ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் தமிழ்-முஸ்லிம் உறவை பற்றி அதிகம் சிந்தித்தார். அவர் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது அனைத்து இனத்தவருக்கும் அளப்பரிய சேவைகளைப் புரிந்துள்ளார். அவரை இங்கு நினைவுகூர்வதில் பெருமைப்படுகிறேன் என காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
மர்ஹும் அஷ்ரபின் 21ஆவது நினைவேந்தல் பிரேரணையை முன்வைத்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காரைதீவு பிரதேசசபையின் 43ஆவது சபை அமர்வு தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது. அதில் பேசிய அவர் மேலும் கூறியதாவது;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், மர்ஹும் அஷ்ரப் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த முத்து. நாங்கள் ஒவ்வொரு வருடமும் அவருடைய நினைவு தினமான செப்டம்பர் 16 ஆம் திகதி ஒவ்வொரு பிரதேசமாக, மிகவும் கண்ணியத்துடன் நினைவுபடுத்தி வந்தோம். நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனாவின் கொடிய தாக்கம் காரணமாக அதை எங்களுக்கு தற்போது செய்ய முடியாமல் போயிற்று. அதையொட்டி தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற ஒற்றுமையைப் பறைசாற்றும் முகமாக தவிசாளரின் அனுமதியைப் பெற்று, அவரை நினைவுபடுத்த, இப்பிரதேச சபையிலே ஒரு பிரேரணையாகக் கொண்டு வந்தேன். முதற் கண் இந்தப் பிரதேச சபையிலே தலைவர் அஷ்ரபுக்காக இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்ததற்கு இந்தப் பிரதேச சபைக்கும் தவிசாளருக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
எங்கள் தலைமையைப் பற்றிக் கூறுவதானால் ஒரு நாள் போதாது. இருந்தாலும் தலைவர் 1975 இல் சட்டத்தரணியாக வெளிவந்தவர். அவர் அரசியலுக்கு வர முன்னரே சமூக சேவைப்பற்றாளராக இருந்தவர். 1976 இல் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, நிந்தவூரில் நிகழ்வொன்றுக்காக அழைக்கப்பட்டிருந்தார். அவ்விழாவில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது, அவ்வுரையை மர்ஹும் அஷ்ரப் தமிழில் மொழிபெயர்த்தார். ஸ்ரீமாவோ அம்மையாருக்கும் மர்ஹும் அஷ்ரபுக்கும் இடையே உள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்களுக்கான கட்சி அமைப்பாகவும் கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணி முஸ்லிம்களுக்கான கட்சி அமைப்பாகவும் இருந்து கொண்டிருக்கின்ற அந்தக் காலகட்டத்தில், கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் ஓர் அங்கத்தவராகத்தான் அஷ்ரப் இருந்தார். அப்போது, தமிழர் விடுதலைக் கூட்டணி கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணியுடன், தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஒப்பந்தமொன்றைச் செய்தது. அப்போது பாராளுமன்ற தேர்தலுக்கு அப்பால் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடைபெற்றது. அதிலே தமிழ் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணி போட்டியிட்டது. அதில் முஸ்லிம் பிரதிநிதிகள் ஒரு சிலர் போட்டியிட்ட போதும் யாரும் தெரிவு செய்யப்படவில்லை. அதன் பிறகுதான் வடகிழக்கிலே உள்ள முஸ்லிம்களுக்கு அரசியல் அந்தஸ்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் மர்ஹும் அஷ்ரப் 1980ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். பல சவால்களுக்கு மத்தியில் 1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதனை ஒரு கட்சியாகப் பதிவு செய்தார். தமிழ் கட்சிகளான ரெலோ, புளோட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளும் அந்த ஆண்டில்தான் பதிவு செய்யப்பட்டன.
நாட்டில் பாரிய யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த காலப்பகுதியிலே அரசு தேர்தல் ஒன்றை முன்வைத்தது. 1988ஆம் ஆண்டு வடகிழக்கு இணைந்திருந்த காலம். அந்த நேரத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. அத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை ரீதியாக 12 உறுப்பினர்களைப்; பெற்று நாட்டிலே தேசிய அரசியல் கட்சியாக உருவாக்கம் பெற்றது. அதன் பின்னர் பாராளுமன்றம் சென்ற அவர், 1994ஆம் ஆண்டு மேல் மாகாண முதலமைச்சராக இருந்த சந்திரிக்காவை நாட்டின்; ஜனாதிபதியாக்கிய பெருமையும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கின்றது.
நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு அரசியல் அந்தஸ்தைக் கொடுத்து அவர் செய்த பாரிய அபிவிருத்திகளைச் செய்தார். அவர் தமிழ்-முஸ்லிம் உறவுகளைப் பற்றி அதிகம் சிந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசில் பல அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்து முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது அனைத்து இனத்தவருக்கும் பாரிய சேவைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக சொல்லப்போனால் தென்கிழக்குப் பல்கலைக்கழகம். தென்கிழக்கிலே ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்பது எமது கனவாக இருந்தாலும் அதனை மர்ஹும்; அஷ்ரப் நனவாக்கினார். தென்கிழக்கிலே ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், தற்போது முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது மூன்று இனங்களும் கல்வி கற்கின்ற ஒரு கலாசாலையாகத் திகழ்கின்றது.
கதிராமத்தம்பி மு.கா.வின் காரைதீவு அமைப்பாளராக நியமித்திருந்தார். அவர் மூலமாக காரைதீவில் துறைமுக, சமூர்த்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சுக்களில் வேலை வாய்ப்புகளை மர்ஹும் அஷ்ரப் வழங்கினார். மாளிகைக்காட்டில் நடந்த நிகழ்வொன்றில் மர்ஹும் அஷ்ரபிடம் சண்முகா வித்தியாலயத்தில் உள்ள கட்டட பற்றாக்குறை பற்றி இவ்வித்தியாலய அதிபர் கூறிய போது, இவ்விடத்திலேயே 15 இலட்சம் ரூபா காசோலையை வழங்கினார். அவ் அதிபர், இப்படி ஒரு தலைவரா? என்று வியந்து பேசும் அளவுக்கு அளப்பரிய சேவைகளைப் புரிந்துள்ளார்.
காரைதீவிலே விபுலானந்தருடைய மணிமண்டபத்தை கட்டுவதற்காக 50 இலட்சம் ரூபா நிதியை வழங்கினார். இவ்வாறு தமிழ்-முஸ்லிம் உறவுகளுடன் மிகவும் இறுக்கமாக மாபெரும் தலைவர்இ முன்னாள் அமைச்சர் மர்ஹும் அஷ்ரப் பேணி வந்தார்.
உள்ள10ர் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. இன்றைய பாராளுமன்ற அமைச்சர்களுக்கும் அரசியல் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் முகவரியையும் பெற்றுக்கொடுத்தவர் மர்ஹும் அஷ்ரப் என்பதை நான் இந்த இடத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், இந்தக் கட்சி ஊடாக இந்த முகவரியிலே உதித்தவர்கள் இந்த கட்சிக்கு எதிராக சென்ற போது எங்கள் மனம் குமுறுகிறது.
எனவே, மறைந்த தலைவர், மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரபினுடைய பாவங்களை இறைவன் மன்னித்து உயர்ந்த சுவர்க்கமான ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்க வேண்டுமென்று பிரார்த்தித்து விடைபெறுகிறேன்.
இந்நிகழ்வில் சபையின் தவிசாளர் கே. ஜெயசிறில், உபதவிசாளர் ஏ.எம். ஜாகிர், உறுப்பினர்களான எம்.என்.எம். றனீஸ், எம்.எஸ்.ஜலீல், ஏ.ஆர்.எம். பஸ்மீர், ஆகியோரும் நினைவுரையாற்றினர். இப்பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
0 comments :
Post a Comment