சக்தியின்றேல் உலக இயக்கம் ஸ்தம்பித்துவிடும்!



இந்துசமயதத்துவங்கள் விஞ்ஞானம் கலந்த ஆன்மீகக்கலவை!
நவராத்திரிவிழாவில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் கஜேந்திரன்
வி.ரி.சகாதேவராஜா-

ந்தப்பிரபஞ்சத்தை இயக்குவது சக்தி. சக்தியின்றேல் உலக இயக்கம் ஸ்தம்பித்துவிடும்.அத்தகைய சக்தியைப்பெறும்நோக்கில் பராசக்தியை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.இந்துசமயத்தில்வரும் விரதங்கள் பண்டிகைகள் அனைத்திற்கும் அறிவியல் விஞ்ஞானம் கலந்த தத்துவங்கள் உள்ளன.எனவேஇந்துசமயதத்துவங்கள் விஞ்ஞானம் கலந்த ஆன்மீகக்கலவையாகும்.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்றுவரும் கிழக்குமாகாண நவராத்திரிவிழாவில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் நிகழ்வு நேற்றுமுன்தினம(10) மாலை நடைபெற்றது.

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் தலைமைவகித்துரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு விசேடமாக திருவிளக்குப்பூஜையும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். மேலும் அறநெறிபாடசாலை மாணவர்களின்ஓங்காரம்அஸ்ரோத்திரம்பஜனைபூசை நிகழ்வுமற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

சிறப்புசொற்பொழிவினை ஆசிரியை திருமதி அருந்தவவாணி சசிக்குமார் நிகழ்த்தினார். மற்றும் விபுலாநந்த பணிமன்றமுன்னாள்தலைவர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்துகொண்டு நன்றியுரையாற்றினார்.

இந்து சமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனர்.
மேடையில் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
அறியாமை எனும் இருளைப் போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவச்செய்யும் பூஜையாகவேநவராத்திரி காணப்படுகிறது. 'அவனின்றி அணுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான்' என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது இராத்திரிகள் அனுஸ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி ஆகும்.

தேவி வழிபாட்டின் தொன்மைக்கு கன்னி மாதத்தில் நடைபெறும் நவராத்திரி வழிபாடே சான்றாகும். இவ்வழிபாடு எப்பொழுது தோன்றியதென்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. மிகத் தொன்மை வாய்ந்தது. இச்சக்தி வழிபாடு சிறிது பெயர் மாற்றங்களுடன் உலகம் முழுவதும் பரவியிருந்திருக்கிறது.

சக்திக்கு ஒன்பது இராத்திரி; சிவனுக்கு ஒரு இராத்திரி; அது சிவராத்திரி. இதிலிருந்தே சக்தி வழிபாட்டின் மேன்மை விளங்குகிறது.

சித்திரையில் வருவது 'வசந்த நவராத்திரி' எனவும் புரட்டாதியில் வருவது 'சாரதா நவராத்திரி' எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்விரண்டு காலங்களிலும் கோடை குளிர் என இருபருவகாலமும் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியை பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தப்படுகிறது.

அதிலும் காலசுழற்சியில் வசந்த நவராத்திரி விழா கொண்டாடும் முறை வழக்கொழிந்துவிட்டது. சாரதா நவராத்திரி விழா இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை சிறப்பு.

நவராத்திரியின் சிறப்பு அனுஸ்டிக்க வேண்டிய முறை கிடைக்கும் பலன்கள் பற்றி தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் நிசும்பன்இ சும்பன் என இரு அசுரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கடவுளிடம் பல வரங்களைப்பெற்று தங்களை அழிக்க யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு ஆட்சி செய்த காலத்தில் மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள். இந்த அசுரர்களின் ஆணவத்தை அடக்கத் திண்ணம் கொண்டு மகா விஷ்ணுவிடமும் சிவனிடமும் முறையிட்டனர்.

அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக்கொண்டு இந்த அசுரர்களை அழிக்கும் சக்தி அன்னை ஆதிசக்தியிடமே உண்டு என்பதை அறிந்து தேவியை பூலோகத்துக்கு அழைத்தனர்.

மும்மூர்த்திகளும் தாங்கள் சக்திகளையெல்லாம் ஒன்றாக்கி தேவிக்கு அளித்துவிட்டு சிலையென நிற்கவே இந்திரன் அட்டத்திக்கு பாலகரும் தங்கள் ஆயுதங்களையெல்லாம் தேவிக்கு அழித்துவிட்டு சிலையாகவே காட்சி தந்தார்கள். இவர்கள் இப்படி சிலையாக நிற்கும் காட்சியே கொலு வைக்கும் மரபாக வந்தாக அறிய முடிகின்றது.

இவ்வாறாக போர்கோலம் பூண்டதேவி நிசும்பன் - சும்பன் எனும் இரு அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். அவள் வெற்றி பெற்ற தினமே விஜய தசமியாகும். போர் ஒன்பது நாள்கள் விடாது நடைபெற்றது. ஆனாலும் அக்கால போர் சட்டதிட்டங்களின் படி மாலை நேரம் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் போர் புரிவதை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் ஒய்வெடுக்கும் நேரத்தில் அன்னையின் படைக்கு உந்துதல் கொடுக்கும் வகையில் அன்னையை குறித்து ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதையும் அறிய முடிகின்றது. எனவே இரவில் இந்நிகழ்வு நடைபெறுவதாலே நவராத்திரி எனவும் கொள்ள முடியும்.

மேலும் இந்த விரதத்தை தெய்வங்கள் முதல் தேவர்களும் கடைப்பிடித்து பயனடைந்துள்ளதையும் அறியமுடிகிறது. உதாரணமாக இராமர் இராவணனிடமிருந்து சீதையை மீட்டது. பஞ்சபாண்டவர்கள் பாரதபோரில் வென்றமை. இதனுடாக அறியப்படுவது தீய சக்திகள் மேலோங்குகையில் அம்பாள் காத்து அருள் புரிவாள் என்பதாகும்.

இதில் அறிவியல் காரணமும் இருக்கிறது. இந்த ஒக்டோபர் மாதம் என்பது மழை பெய்யும் காலம். இந்தப் காலங்களில் இரவு நேரம் குறைவாக இருக்கும். எனவே சீதோஷ்ண நிலைக்கு நம் உடலை மாற்றும் வகையிலேயே நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நான்களிலுமே பூஜை செய்யப்பட்டு சுண்டல் போன்ற புரதம் அடங்கிய உணவுகள் சாப்பிடுவதால் உடலும் தெம்புபெறும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.அதனால்தான் இந்துசமயதத்துவங்கள் விஞ்ஞானம் கலந்த ஆன்மீகக்கலவை என்றேன்

நவராத்திரியில் ஒன்பது நாள்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதமிருத்தல் வேண்டும். தசமி தினத்தில் வதம்செய்து வாகை சூடியதால் ஆணவம் சக்தியாலும் வறுமை செல்வத்தாலும் அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட நாள் என்பதால் முப்பெரும் தேவியை வணங்கி எல்லாக் காரியங்களும் எளிதில் வசமாகவும் அன்றைய தினம் புனிதமான காரியங்களை தொடங்கி இந்த ஜென்மத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து பிறவிப் பயனாகிய பேரின்ப நிலையை அடைவோமாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :