கிழக்கு அரச ஊழியர்களின் ஒரு நாள் சமபளத்தை அறவிடும் சுற்றறிக்கையை வாபஸ் பெறுக..!



அஸ்லம் எஸ்.மௌலானா-
கொவிட்-19 நிதியத்திற்கென கிழக்கு மாகாண அரசாங்க ஊழியர்களிடமிருந்து அக்டோபர் மாத சம்பளத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை அறவிடக் கோரும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரது சுற்றறிக்கையை உடனடியாக மீளப் பெறுமாறு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வோண்டுகோளை வலியுறுத்தி கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கு தமது சங்கம் அவசர கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

கொவிட் பிரச்சினை காரணமாக நாட்டில் உள்ள சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டு, பல்வேறு வகையான துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு அரசாங்க ஊழியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. நாட்டில் சகல பொருட்களதும் விலைவாசி உயர்வு காரணமாக மாதாந்த சம்பளத்தை நம்பியிருக்கும் அரச ஊழியர்கள் அனைவரும் பல கஷ்டமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தமது ஏழ்மை நிலைமையை வெளியே சொல்ல முடியாத ஒரு கௌரவ பிரச்சினைகளுக்குள் அவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர்.

ஏனைய மாகாணங்களில் அரச ஊழியர்களிடம் கொவிட் நிதி சேகரிப்பு எதுவும் இடம்பெறாத நிலையில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் இம்மாகாண அரசாங்க ஊழியர்களின் அக்டோபர் மாத சம்பளத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்குமாறும் இதனை ஆளுநர் விரும்புவதாகவும் தெரிவித்து சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 45000 அரச ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். கடந்த வருடமும் கொவிட் முதலாவது அலையின்போது கிழக்கு மாகாணத்தில் கோவிட் நிதியத்திற்கு அறவீடுகள் மேற்கொள்ளப்பட்ட போது ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிட்டமையினால் அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டு, அறவிடப்பட்ட தொகையினை மீள வழங்குமாறு உத்தரவிடபட்டிருந்தது. எனினும் உள்ளூராட்சி திணைக்களம் உள்ளிட்ட சில அலுவலகங்கள் குறித்த ஊழியர்களுக்கு அதனை மீள வழங்கவில்லை. அத்துடன் அறவிடப்பட்ட தொகை தொடர்பாகவும் பகிரங்கப்படுத்தப்பட வில்லை.

இந்நிலையில் மீண்டும் கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பலாத்காரமாக பிடுங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை கவலைக்கும் விசனத்திற்குமுரிய விடயமாகும்.

எனவே, கோவிட் பெருந்தொற்று எல்லோருக்கும் உரியது. சகலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அடிப்படையில், கிழக்கில் அரச ஊழியர்களிடம் அவர்களது சம்பளத்தில் ஒரு நாளுக்குரிய தொகை அறவிடும் சுற்றறிக்கை உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என எமது சங்கம் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பிரதம செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை இதற்கு மாகாண அரச ஊழியர்கள் எவரும் ஒத்துழைக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறது- என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :