கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்திற்கு மிக நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த பொதுக்கிணறு ஒன்று கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகரில் பிரபலமாக இயங்கி வருகின்ற திரு இருதயநாதர் ஆலயத்தில் சமய ஆராதனைகளுக்கு வருகின்ற பக்தர்களுக்கும் ஞாயிறு அறநெறி வகுப்புகளில் பங்குபற்றுகின்ற மாணவர்களுக்கும் ஆலய வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாதிருந்தமை நீண்ட கால குறைபாடாக காணப்பட்டது. இப்பிரச்சினையை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆர்.செலஸ்டினா அவர்கள், மாநகர பிரதி முதல்வரும் மேற்படி அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இதையடுத்து, அவர் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக குறித்த ஆலய வளாகத்தில் பொதுக்கிணறு ஒன்று துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை (02) மாலை அவரது பங்கேற்புடன் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ஆர்.செலஸ்டினா மற்றும் ஆலய தலைமை நிர்வாகி உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது உரையாற்றிய பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள், இவ்வாறான பயன்மிக்கதும் நிலைபேறானதுமான நல்லிணக்க செயற்பாட்டை தமது அமைப்பு முன்னெடுப்பதற்கு உதவிய வை.டபிள்யு.எம்.ஏ. (YWMA) நிறுவனத்துக்கு தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment