கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள வருவோர், கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு திகதி மற்றும் நேரம் என்பன நிறைவடைந்துள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்கான திகதிகளே இனிமேல் வழங்கப்படும் எனவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவுகின்ற கொவிட் தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்கள், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் போன்றோருக்கு, இச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணையத்தளத்தின் ஊடாக முற்பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்றும், திணைக்கள ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சேவையைப் பெற வருவோரின் தேவை கருதி, ஒதுக்கப்பட்ட சந்திப்பு நேரத்தில் மாத்திரம் தவறாது சமூகமளிக்குமாறும், குறித்த நேரத்திற்கு முன்கூட்டியோ அல்லது தாமதித்தோ வருபவர்களின் தேவைகள் எக்காரணம் கொண்டும் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இங்கு சமூகமளிப்பதற்கு முன் கடவுச்சீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை கவனமாக வாசித்து சமர்ப்பிக்குமாறும், மேலும் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள வருவதற்கு முன், 0707101060, 0707101070 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்வதன் மூலம், வீண் அலைச்சல் இன்றி சிறந்த சேவையொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன் பதிவுகளை மேற்கொள்வதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://eservices.immigration.gov.lk/appointment/pages/reservationApplication
0 comments :
Post a Comment