அமைச்சர் மற்றும் இலங்கை எரிசக்தி அமைச்சின் தூதுக்குழுவினருக்காக, தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் பல சந்திப்புக்களையும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது.
ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் கலாநிதி. ஜவாட் ஓவ்ஜியை சந்தித்த அமைச்சர் உதய கம்மன்பில, பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கிடையேயான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகள் மற்றும் வழிமுறைகளைக் கண்டறிவதற்கு ஒப்புக்கொண்டார். ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. அக்பர் கோமிஜானியைச் சந்தித்த இலங்கைத் தூதுக்குழு, இரு நாடுகளுக்கும் இடையில் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.
ஈரானின் பொருளாதார இராஜதந்திர பிரதி வெளிநாட்டு அமைச்சர் மஹ்தி சஃபாரியை இலங்கை தூதுக்குழு சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழவை பரஸ்பரம் வசதியான திகதியில் கூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
தெஹ்ரானில் உள்ள துர்க்மெனிஸ்தான் தூதுவர் குர்பானோவ் அஹ்மத் ககபாயேவிச்சுடன் தூதுக்குழு ஒரு பயனுள்ள கலந்துரையாடலை நடாத்தியது. கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
தெஹ்ரானில் உள்ள தூதரக வளாகத்திற்கு அமைச்சர் விஜயம் செய்த போது, ஈரானில் உள்ள தனியார் துறையைச் சேர்ந்த முக்கிய வணிகர்கள் மற்றும் சுற்றுலாத் துறை சங்கங்களின் தலைவர்களுடனான பல பயனுள்ள சந்திப்புக்களை தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. இந்தக் கலந்துரையாடல்களில், கோவிட்-19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறைகளைத் தக்கவைத்து, மீண்டும் ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கம்மன்பில விவரித்தார்.
ஈரானிய பெட்ரோலிய அமைச்சு தூதரகத்துடன் ஒருங்கிணைந்து தெஹ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிவாயு நிலைய அருங்காட்சியகத்தை பார்வையிட ஏற்பாடு செய்தது. தூதுக்குழுவினரை அதன் தலைவர்கள் அன்புடன் வரவேற்றனர்.
அமைச்சர் உதய கம்மன்பிலவின் தலைமையிலான இலங்கைக் குழுவினருடனான சந்திப்பின் போது தூதுவர் ஜி.எம்.வி. விஷ்வநாத் அபொன்சு பங்கேற்றதுடன், செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மகேந்திர குருசிங்க ஆகியோர் பிரதிநிதிகள் குழுவில் இணைந்திருந்தனர்.
இலங்கைத் தூதரகம்,
தெஹ்ரான்
0 comments :
Post a Comment