இலங்கை தகவல் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் மஹபொல நம்பிக்கை நிதியம் பற்றி பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22) ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
ண்டி மாவட்டத்தின் எனது சக பாராளுமன்ற உறுப்பினரான விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறான சில சிக்கலான விடயங்களை முன்வைப்பதில் வெகு சமர்த்தர். ஆனால்,இந்த நாட்களிலும், அண்மைய பாராளுமன்ற வரலாற்றிலும் எரிக்கப்பட்ட கொடும்பாவிகளில் அநேகமானவை அவருடையவை என்பது துரதிர்ஷ்டவசமானது. நாடெங்கிலும் விவசாயிகள் அவரது கொடும்பாவியை எரித்த வண்ணமேயுள்ளனர். அது இப்பொழுது பேசுபொருளாகவே மாறியுள்ளது.

அவ்வாறிருக்க, இன்று நாட்டில் தலைத்தூக்கியுள்ள இரசாயனப் பசளை மற்றும் சேதனப் பசளை என்ற பிரச்சினையை ஒருபுறம் வைத்துவிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் லக்
ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டவாறு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COMMITTEE ON PUBLIC ENTERPRISES) வின் அறிக்கை மற்றும் அதன் மீது சபாநாயகர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பன முக்கியமானவை. அவ்வாறான அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டவுடனேயே அது பாராளுமன்றத்திற்கு உரித்தாகி விடுகின்றது.

நடவடிக்கை எடுப்பதற்காக அது முன்னரும் ஒருமுறை அனுப்பப்பட்டிருந்தது. அது பற்றி பிரஸ்தாப குழுவினால் விதந்துரைக்கப்பட்டவாறு அது தொடர்பிலான முன்னெடுப்பை சட்டமா அதிபர் திணைக்களம், லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் துறை என்பன மேற்கொள்வதை கண்காணிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆகையால், அதன் மீது கவனஞ் செலுத்தப்படும் என நம்புகிறேன்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்பான குறித்த அறிக்கை பற்றிய விடயம் சுவாரஷ்யமானதாகும்.இந்த விவகாரம் பற்றிய விசாரணையைப் பொறுத்தமட்டில் முன்னர் இந்த நிறுவனத்திற்கு அமைச்சராக நான் இரு முறை பதவி வகித்துள்ளேன். 2000ஆம் 2001 ஆம் ஆண்டுகளில் நான் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் இந்நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இருந்து வந்தது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டில் நான் உயர் கல்விக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தபோதும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் , மஹபொல நம்பிக்கை நிதியமும் எனது அமைச்சின் பொறுப்பிலேயே இருந்து வந்தன.

அதன்போது , எனது அமைச்சின் செயலாளராக இருந்த பிரியந்த மாயாதுன்னே எனது ஒப்பத்துடன் என் ஊடாக பிரஸ்தாப இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை உயர் கல்வி அமைச்சின் பொறுப்பிலிருந்து விடுவிப்பதற்கான ஓர் அமைச்சரவை பத்திரத்தைத் தயாரித்தளித்தார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அமைப்பு செயற்பாடுகள், மற்றும் அனைத்து ஒழுங்கமைப்புகள் என்பன தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகளும், ஒழுங்கீனங்களும் இருந்து வந்திருக்கின்றன. கோப் (COPE) குழுவிற்கு முறையிட்டதையடுத்து, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், மஹபொல நம்பிக்கை நிதியத்திற்குமான தொடர்பு குறித்து இங்கு கேள்வியெழுப்பப்படுகின்றது.பிரஸ்தாப குழு பாராளுமன்றத்திற்கு அறிக்கையிட்டதைத் தொடர்ந்து இப்போதைய நிர்வாகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம்,மஹபொல நம்பிக்கை நிதியத்திற்கு எந்த வித த்திலும் உரியதல்ல வென கேள்வியெழுப்புகின்றது.ஆனால், அந்த நிறுவனத்திற்கான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ள காணியை மஹபொல நம்பிக்கை நிதியம் வாடகைக்கு விட்டிருந்துள்ளது.

பல விதங்களில் இந்த விவகாரம் கையாளப்படுகின்றது. அமைச்சரவை பத்திரமானது பிரஸ்தாப நிறுவனத்தை மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பகுதியாக செயற்படுவதற்கான நோக்கத்துடனேயே முன்வைக்கப்பட்டதாக அதன் தற்போதைய நிர்வாகம் கருதுகின்றது.

முன்னதாக, 1998, 1999,ஆம் ஆண்டுகளிலும், அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிர்வாகம் , அதனை ஆதாயமீட்டும் நோக்கமற்ற ஒர் உத்தரவாதமளிக்கப்பட்ட கம்பெனியாகக் குறிப்பிடுகின்றது. நிதியமைச்சின் அவதானிப்பு அந்த நிறுவனத்தை ஏற்படுத்துவதற்கு எதிரானதாக இருந்ததால், அரச நிதி ஒதுக்கீட்டிலிருந்து அதனைச் செய்ய முடியவில்லை. சில தனி நபர்கள் அதற்கான முதலீடுகளை மேற்கொண்டனர்.

எங்களது அறிக்கையில் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளோம். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைச்சரவை உபகுழு இந்த விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டிருந்தது.

உலகில் பிரசித்தம் வாய்ந்த ஹாவர்ட், யேல் ஸ்டன்போர்ட் போன்ற பல்கலைக்கழகங்கள் கூட, வருமானமீட்டும் நோக்கமின்றி, நிதியங்களினூடாகவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவற்றை நல்ல முன்னுதாரணமாக கொள்வது ஒருவகையில் வரவேற்கத்தக்கதாகும்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து ஆண்டுதோறும் முன்னர் 200 மாணவர்களே தகவல் தொழில் நுட்ப பட்டதாரிகளாக வெளியேறினர். இப்போது 3000 க்கு மேற்பட்ட பட்டதாரிகள் அந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து கற்று வெளியேறுவது குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணிக்கை நாட்டின் முழு தகவல் தொழில் நுட்ப பட்டதாரிகளின் மொத்த எண்ணிக்கையில் அரைவாசியாகும்.

ஆகையால், இது மிக முக்கியமானதொரு நிறுவனமாகும். இதன் எதிர்கால செயற்பாடுகள் , அமைப்பு திட்டமிடல் என்பனவும் அது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வருகின்றதா, அரச பல்கலைக்கழகமா அல்லது, அரச பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமா? அல்ல து அதனை ஓர் அரச சார்பற்ற பல்கலைக்கழகமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா? என்பன பற்றியெல்லாம் கவனஞ் செலுத்தப்பட வேண்டும். அல்ல து கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைப் போல பட்டம் வழங்கும் தகுதி வாய்ந்த நிறுவனமாக ஏற்றுக் கொள்வதா என்ப து பற்றியும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்.

சட்டமா அதிபர் இந்த நிறுவனம் பற்றி எல்லா ஆவணங்களையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார். எங்களது கோப் அறிக்கையின் 21 ஆம் பக்கத்தில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்.
முக்கியமான ஆவணங்கள் பரிசீலிக்கப்படாததாலேயே பல பிரச்சினைகள் தலைத்தூக்கியுள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது போயுள்ளது.

பிரஸ்தாப நிறுவனத்தின் தரப்பில் அவர்களது சட்டத்தரணிகள் மூலம் கோப் குழுவின் முன் தாம் தோன்ற வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளனர். அவர்களின் நிறுவனத்தின் குறைகளை ஆராய்வதற்கு குறிப்பாக சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்காமல் கோப் குழுவின் முன்னிலையில் வந்து அவர்களது பக்க நியாயங்களைக் கூறலாம். அவர்கள் உரிய ஆதாரங்களை முன்வைத்து நியாயமான காரணங்களை எங்களிடம் கூறினால் சிலவேளை நாங்கள் அவர்களைக் குறை காணாமல் விடலாம்.

கணக்காளர் நாயகம் அறிக்கையிடுவதையும் அவர்கள் ஆட்சேபிக்கின்றனர்.

லிட்ரோ கேஸ்,லாப் கேஸ் நிறுவனத்தாரும் இவ்வாறான கடிதங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவிற்கு(( COPE) அனுப்புகின்றனர். எங்களுக்குஅவற்றை விசாரிக்க முடியாது என்கின்றனர். அவர்கள் நேரில் வந்து எங்களிடம் அவர்களது நிலைப்பாட்டை கூறலாம்.

அதைவிடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு போய் அவர்கள் தடையுத்தரவை பெற முயற்சித்தாலும், எங்களது செயற்பாட்டை அவர்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது. பாராளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரமுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே கூறியவாறும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தவாறும் சபாநாயக்கருக்கு அதிகாரம் இருக்கின்றது. இப்பொழுது இவை பாராளுமன்றத்திற்கு உரிய ஆவணங்களாகும். ஆகையால், அவை குறித்து சபாநாயகர் உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :