அரசாங்கம் நினைத்தால் முஸ்லிம் தலைவர்களின் பலயீனத்தை பயன்படுத்தி காதி நீதிமன்றத்தை மட்டுமல்ல, இனச்சுத்திகரிப்பு செய்தாலும் அதை கேட்பதற்கு யாருமில்லை. முதுகெலும்பு இல்லாத கோடீஸ்வர அரசியல் தலைமையும், உணர்வற்ற பிரதிநிதிகளையும் முஸ்லிம் மக்கள் தெரிவு செய்ததன் வெளிப்பாடே இதற்கு காரணமாகும்.
இந்த நிலையில் 1989 தொடக்கம் 1994 வரையான காலங்கள் நினைவுக்கு வருகின்றது. தலைவருடன் சேர்த்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு தலைவர் அஷ்ரப் அவர்கள் எதிர்க்கட்சி அரசியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த நாட்டுக்கே பாடம் படிப்பித்தார்.
சிறியதோ அல்லது பெரியதோ அனைத்து சமூகம் சார்ந்த விடயங்களையும் பாராளுமன்றுக்கு கொண்டுவந்து காரசாரமாக விவாதித்தார். ஆட்சியாளர்கள் பேசும்போது குறுக்கு கேள்விகள் கேட்பதும், விவாதிப்பதும், பதில் வழங்க முடியாமல் அமைச்சர்கள் தடுமாறுவதும் அன்றைய தலைப்பு செய்திகளாக இருந்தன.
ஆனால் இன்றுள்ளவர்கள் அமைச்சர்களாக அதிக காலம் அதிகாரத்தை அனுபவித்து, சுகபோகம் கண்டவர்களினால் சம்பிரதாயத்துக்காக பாராளுமன்றத்தில் உரையாற்றிவிட்டு செல்கின்றார்களே தவிர, உணர்வுபூர்வமாகவும், நேர்மையாகவும் சமூக பிரச்சனைகளை இதயசுத்தியுடன் முன்கொண்டுசெல்ல இவர்களால் முடியவில்லை.
தலைவர் அஷ்ரபின் வழிவந்தவர்கள் இன்று எதிர்க்கட்சி அரசியல் செய்வது எப்படியென்று தெரியாமல் விழி பிதிங்கிக் கொண்டிருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.
முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது எந்தவொரு முஸ்லிம் கட்சியாலும் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை முன்னின்று ஏற்பாடு செய்ய துணிவு இருக்கவில்லை. ஆனால் உணர்வுகளால் உந்தப்பட்டு நாடுதழுவிய ரீதியில் ஆங்காங்கே முஸ்லிம் மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் யாரோ ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட பேரணியில் சிறப்பு பேச்சாளர்களாக உரையாற்றிவிட்டு ஊடகங்களுக்கு செய்தி வழங்கியதை தவிர, எம்மவர்களால் வேறு எதுவும் செய்திட முடியவில்லை.
இவ்வாறு உணர்வற்றவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களாக இருக்கமுடியாது. மாறாக முஸ்லிம் என்ற பெயரில் இல்லுமினாட்டிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவடைந்து செல்வதனை காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு போராட்ட குணம் இல்லாத உணர்வற்ற தலைவர்களும், பிரதிநிதிகளும் உள்ளவரை முஸ்லிம்கள் காலாதிகாலமாக அனுபவித்து வருகின்ற உரிமைகளை ஒவ்வொன்றாக இழக்கவேண்டி வரும் என்பதில் ஆச்சரியமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment