அதாவது மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவிவகித்த ACMC உறுப்பினர் பதவி இழந்ததனால், புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த புதன்கிழமை (29.09.2021) நடைபெற்றது. அதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் இஸ்ஸதீன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுபினருக்கு ஆதரவாக ACMC யின் ஆறு உறுப்பினர்களும், EPDP, TULF, SLFP ஆகிய கட்சிகளின் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
மன்னார் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒருவர் தவிசாளராக போட்டியிட்டதுடன், மற்றைய உறுப்பினரான ஜலீது இன்சாப் தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
அவர் வாக்களிக்கும்போது “தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர்களின் வேண்டுதலின் பேரிலேயே தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர் ஜஸ்டின் ஜூட்சனுக்கு ஆதரவாக வாக்களிகின்றேன்” என்று இரண்டு தடவைகள் கூறிவிட்டு வாக்களித்துள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்காக மும்முனை போட்டிகள் நடைபெற்றது. அதில் தனது கட்சிக்காரரான மு.கா உறுப்பினரை தவிசாளராக வெற்றிபெற செய்வதற்காக ஹுனைஸ் பாரூக் அவர்கள் மிக தீவிரமாக செயற்பட்டார். அதற்காக ACMC, EPDP, TULF, SLFP ஆகிய கட்சிகளின் ஆதரவை திரட்டிவிட்டு தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக அறிவித்தார்.
தனது செய்தியை கேட்டவுடன் தலைவர் மகிழ்ச்சியடைவார் என்ற எதிர்பார்ப்பில் தொலைபேசியை அழைத்த ஹுனைஸ் பாரூக் அவர்களுக்கு மறுமுனையில் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது “சாள்ஸ் நிர்மலநாதனுக்கு நான் வாக்குறுதி வழங்கிவிட்டேன். அதனால் எமது இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எங்களுக்கு தவிசாளர் பதவி அவசியமில்லை.” என்பதுதான் தலைவரின் அந்த அதிர்ச்சியான செய்தியாகும்.
ஏதாவது நிபந்தனையின் அடிப்படையில் அவ்வாறு விட்டுக்கொடுப்பது குற்றமில்லை. ஆனால் எந்தவித நிபந்தனையுமின்றி விட்டுக்கொடுப்பதை ஏற்க முடியாது. குறைந்தது கல்முனை பிரச்சினையை தீர்ப்பதற்கான நிபந்தனையாக இதனை பாவித்திருக்கலாம். அவ்வாறான எந்தவித திட்டமும் தலைவரிடமில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓர் இறமையுள்ள கட்சி. அவர்கள் மன்னார் பிரதேச தவிசாளர் பதவியை கோருவதற்கு முழு உரிமை உள்ளது. அதுபோல் ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது.
கடந்த காலங்களில் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அமைச்சராக அதிகாரத்தில் இருந்தபோது வன்னி மாவட்டத்தை முழுமையாக கைவிட்டிருந்தார். இந்த பலயீனத்தினாலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டது.
மன்னார் பிரதேச சபையை ஆட்சி செய்தால் அங்கு முஸ்லிம் காங்கிரசை கட்டியெழுப்பலாம் என்று ஹுனைஸ் பாரூக் போன்ற பலர் முயற்சி செய்கையில் அதற்கு தலைவரே தடையாக உள்ளார்.
“சேதாரமின்றிய விட்டுக்கொடுப்பு” என்று அடிக்கடி தலைவர் கூறுவது இதைத்தானா ? தனிப்பட்ட விடயங்களில் தாராளமாக விட்டுக்கொடுக்கலாம். ஆனால் அரசியலில் நிபந்தனை இல்லாமல் விட்டுக்கொடுப்பதற்கு கட்சி தலைவரின் தனிப்பட்ட சொத்து அல்ல. இது முஸ்லிம்களின் பேரியக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment