முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அவர்களின் அமைச்சு காலத்தில் வெறும் 500 வீடுகளே கட்டப்பட்டதாக சட்டம் இயற்றும் உயரிய சபையான பாராளுமன்றில் கூறிய இராஜாங்க அமைச்சர் ஜீவன், நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் கட்டி முடிக்கப்பட்ட 1235 வீடுகளை மக்களிடம் கையளித்து பாராளுமன்றில் தான் கூறியது பொய் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய முதல் கட்ட 50,000 ஆயிரம் வீடுகளில் வெறும் 4000 வீடுகள் மாத்திரமே மலையகத்திற்கு வழங்கப்பட்டன. 2008ம் ஆண்டு வழங்கப்பட்ட வீடுகளுக்கான கோவைகள் அப்போதைய மலையக அமைச்சரால் 2015ம் ஆண்டுவரை பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கு தமிழர்கள், இஸ்லாமிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 44,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் குடியேறிய போதும் மலையகத்திற்கு வழங்கப்பட்ட 4000 வீடுகள் ஆவண வடிவில் மாத்திரமே இருந்தது.
2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் அந்த 4000 வீடுகளுக்கான கோவையை தூசி தட்டி எடுத்து அதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து வீட்டுத் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் என்பதை முழு மலையக மக்களும் அறிவர். வீடுகளை கட்டிக் கொடுக்க பயனாளிகளுக்கு ' சொந்த காணி் இருக்க வேண்டும்' என்பது இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையாக இருந்தது. கம்பனிகளில் கீழ் இருக்கும் காணிகளில் வீடுகளை கட்ட அவர்கள் விரும்பவில்லை. அப்போதைய மலையக அமைச்சருக்கு பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க சொந்த காணி பெற்றுக் கொடுக்க முடியவில்லை. விருப்பமும் இல்லை.
ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணி அந்த தடையை உடைத்தெறிந்து தலா 7 பேர்ச் காணியில் வீடுகளை கட்ட அமைச்சரவை அனுமதி பெற்ற பின் வீடமைப்புத் திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் மத்திய மற்றும் ஊவா மாகாணம் என நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த 4000 வீடமைப்புத் திட்டத்தை முழு மலையகத்திற்கும் விஸ்தரித்தவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
அதன்படி வாக்குகள் கிடைக்கும் நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் சேவை செய்யாது பதுளை, கண்டி, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களுக்கும் வீடமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட லிடெஸ்டெல் 166, பொகவந்தலாவ 155, டொரிங்டன் 100, காலியில் 50, பதுளையில் 479, கண்டியில் 184 என 1235 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடும் கடந்த அரசாங்கத்தில் செய்யப்பட்டது. ஆனால் திடீர் ஆட்சி மாற்றத்தால் குடிநீர், மின்சார வசதிகளை பூரணபடுத்த முடியவில்லை. எனவே அமைச்சர் திகாம்பரம் தலைமையில் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை மறுக்க முடியாது. இவ்வாறு இன்னும் 1000 வீடுகள் வரை மக்களிடம் கையளிக்கப்பட வேண்டி உள்ளது.
இப்படி இருக்கையில் புதிதாக பாராளுமன்றம் சென்ற இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சின் கீழ் 500 வீடுகள் மாத்திரம் கட்டப்பட்டதாக பாராளுமன்றில் கூறியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் 600 வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டதாக கூறினார்.
ஆனால் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் கட்டப்பட்ட 1235 வீடுகளை நேற்று ஒரே நாளில் திறந்து வைத்ததன் மூலம் சட்டம் இயற்றும் உயரிய பாராளுமன்றில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் ஆகியோர் பொய்யான தகவல்களை வழங்கி குறுகிய அரசியல் லாபத்தை அடைய முயற்சித்துள்ளமை வெட்ட வௌிச்சமாகியுள்ளது.
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு குடியேற தேவையான வசதிகளை செய்து கொடுத்த விடயம் பாராட்டுக்குரியது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் பொய் கூறி மக்களை ஏமாற்றி பெயர் போட்டுக் கொள்ளும் முயற்சி மிகவும் கேவலமானது. மலையக மக்களை தொடர்ந்து முட்டாள்களாக நினைத்து இவர்கள் செயற்படுவதையே இந்த பொய் சுட்டிக்காட்டுகிறது.
அதனால் பொய், ஏமாற்று நாடகங்களை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய பிரதமர் இலங்கை வந்தபோது முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைக்கு அமைய வழங்கிய 10,000 இந்திய வீடமைப்புத் திட்டம் தற்போது கிடப்பில் கிடக்கிறது. அதனை மலையக மக்கள் நலன் கருதி விரைவில் ஆரம்பிக்க முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் " என்று பழனி விஜயகுமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment