளம் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவினால் இன்று வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது மனிதர்களின் சகல செயற்பாடுகளுக்கும் கேட்டல் திறனும், மொழி புரிதலும் அவசியமாகும். எனவே எமது சமூகத்தில் உள்ள பிறப்பிலேயே கேட்கும் திறனை இழந்த செவிப்புலனற்ற அனைவருக்கும் பிறரை போன்றே உலகை அறிவதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மேற்படி தேவைக்காக உருவான சைகை மொழியானது தற்போது இயற்கை சைகை மொழியாக முன்னேற்றமடைந்துள்ளது. இந்நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட 'இலங்கை சைகை மொழி' காலத்தின் மாற்றங்களுடன் வளர்ச்சியடைந்து பொதுவாக செவிப்புலனற்ற நபர்களுக்கு நன்மையாக அமைந்துள்ளது என்பது எனது நம்பிக்கையாகும்.
செவிப்புலனற்ற நபர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சாதாரணமாக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வலிமையை ஒரு அரசாங்கமாக நாம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதை இந்த சிறப்பான நாளில் நினைவூட்டுகின்றேன்.
சைகை மொழியின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதுடன், முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏனைய மொழிகள் போன்றே சைகை மொழிக்கும் முன்னுரிமை வழங்கி எமது சக குடிமக்களுக்காக தமது கடமைகளை நிறைவேற்றுமாறு பொறுப்புவாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் வாழும் 70 மில்லியனுக்கும் அதிகமான செவிப்புலனற்றவர்களின் குரலாக விளங்கும் சைகை மொழி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, சமூகத்தில் நீங்கள் அனைவரும் சமமாக செயற்படுவதற்கு வாய்ப்பு கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment