விவசாயத்திற்கான இயற்கை உரத்தை உற்பத்தி செய்வதனை ஊக்குவிக்கும் வகையில் சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கான செய்முறைப் பயிற்சியும் உற்பத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் (13) திங்கட்கிழமை நடைபெற்றது.
அரசாங்கத்தின் விவசாயக் கொள்கை மற்றும் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கமைய பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இரசாயன உற்பத்திக்குப் பதிலாக இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகவே இவ் சேதனப் பசளை உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றதாக பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர் தெரிவித்தார்.
இவ்வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமயத்தல மையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விவசாய அமைப்புகள், சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடுவதற்கு ஆர்வமுள்ள தனிப்பட்ட நபர்கள் உட்பட பல தரப்பினரதும் பங்களிப்புகளைப் பெற்று இச்சேதனப் பசளை உற்பத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் விவசாயப் போதனாசிரியரும் விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரியுமான ஏ.எச்.எம். முபாறக் கலந்து கொண்டு சேதனப்பசளை உற்பத்தி செய்வது தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கியதோடு அதற்கான செய்முறைப் பயிற்சினையும் வழங்கினார்.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எப். நஹீஜா முஸாபிர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். ஹூஸைன்தீன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம் ஜாபிர், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் உட்பட அதிகாரிகளும், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களும், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment