ஆனால், தோட்ட அதிகாரிகளின் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணம் தொழிலாளரின் விரக்தி மனநிலையே. இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு அவர்களது வாழ்வாதாரம் உடைந்து நொறுங்கியுள்ளது. இதை சீர் செய்யாமல், அழிந்து வரும் பெருந்தோட்ட தொழில் துறையை சீர்த்திருத்தாமல் விரக்தி நிலையில் இருக்கும் தொழிலாளரை மாத்திரம் குறை கூற கூடாது.
தொழிலாளரதும், தோட்ட நிறுவனங்களதும் வருமான வீழ்ச்சி, தொழிலாளரின் விரக்தி நிலைமை, தொழிற்துறை சீர்கேடு ஆகிய இன்றைய சிக்கல்கள் எதுவும் ஆளுகின்ற அரசாங்கத்தின் கவனத்துக்கு இன்னமும் வரவில்லையா என கேட்கிறேன். அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக கட்சிக்கும் நிலைமையின் பாரதூரம் புரியவில்லையா என கேட்கிறேன். இந்த மௌனம் எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. நிலைமையை சீர்செய்ய தம்மால் எதுவும் செய்ய முடியாத ஒரு கள்ள மௌனமா இது, எனவும் எனக்கு தெரியவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சமீப வரலாற்றில், மிக மோசமான முறையில் இன்று கீழிறங்கி இருப்பதாலேயே இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. தோட்டங்களில் வீடமைப்பு உட்பட நாம் ஆரம்பித்த அனைத்து நடவடிக்கைகளும் இன்று நின்று போயுள்ளன. தொழிலாள குடும்பங்களின் வாழ்நிலை முன்னெப்போதும் இல்லாத முறையில் இன்று மிக மோசமாக இருக்கின்றது. பெருந்தோட்ட தொழில்துறையின் வீழ்ச்சியே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
தொழிலாளருக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதற்கான வருமானம் தமக்கு இல்லை என முகாமை நிறுவனங்கள் கூறுகின்றன. அப்படியானால் இதற்கு தீர்வு என்ன? சம்பள விவகாரத்தை அப்படியே நீதிமன்ற வழக்குக்கு விட்டுவிட்டு அனைவரும் தூங்குகிறார்கள்.
பெருந்தோட்டங்களில் வாழும் மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்று தொழில் செய்ய உரிமை வழங்கப்பட வேண்டும். கால்நடை வளர்ப்பு, காய்கறி வளர்ப்பு ஆகிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கான அரசாங்க உதவிகள், ஒத்தாசைகள் வழங்கப்பட வேண்டும்.
இன்று பல தோட்டங்களில், பல நிறுவனங்களால், வெளிவாரி பயிர்செய்கை முறைமை முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், இதில் ஒரு பொது ஒழுங்கு முறைமை இல்லை. தோட்டத்திற்கு தோட்டம், நிறுவனங்களுக்கு நிறுவனம் மாறுபடும் முறைமைகள் இருக்கின்றன. இதில், தோட்டங்களும் இலாபமடைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர்களும் வாழ வேண்டும். ஆனால், இதிலும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
மேலும் ஆண்டாண்டு காலமாக தோட்டங்களில் வாழும் மக்கள், தமது குடியிருப்புகளை சிறிது திருத்தியமைக்கவோ, சுய தேவைக்காக வீட்டு காய்கறி தோட்டங்களை அமைக்கவோகூட தோட்ட முகாமையாளர்கள் இடம் கொடுப்பது இல்லை. இவை வறுமையில் வாடும் தொழிலாளர்களின் விரக்தியை அதிகரிக்கின்றன.
மேலும் பெரும்பான்மை இனத்து கிராமத்தவர்களுக்கு தோட்டப்புற தரிசு காணிகள் வழங்கப்படும் போது, அவை ஆண்டாண்டு காலமாக தோட்டங்களில் வாழும் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இத்தகைய சம்பவங்கள் பல மாவட்டங்களில் நிகழ்ந்து எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவையும் தொழிலாளர்களின் விரக்தியை அதிகரிக்கின்றன.
இவைபற்றி தமக்கு ஒன்றுமே தெரியாது என தோட்ட முகாமையாளர்கள் கூற முடியாது. உண்மையில் இத்தகைய சம்பவங்களில் தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுடன் நேரடியாக தொடர்புபடுகின்றவர்கள், தோட்ட முகாமையாளர்கள்தான். இந்த அடிமட்ட பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களின் விரக்தி மனநிலை பற்றி தமது நிறுவனங்களுக்கு தோட்ட முகாமையாளர் சங்கம் ஆய்வறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இந்த மூலக்காரணங்களை கணக்கில் எடுக்காமல் தொழிலாளர்கள் மீது மாத்திரம் பழி சுமத்துவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காது. ஊக்குவிக்காது.
இந்நிலையில், இவை எதுவும் ஆளுகின்ற அரசாங்கத்தின் கவனத்துக்கு இன்னமும் வரவில்லையா என கேட்கிறேன். அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக கட்சிக்கும் நிலைமையின் பாரதூரம் புரியவில்லையா என கேட்கிறேன். இந்த மௌனம் எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. நிலைமைய சீர்செய்ய தம்மால் எதுவும் செய்ய முடியாத ஒரு கள்ள மௌனமா இது எனவும் எனக்கு தெரியவில்லை.
உரப்பிரச்சினை உட்பட பெருந் தோட்ட துறையில் நிலவும் சீர்கேடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், மலையக அரசியல் பிரதிநிதிகள், தோட்ட முகாமை நிறுவனங்கள், தோட்ட முகாமையாளர் சங்கத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் அழைத்து உடன் உரையாட வேண்டும். நிலைமை கைமீறி போய் சேதம் சீர்செய்ய முடியாத கட்டத்தை அடைய முன் அரசாங்கம் சேத தவிர்ப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான முன்முயற்சிகளை தோட்ட முகாமையாளர் சங்கம் எடுக்க வேண்டும்.
0 comments :
Post a Comment