கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் காணப்படும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான பல தோட்டங்கள் பாற்பண்ணை அபிவிருத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தோட்டங்களில் வாழுகின்ற தோட்ட தொழிலாளர்கள் பண்ணை தொழிலாளர்களாக மாற்றப்பட்டு இன்னும் பல வருடங்களுக்கு அடிமைகளாக வாழவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும். இதனை அபிவிருத்தி என காட்டி நியாயப்படுத்துவது எமது மக்களுக்கு செய்யும் துரோக செயலாகும்.
கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டங்கள் தேயிலை பயிர்செய்கைக்கு மிகவும் உகந்தவை. அவற்றிலே செழிப்பான தேயிலை பயிர்ச்செய்கை தற்போதும் நடைபெறுகின்றது. அவற்றில் தேயிலை பயிர் பழமையடைந்த பகுதிகளுக்கு மீள்நடுகை செய்யப்பட வேண்டும். அதன் மூலம் தோட்டங்கள் மேலும் செழிப்படையும். பெருந்தோட்டத்துறை பாதுகாக்கப்படும். எமது மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எமது சமூகத்தின் இருப்பு பாதுகாக்கப்படும். மாறாக அவற்றை பண்ணைகளை நடத்த தனியார் கம்பனிகளுக்கு வழங்குவதன் மூலம் எமது மக்களின் வாழ்க்கை முறை முற்றாக பாதிப்படையும். அது மட்டும் அல்லாது பண்ணை காரர்களுக்கு கூலி தொழிலாளியாக இன்னும் பல வருடங்கள் வாழவேண்டிய நிலை ஏற்படும்.
இத்தோட்டங்களில் உள்ள அனைத்து குடும்பங்களும் பாதுகாக்கப்படும் என அரசின் சார்பாக அரச தரப்பில் உள்ள எமது பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர். எமது அடையாளத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கின்ற காணிகளை தனியார் கம்பெனிக்கு பண்ணைகளை நடத்துவதற்கு கொடுத்த பின்னர் எவ்வாறு எமது மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்? இதற்கு முன்னரும் இதே போன்ற நிகழ்வுகளை கண்டி மாவட்ட தோட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். பல்லேகல தோட்டத்திற்கு சொந்தமான ஒரு பகுதியே இன்றைய மாபெரிதென்ன பண்ணை. இப்பண்ணை உருவாக்கி 5 தசாப்தங்கள் கடந்துள்ளது. இதே போல ஆசை வார்த்தைகள் கூறியே அன்றிருந்த தோட்டம் பண்ணையாக்கப்பட்டது. ஆனாலும் அங்கு வாழ்ந்த தோட்ட தொழிலாளர்கள் இன்றும் ஒரு அங்குல நிலம் அற்றவர்களாக லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். கண்டி மாவாவட்டத்தில் பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய, கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல பண்ணைகள் உள்ளது. ஹாரகம பண்ணை, கறந்த கொள்ள பண்ணை, மாபெரிதென்ன பண்ணை மற்றும் மாபெரிதென்ன பாற்பண்ணை போன்றவைகள் அவற்றில் உள்ளடங்கும். இப்பண்ணைகளில் அபிவிருத்தி செய்வதற்கு தாராளமாக காணி வசதிகள் உள்ளது. அவ்வாறு இறுக்கத்தக்கதாக தேயிலை பயிரிடக்கூடிய விளை நிலங்களை பாற்பண்ணை அபிவிருத்திக்கு எடுப்பது ஏன்?
இன்று வேலியே பயிரை மேயும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டங்கள் பக்கமே வந்தில்லாத, வரலாறு தெரியாதவர்கள் எமது மக்களுக்கு நடக்கும் துரோகத்தை நியாயப்படுத்தி பேசும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது எமது பிரதிநிதிகளுக்கும் அரசில் உள்ள அமைச்சர்களுக்கும் இடையிலான ஒரு கூட்டு வியாபார முயற்சி என்பது இதிலிருந்து தெளிவாக வெளிப்படுகின்றது. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்ட காணிகள் எமது மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும். அதன் படி அவை தோட்டத்தில் வாழுகின்ற மக்களை சிறு தேயிலை தோட்ட உடமையாளர்களாக ஆக்குவதற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை எனின் மீள் நடுகை செய்து இத்தோட்டங்கள் பராமரிக்கப்பட வேண்டும். மாறாக அவற்றை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த இடமளிக்க முடியாது. அதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இன்னும் பல தசாப்த காலங்களுக்கு எமது மக்களை அடிமைகளாக்கி, கூலி தொழிலாளர்களாக அடக்கி ஒடுக்க பார்க்கும் இச்செயற்பாட்டை ஒரு தடவை அல்ல, பல நூறு தடவைகள் 'முட்டாள்தனமானது' என நாங்கள் கூற ஒருபோதும் தயங்க மாட்டோம். எமது மக்களை காட்டி கொடுக்கும் இத் துரோக செயல் இன்று வெளிப்பட்டிருக்கிறது. இதற்க்கெதிராக மக்களோடு ஒன்று சேர்ந்து எழுந்து நிற்போம். எமது மக்களின் காணிகள் எமது மக்களின் கைகளுக்கு சேரும் வரை எமது போராட்டம் தொடரும்.
0 comments :
Post a Comment