ஐம்பத்தி மூவாயிரம் பட்டதாரி பயிலுனர்களுக்கு உடனடியாக 2021.09.03ம் திகதியிடப்பட்டு பட்டதாரி பயிலுனர் ஒரு வருட பூர்த்தி என்று நிரந்தர நியமனத்தினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயற்பாட்டாளர் எல்.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினரின் ஊடக சந்திப்பு வாழைச்சேனையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதி ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தில் நாற்பத்தி மூவாயிரம் பேருக்கு பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் வழங்கப்பட்டது. நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. அத்தோடு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நியமனம் வழங்கப்பட்டது. அந்த வகையில் மொத்தமாக ஐம்பத்தி மூவாயிரம் பட்டதாரி பயிலுனர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் பட்டதாரிகள் சங்கத்தினால் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வழங்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியினால் இரண்டு மூன்று மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. இதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
ஆனால் எங்களது நிரந்தர நியமனம் இழுபறியாகவே செல்கின்றது. எங்களுக்கு வழங்கப்படும் இருபதாயிரம் கொடுப்பனவில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் காரணமாக பொருளாதார ரீதியில் நெருக்கடியினை சந்தித்து வருகின்றோம். எங்களது ஜீவனோபாயத்தினை கொண்டு செல்ல முடியாது கஷ்டமான நிலைமையே காணப்படுகின்றது.
எனவே எங்களது கோரிக்கைகளாக 2021.09.03ம் திகதியிடப்பட்டு பட்டதாரி பயிலுனர் ஒரு வருட பூர்த்தி என்று ஐம்பத்தி மூவாயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமத்தினை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அத்தோடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் அழைக்கப்படுகின்றனர். சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிரந்தர நியமனத்தில் வேலை செய்பவர்களுக்கு இடர் கொடுப்பனவு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆனால் நிரந்தர நியமனம் பெற்றவர்கள் போன்று வேலை செய்யும் பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்படவில்லை.
அத்தோடு சமுர்த்தி திணைக்களத்தில் வேலை ஐந்து நாட்களும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையிலும் வேலை செய்கின்றனர். அவர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவில்லை. பாடசாலைகளில் ஆசிரியர் பயிலுனர்களாக இணைக்கப்பட்டவர்களை பிரதேச செயலகம் மற்றும் வேறு திணைக்களங்களுக்கும் அழைக்கப்படுகின்றார்கள். இதனால் இணையவளி மூலம் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்படுகின்றது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எங்களது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் என்றார்.
ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் எம்.ஏ.எம்.இஸ்ஸத், உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment