மட்டக்களப்பு பிரதேசத்தில் சேதனப்பசளை தயாரிக்கும் ஐந்து நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்எம். சந்திரசேன



றாவூர் நிருபர்- நாஸர்- மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு பதார்த்தத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்ய அரசாங்கம் அனுமதிவழங்கமாட்டாதென காணி அமைச்சர் எஸ்எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் வேறுசில நாடுகளிலிலிருந்தும் இரசாயன நச்சுப் பதார்த்தங்களையும் குப்பைகளையும் அரசாங்கம் இறக்குமதி செய்வதாக சிலர் பிரசாரம் செய்வது உண்மைக்குப்புறம்பானதென்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு- சந்திவெளி பிரதேசத்தில் சேதனப்பசளை தயாரிக்கும் ஐந்து நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்எம். சந்திரசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என். விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திர காந்தன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு உள்ளிட்ட பலர் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.

அமைச்சர் சந்திரசேன இங்கு மேலும் உரையாற்றுகையில்; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டைக்கட்டியெழுப்பும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் கொரோணா அனர்த்தத்தை முழுமையாக ஒழிப்பதற்கு அயராது நடவடிக்கை எடுத்துவருகிறார்.

இதற்கிடையே சேதனப்பசளை பயன்பாட்டின்மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்கச்செய்வதற்கு ஜனாதிபதி தீர்மானத்தை எடுத்தது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவேயாகும்.
காரணம் என்னவென்றால்- எமது நாட்டில் சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகிய தொற்றா வியாதிகளினால் பாதிக்கப்பட்டு இன்னும் அடையாளம் காணப்படாத பலர் சமூகத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
குறிப்பாக எமது நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாண மக்கள் இன்னும் சேதனப்பசளை பாவனைக்கு உட்படவில்லை.
ஆனால் பல்வேறு விமரிசனங்களைச் செய்துவருகிறார்கள்;. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள விவசாயிகள் பல காலங்களுக்கு முன்னரே சேதனப்பசளை பயன்பாட்டினை மேற்கொண்டுவருகின்றனர். இதனால் வடக்கு கிழக்கு மாகாண மக்களை சேதனப்பசளை பயன்பாட்டிற்கு உட்படுத்துவது சுலபமாகவுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்டுள்ள சேதனப்பசளை குவியலைப்பார்க்கும்போது அந்த விடயம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இரசாயன உரம்மூலம் அதிகளவு விளைச்சலைப் பெற்றுக்கொண்டாலும் அதன்பயன்பாடு மக்களுக்கோ பொருளாதார மேம்பாட்டிற்கோ உதவப்போவதில்லை. மாறாக நச்சு உணவு உற்பத்தியின் பிரதிபலனாக சுகாதாரத் துறைக்கான செலவினம் அதிகரிக்கிறது. இவ்விடயம் பலருக்கு விளங்குவதில்லை.

எமக்குத் தெரியும் சேதனப்பசளை பயன்பாட்டின்மூலம் உற்பத்திசெய்யப்பட்ட நெல் ஏனைய தானியங்கள், மரக்கறி மற்றும் பழவகைகளை நுகரும்பட்சத்தில் அரசாங்கத்திற்கு சுகாதாரத்துறைக்கான செலவினம் குறைவடையும்.
அந்தவகையில் அதிகம்பேர் முன்னோக்கிப்பார்ப்பதில்லை குறுகிய பார்வையுடன் அரசாங்கத்தை விமரிசிக்கின்றனர்.

சேதனப்பசனை பாவனை தொடர்பில் நாம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னரே தீர்மானத்திற்கு வந்தோம். எனினும் சேதனப்பசளை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றோம். அதனால் எமக்கு தற்போதைய பெரும்போக விவசாயச்செய்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட்டாலும் மிகக்குறுகியகாலத்தில் நாம் வெற்றியடைவோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கம் சீனாவிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் நச்சுப்பதார்த்தங்களையும் குப்பைகளையும் இறக்குமதி செய்வதாக விமரிசனம் எழுந்துள்ளது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு பொருளையும் நாம் இறக்குமதி செய்யமாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

ஆனால் காபன் நைதரன் போன்ற பதார்த்தங்களை தற்காலிகமாக சிலநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஒருவருடகாலத்தில் அவற்றை சீனாவிலிருந்தோ வேறு நாடுகளிலிருந்தோ இறக்குமதி செய்யவேண்டிய அவசியமேற்படாது. எமது நாட்டிற்குத் தேவையான காபன் நைதரசனை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :