ஊரடங்குச் சட்டம் இன்று (01.10.2021) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தமது பணிகளை இன்று முன்னெடுத்தன.
அரச மற்றும் தனியார் துறையினர் பணிகளை ஆரம்பிக்கும்போது சமூக இடைவெளி, ஆளணி பலம் உட்பட பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறை பின்பற்றப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளாட்சி மன்றங்களில் ஒத்துழைப்புடன் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது. பஸ் தரிப்பிடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் தட்டுப்பாடாக உள்ள பொருட்கள் இன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.
நகர்ப்பகுதிகளுக்கு வந்த மக்களுள் பெரும்பாலானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினாலும் சிலர், முகக்கவசம்கூட அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தையும் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர்.
வழமைபோல் இன்றைய தினமும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். அரச மற்றும் தனியார் துறை பஸ்கள் சேவையில் ஈடுபட்டன. முச்சக்கர வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. ஒரு சில பஸ்களில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment