காரைதீவு பிரதேசசபையின் த.தே.கூ. ஒரேயொரு பெண் பிரதிநிதி ஜெயராணி வேண்டுகோள்.
வி.ரி.சகாதேவராஜா-கட்சியின் அடிமட்டபிரதிநிதிகள் பாதிக்கப்படும்போது கட்சித்தலைமைகள் வெறுமனே வாழாவிருக்காது விரைந்து குரல்கொடுக்கவேண்டும். ஆறுதலளிக்கவேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரேயொரு பெண் பிரதிநிதி திருமதி சின்னையா ஜெயராணி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தவாரம் கல்முனை மாநகரசபையின் த.தே.கூ. உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் இல்லம் முற்றுகைக்குள்ளானமை தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
இலங்கைவாழ் தமிழினம் இந்த இனவிடுதலைக்காக கொடுத்த விலை பெரிது. செய்த தியாகங்கள் எதிர்கொண்ட சோதனைகள் வேதனைகள் ஏராளம். இன்னமும் அது தொடர்கதையாகவே இருந்துகொண்டிருக்கிறது.
சர்வதேசத்தை நம்பி திடநம்பிக்கையுடன் பல சவால்களை எதிர்கொண்டு எதிரிகளைவிட துரோகிகளை எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறோம்.
இந்தநிலையில் தமிழினத்திற்கெதிராக அடக்குமுறைகள் காணிஅபகரிப்பு எல்லைகளை அடாத்தாக கைப்பற்றல் போன்ற இன்னோரன்ன இனஅழிப்புசெயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் எமது கட்சியின் அடிமட்ட பிரதிநிதிகள்தொண்டர்கள் பல்வேறுவகையான துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகிவருகின்றனர். ஏன் உயிர் அச்சுறுத்தலுக்கும் இலக்காகிவருகின்றனர்.
கல்முனைப்பிராந்தியத்தில் தமிழினத்தின் காவலனாக அடிக்கடி குரல்கொடுத்துவரும் அண்மையில் கல்முனைமாநகரசபை உறுப்பினர் ராஜனின் வீடு முற்றுகைக்கு உள்ளாகியது. 4மணிநேரம் மனைவி மகன் மனஉளைச்சலுக்கு ஆளாகி பீதியிலிருந்துள்ளனர். நாளை அது மனநோயாகக்கூட மாறவாய்ப்புள்ளது.
ஆனால் என்ன காரணத்திற்காக இம்முற்றுகை இடம்பெற்றது என்று தெரியவில்லை.ஆதலால் வெறுவழியின்றி அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளார்.
இந்தநிலையில் மனஅழுத்தங்களுக்குள்ளான அவரையிட்டு மாநகரசபையிலுள்ள எமது கட்சியின் சக ஆறு உறுப்பினர்களோ இந்த மாவட்டத்து எம்.பியோ அல்லது அண்மையிலுள்ள மட்டு.மாவட்ட எமது கட்சி எம்பிக்களோ கட்சியின் தலைமைகளோ யாரும் குரல்கொடுக்கவுமில்லை. கடைசி ஆறுதலுக்காவது யாரும் தொலைபேசியிலாவது பேசவுமில்லை என்று தெரியகிறது.
இப்படியான சூழ்நிலையில் கட்சியில் சேர யாரும் முன்வருவாhர்களா? அல்லது இனத்திற்காக யாரும் குரல்கொடுக்க முன்வருவாhர்களா?
அண்மையில் யாரோ முகநூலில் பதிவிட்ட ஒருவிடயத்தை பகிர்ந்தமைக்காக எமது தவிசாளர் ஜெயசிறிலை நார்நாராக கிழித்தார்கள். இங்குள்ளவர்கள் வாய்மூடி மௌனியாக நின்று வேடிக்கைபார்த்தார்கள். அவர் இம்மாவட்ட தமிழ்மக்களுக்கு செய்த செய்துவரும் சேவையை இந்த உலகமே அறியும். எனினும் அவருக்குக்கூட யாரும் குரல்கொடுக்கவில்லை. ஆன பாராளுமன்றில் வன்னி மாவட்ட எம்.பி.இ சி.சிறிதரன் மற்றும் முன்னாள் எம்.பி. பா.அரியநேத்திரனும் மாத்திரமே குரல்கொடுத்தார்கள். அம்பாறை தமிழ் எம்பி கூட மௌனம்காத்தார்.
வாக்களிக்காத யாருக்கோ எல்லாம் குரல்கொடுக்கும் எமது தமிழ் எம்பிக்கள் சொந்த கட்சியில் பாதிக்கப்படும் அடிமட்டத்தொண்டர்களுக்கு குரல்கொடுக்காதது ஏன்.?
இனிமேலாவது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது கட்சித்தலைமைகள் வாய்திறந்து குரல்கொடுக்க முன்வராவிட்டால் கட்சியைக்காப்பாற்ற கடவுளாலும் முடியாதுபோகலாம்.
உறுப்பினர் ராஜன் மற்றும் தவிசாளர் ஜெயசிறில் ஆகியோர் பாரிய மனஉழைச்சலுக்கும் வெறுப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்தக்கட்டத்திலாவது கட்சித்தலைமைகள் தொடர்புகொண்டு ஆறுதலளித்தாலன்றி அவர்களது எதிர்கால பயணம் கேள்விக்குரியதாகமாற வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment