இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா! (படங்கள்)



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டுகள் நிறைவினை சிறப்பிக்கும் வெள்ளி விழா நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (23.10.2021) காலை 10 மணிக்கு பல்கலைக்கழக மகாநாட்டு மண்டபத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தலைமையில் இடம்பெற்றன. இந்நிகழ்வோடு இணைந்ததாக பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தின சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. அரசாங்கத்தின் கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெள்ளி விழா நிகழ்வின் தொடக்க நிகழ்வாக கடந்த 21.10.2021 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மர நடுகை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இன்றைய உத்தியோகபூர்வ நிகழ்வு காலை 10 மணிக்கு மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வின் அடுத்த அம்சமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. வரவேற்புரையினை பொறியியல் பீடத்தினுடைய பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜூனைடீன் நிகழ்த்தினார். அடுத்ததாக பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களது உரை பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்களால் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்தாபக பதிவாளர் ஏ.எல். ஜெளஃபர் சாதிக், ஸ்தாபக நிதியாளர் குலாம் றஷீத் ஆகியோரது உரைகளும் இடம்பெற்றன.

இவர்களது உரையினை அடுத்து, பல்கலைக்கழக வெள்ளி விழா சிறப்புரை இடம்பெற்றது. இவ்வுரை பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவினால் நிகழ்த்தப்பட்டது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கடந்த 25 ஆண்டுகால கல்விப் பயணம் குறித்தும் அதன்போதான அடைவுகள், எதிர்காலத்தில் இப்பல்கலைக்கழகம் பயணிக்க வேண்டிய பாதை உள்ளிட்ட விடயங்களை அவரது உரை குறிப்புணர்த்தியது.

உபவேந்தர் உரையினைத் தொடர்ந்து, வெள்ளி விழா நினைவு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நினைவு மலர் அதன் பதிப்பாசிரியரும் நூலகருமான எம்.எம். றிபாயுடீன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வு வெளியீடுகளுக்கான உபவேந்தர் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

2020ஆம் ஆண்டுக்கான உபவேந்தர் விருதுகளை கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எம். பாஸில், கலாநிதி எஸ்.எம். அய்யூப், முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த பேராசிரியர் கே.எம். முபாறக், பேராசிரியர் எஸ். சப்றாஸ் நவாஸ், பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால், தொழில்நுட்ப பீடத்தினைச் சேர்ந்த கலாநிதி யு.எல்.ஏ. மஜீட், கலாநிதி எம்.ஜீ.எம். தாரிக், கலாநிதி ஏ.என்.எம். முபாறக், கலாநிதி ஏ.டீ.என்.ரீ. குமார, கலாநிதி முனீப் எம். முஸ்தபா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

2021ஆம் ஆண்டுக்கான உபவேந்தர் விருது வழங்கலில், கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ், எம்.ஏ.எம். பௌசர், பொறியியல் பீடத்தினைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எம். முஷாதிக் ஆகியோருக்கு உபவேந்தர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
வெள்ளி விழா நிகழ்வோடு இணைந்ததாக வருடாந்த பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தின சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இச்சிறப்புரையினை பல்கலைக்கழக ஸ்தாபகரின் மருமகனும் வைத்தியருமான எம்.ஏ.எம். ஜெஸீம் அவர்கள் இணைய வழியினூடாக நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. அவர் தனது உரையில், பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை நினைவுகூர்ந்ததுடன் அவரது காத்திரமான பங்களிப்புக்கள் குறித்தும் சிலாகித்துப் பேசியிருந்தார்.

வெள்ளி விழா நிகழ்வின் அடுத்த முக்கிய விடயமாக, பல்கலைக்கழக நூலகத்திற்கான நூல்கள் பல அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தின் ஆவணப் படமொன்றும் திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களது விசேட உரை இடம்பெற்றது. இவ்வுரையில் உபவேந்தர், பல்கலைக்கத்தின் ஸ்தாபகர்களை நினைவுகூர்ந்ததுடன் பல்கலைக்கழகத்தின் கடந்த கால நிலையினையும் சமகாலப் போக்கினையும் தெளிவாகச் சுட்டிக் காட்டிப் பேசியிருந்தார். அரசாங்கத்தின் தொலைநோக்கிற்கு அமைய எமது பல்கலைக்கழகம் முயற்சியாளர்களையும் தொழில்நுட்பவியலாளர்களையும் உருவாக்கும் ஒரு உயர் கல்வி கேந்திர நிலையமாக மாறவேண்டியதன் அவசியத்தினையும் அவர் எடுத்துரைத்தார்.
இறுதியாக நன்றியுரையினை பல்கலைக்கழக பதிவாளர் எம்.எச். சத்தார் நிகழ்த்தினார். அவரது நன்றியுரையினைத் தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில் வெள்ளி விழா உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.

உத்தியோகபூர்வ நிகழ்வுகள் முடிவுற்றதும் பல்கலைக்கழக நூலகத்தின் ஆவணக்காப்பக பிரிவு உபவேந்தரினால் திறந்துவைக்கப்பட்டதுடன் “ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே இலங்கை” என்ற தொனிப்பொருளிலான புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது.


ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :