ஆசிரியர் தினம்



ஏ.எம்.அஜாத்கான்-
சிரிய தொழில் என்பது உலகில் மிக முக்கியமான தொழிலாக விளங்குகிறது. ஆளுமை உருவாக்கம் மற்றும் அறிவாற்றல் செயல்முறை போன்றன ஆசிரியர்களின் கைகளில் உள்ளது.

ஒரு தொழில்முறை ஆசிரியரின் பணி என்பது சமூகத்திற்கு முக்கியமான ஒன்றாகும். ஆசிரியர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் ஒவ்வொரு மாணவர்களினதும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களின் சொந்த திறனைத் தெரிந்துகொள்ள புதிய வழிகளைக் கண்டுபிடித்து ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற வகையில் பாடங்களை கற்பிப்பதாகும். ஆசிரியம் ஒரு தூய்மையான பணியாகும் இதனால் இப்பணியை நிறைவேற்றுவோர் சமூகத்தில் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள்.

இவ்வகையில் சர்வதேச ஆசிரியர் தினம் (World Teachers' Day) ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவுகூறும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச ஆசிரியர் தினம் "உலகின் கல்வியாளர்களைப் பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்" ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும், ஆசிரியர்களுக்கான சிக்கல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகலாவிய ரீதியில் ஆசிரியர் தினமானது வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. சர்வதேச ஆசிரியர் தினமாக ஒக்டோபர் 5ஆம் திகதியும்,இலங்கையில் ஒக்டோபர் 6ஆம் திகதியும் இந்தியாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதகிருஸ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் திகதியும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே."எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவர்களின் மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களின் சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள் என்றால் மிகையாகாது.

அதாவது தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை நல்ல மாணவர்களாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகள் அதனை தம் வாழ்விலும் பின்பற்ற தூண்டப்படுகிறார்கள்.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் ஆசிரியர்களே. மாணவர்களுக்காக தம்மை அர்ப்பணித்த ஆசிரியர்கள் நன்றிக்கும்,மரியாதைக்கும் உரித்துடையவர்களே.
மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இவ்வகையில் ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகளை நோக்குவோமானால். இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர், ஏவுகனை நாயகன் அப்துல் கலாம் ஐயா அவர்கள் , நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத்தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவுகூர்ந்தால், அதுதான் பெருமை தரக் கூடிய தருணம்” என்றார்.ஆசிரியர் பற்றிய சில சிறப்பான பொன்மொழிகளை பின்வருமாறு நோக்கலாம்.

ஆசிரியர் என்பவர் கடினமான விஷயங்களை எளிதாக்கக்கூடிய ஒரு நபர். – ரால்ப் எமர்சன்
நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸண்டர்

சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள். – பெர்ஷியா ஆக்ஸ்டெட்

சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். – வில்லியம் ஆல்பர்ட்

ஆசிரியரின் பெருமைகள் அனைத்தும் மாணவர்களிடமும், அவர் விதைத்த விதைகளின் வளர்ச்சியிலும் உள்ளன. – டிமிட்ரி மெண்டலீவ்

ஆசிரியர்கள் மாணவர்களை சமூகமயப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் சமூகப் பிரிவினராவர். குடும்பங்கள் தமது பிள்ளைகளின் வளர்ச்சிப் பருவத்தில் அதிக ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ள போது , அதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் பாரிய பொறுப்பில் தொழில் சார்ந்த வகையில் ஈடுபட்டு வருபவர்கள் ஆசிரியர்கள்தான்.சமூக இலக்குகள் , சமூகதொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச் சக்கரமாக தொழிற்படும் பாடசாலைகளின் வினைத்திறனையும் விளைதிறனையும் தீர்மானிப்பவர்கள் ஆசிரியர்களே . ஆசிரியர்கள் ஒரு தொழில் செய்பவர்கள் என்ற நோக்கில் மாத்திரமன்றி சமூக மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள் என்ற முறையிலும் முக்கியமானவர்கள்.
இன்றைய அறிவியல் உலகில் மாற்றங்களை உள்வாங்கி செயற்படுத்தும் பங்காளிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்களேயாவர்.

இவ்வகையில் இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் பல்வேறு வகையில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். தற்காலத்தில் இலங்கையில் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினை முக்கிய ஒரு விடயமாக நோக்கப்படுகிறது.

அதிபர் ஆசிரியர்கள் கடந்த 24 வருட காலமாக தங்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப் படவில்லை என கூறுகின்றனர். பாடசாலைக் காலங்களில் மட்டுமல்லாது நாள் முழுவதும் மாணவர்களுக்காக உழைக்கும் ஆசியர்கள், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களின் சேவையை நிறைவுசெய்து கொள்வதில்லை. பாடசாலை முடிந்த பிறகு உள்ள நேரங்களில் அடுத்த நாளுக்காக தயார் படுத்துவதிலும் பயிற்சிகள் மற்றும் தயார் படுத்துவதிலும் தங்களை அர்ப்பணிக்கும் ஆசிரியர்களே உலகில் மேன்மை தங்கிய சேவையாளர்கள் என்பதே உண்மையாகும்.
ஆனால் இலங்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆசிறியர்களின் சேவைக்கு வழங்கப்படும் "வேதனம்"என்பது மிகக் குறைவு என கூற முடியும்.
அந்த வகையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் மீதுள்ள பாரிய பொறுப்பாகும்.
இந்நிலையில் உலக ஆசிரியர் தினம்-2021 ஒக்டோபர்-06 அன்று நாடு முழுவதும் உள்ள கோட்டக்கல்வி காரியாலயம் அமைந்துள்ள நகரத்தில் தமது போராட்டம் முன்னெடுக்கப்
படவுள்ளதாக அறிவித்து தொடர்ந்தும் தொழிற்சங்க போராட்டத்தில் ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு சாதகமான நிலைமையை இரு தரப்பாரும் ஏற்படுத்த வேண்டும் என்கின்ற விடயத்தை ஏற்றேயாக வேண்டும். மாணவர்கள் சுமார் 2 வருட காலமாக கொவிட் தொற்று காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களது நன்மை கருதி மிக விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டியது இரு தரப்பாருக்கும் கட்டாய கடமையாகும். ஆனால் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை மிக எளிதில் யாரும் கொச்சைப்படுத்த முனைய முடியாது. ஏனெனில் அவர்களுக்கு 24 வருட காலமாக குறித்த பிரச்சினை தொடர்பில் அவ்வப்போதுள்ள அதிகார அரசாங்கங்கள் தீர்வினை பெற்றுக் கொடுக்க வில்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
எனவே, விரைவில் இவ்வாசிரியர் அதிபர் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஆசிரியம் போற்றப்படும்படியான நிலைமை அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :