சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை!



னிதத் தேவைகளையும் விருப்பங்களையும் இனங்கண்டு அவற்றினை நிறைவு செய்வதற்கான வணிகச் சந்தர்ப்பங்களை உருவாக்கி நாட்டின்  இடர்களை முகாமைப்படுத்தி மேற்கொளப்படுகின்ற புத்தாக்கங்களை உருவாக்குகின்ற செயன்முறையே முயற்சியாண்மையாகும். அதாவது நிலம், உழைப்பு, மூலதனம் போன்ற உற்பத்திக் காரணிகளை ஒன்றிணைத்து உற்பத்திச் செயற்பாட்டை மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையே முயற்சியாண்மையாகும்.

போட்டி நிறைந்த இக் காலப்பகுதியில் வணிக உலகில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் தனிநபர் தேவைகள், விருப்பங்களை உயர் மட்டத்தில் நிறைவு செய்வதன் மூலம் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும், நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்ற புதிய தொழிநுட்பங்களுக்கேற்ப வணிகக் கருமங்களை விருத்தி செய்வதற்கான தேவைப்பாடு என்பன முயற்சியாண்மையின் முக்கியத்துவங்களாகக் காணப்படுகின்றன.

முயற்சியாண்மையானது நாட்டின் தேசிய வருமானத்திற்கு பங்களிப்புச் செய்கின்றது. முயற்சியாளர்களினால் அறிமுகம் செய்யப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள், மேம்படுத்தப்பட்ட பொருட்கள், சேவைகள் என்பன புதிய சந்தையை உருவாக்கவும், அபிவிருத்திக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் துணைபுரிகின்றன.
இந்த வகையில் நாம் தினமும் எத்தணையோ விதமான பொருட்களை நுகர்கின்றோம். அவற்றில் பல பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து எமது பிரதேசத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அப் பொருட்களை விடவும் மிகவும் சிறந்த தரமான பொருட்களை எம் தேசத்து முயற்சியாளர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். நாட்டில் பயன்படுத்தப்படாமல் காணப்படும் வளங்களை உற்பத்தித் துறையில் உட்புகுத்தி வினைத்திறனாகச் செயற்படுவதன் மூலம் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையை அடைய முடியும்.

கைத் தொழில் அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகிய குறிக்கோள்கள் முயற்சியாண்மையின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளன. ஆகவே தான் முயற்சியாண்மையானது கைத் தொழில் அபிவிருத்திக்கான உள்ளீடாக அமைகிறது. அதன் வெளியீடாக பொருளாதார அபிவிருத்தி, வேலையற்ற இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல், தலா வருமானத்தை அதிகரித்தல், உயர்ந்த வாழ்க்கைத் தரம் சமனான பிரதேச அபிவிருத்தி என்பவற்றைப் பெற முடியும்.

முயற்சியாண்மையானது புதிய வணிகங்களைத் தோற்றுவிப்பதால் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குகின்றது. இந்நிலமை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் . இன்று இலங்கையைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தொழிலின்மை என்பது பாரிய சவாலாக உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2018ம் ஆண்டறிக்கையின் படி தொழிலின்மை வீதமானது 4.2 வீதமாக காணப்படுவதுடன் வயதினடிப்படையில் நோக்கும் போது 15-19 வயதுப் பிரிவினர்களின் தொழிலின்மை வீதம் 21.1 ஆகவும் 20-29 வயதுப் பிரிவினரிடையே 13.5 வீதமாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் துடிப்புள்ள ஒரு இளம் சமுதாயம் வேலையற்ற நிலையில் இருப்பதனையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு முயற்சியாளர் முன்வந்து யாதேனுமொரு தொழிலைச் செய்ய முனையும் போது அதனூடாகப் பலர் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் . இவ்வாறு பலருக்குத் தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதால் மக்களுடைய வருமானம் அதிகரித்து அவர்களது அந்தஸ்தும் வளர்ச்சியடையும். அது மாத்திரமின்றி சந்தையில் பல வகையான புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுவதோடு சந்தையும் விஸ்தரிக்கப்படுகின்றது.
புதிதாக ஒரு முயற்சியாண்மைத் தொழில் ஒன்று ஆரம்பிக்கப்படும் போது ஏனைய நிறுவனங்களினது அனுசரணையையும் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக கடல் உணவுகளைப் பதப்படுத்தும் ஒரு தொழிலை ஆரம்பிக்கின்றோமானால் அதனை ஏற்றுமதி செய்வதற்கான நிறுவனங்கள் பலவற்றின் அனுசரனை கிடைக்கும். மற்றும் வலைகள், உப்பு, தயாரிக்கும் நிறுவனங்களின் அனுசரணை என்பன கிடைக்கும்.
இந்த வகையில் இந்த முயற்சியாண்மைத் திறன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் நாட்டின் அபிவிருத்தியில் மாற்றமேற்படும். நாட்டின் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதால் அதிகளவு இலாபம் பெறப்படுவதுடன் எதிர்கால சந்ததியினருக்கும் வளங்களைக் கடத்த முடியும்.

தற்போதைய கொரோனா காலப்பகுதியை எடுத்துக்கொள்வோமானால் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு, விலையேற்றம் ஊரடங்கு என மக்கள் அல்லோலல்பட்டுக் கொண்டிருக்கும் இக் காலப்பகுதியில் பல பொருட்களை எமது நாட்டிலேயே வளங்களை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி உற்பத்தி செய்வதன் ஊடாக அத் தடைகளைத் தகர்த்தெறிய முடியும். கரும்பு உற்பத்தியினூடாக சீனி தயாரிப்பு, பசுப்பாலினூடாக பால்மா தயாரிப்பு, மஞ்சள் உற்பத்தி எனப் பல பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த வகையில் எமது நாட்டில் பெரும்பாண்மையான முயற்சியாண்மைத் தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள ஒரு கடல் சார்ந்த பிரதேசமே மணியன் தோட்டமாகும். பல இடப்பெயர்வுகள் அழிவுகளின் பின்னர் மீண்டு வந்ததொரு பிரதேசமாக இப் பிரதேசம் காணப்படுகின்றது. மீன்பிடி, சிறு கைத்தொழில், சுயதொழிலிலேயே இவ் ஊர் மக்கள் தமது பொருளாதாரத்தைக் கொண்டுள்ளனர். அதில் ஓர் மீள் எழுச்சி பெற்றதொரு தொழிற்சாலையே மணியன் தோட்டம் தும்புத் தொழிற்சாலையாகும்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காககத் தொழிற்துறைத் திணைக்களத்தினால் தும்புசார் உற்பத்தி தயாரிக்கும் பயிற்சி பெண் தலைமைக் குடும்பப் பெண்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்பு பிரதேச செயலக உதவியுடன் இயந்திர வசதியுடன் ஒரு தும்புத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு அப் பிரதேசப் பெண்களிடையே கையளிக்கப்பட்டது. இவர்கள் வேறு பல பிரதேசத்திலுள்ள பெண்களுக்கும் தாம் கற்ற விடயங்களைப் பயிற்சியாக அளித்துள்ளனர். இத் தும்புத் தொழிற்சாலையினூடாக இவர்களுக்குப் போதிய வருமானம் கிடைப்பதுடன் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளனர்.

இதே போன்று இலங்கையில் முல்லைத் தீவில் வசிக்கும் ஒரு முயற்சியாளர் தான் சாயிராணி. இவர் இந்தியாவில் மும்பையில் இருக்கின்ற முகேஷ் அம்பாணியிடம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு பெண் முயற்சியாளர்களின் கண்டுபிடிப்புக்களை இனம் காண்பதற்காக தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தை இவர் பெற்றுக் கொண்டார். இவர் யுத்தத்தில் தனது கணவனை இழந்து அகதி முகாமில் வெறும் 1300 ரூபாய் பணத்தினை மூலதனமாக இட்டு மரத்தின் கீழ் அப்பம் சுட்டு விற்று தனது சுய தொழிலை அன்றே ஆரம்பித்தார்.
மீள் குடியேற்றம் செய்யப்பட்டதன் பின்னர் சிறியதொரு மரக்கறிக் கடையை ஆரம்பித்தார். அதன் பின்னர் தன் போன்ற பல பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் எனும் ஆர்வம் இவருள் எழுந்தது. முறுக்கு, மிக்சர் போன்ற பொருட்களைச் செய்து சர்வதேச ரீதியில் தனது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதோடு தனது மாவட்டத்திலுள்ள பெண்களையும் பொருளாதார ரீதியில் உயர்த்த வேண்டும் எனும் இலக்குடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். போசணை மா, வல்லாரை மா, கறிவேப்பிலை மா, குரக்கன் மா, குறிஞ்சா பிட்டு மா, மரக்கறிப் பப்படம் எனப் புதிய புதிய பொருட்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.
வல்லாரைப் பப்படம் எனும் புதியதொரு உற்பத்திப் பொருளைக் கண்டுபிடித்து எவ்வித இரசாயனக் கலப்புக்களுமின்றி இயற்கையாகவே தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றார். இன்று 17 இற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் அளித்து இரண்டு கோடி பெறுமதியான சொத்துக்களையும் உருவாக்கி தொழில் முயற்சியில் இவர் முன்னேறியுள்ளார்.

இதே போன்று மின்சாரப் பம்பி தயாரிப்புத் துறையில் முன்னேறியவர் தான் தவம் என்கிற தவச்செல்வம். எம்மில் பலர் இது போன்ற உபகரணங்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன என எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எமது நாட்டிலேயும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் தமது சாதணைகளை நிலைநாட்டியுள்ளவர் தான் தவச்செல்வம்.
பல இயந்திரங்களுக்குரிய உதிரிப் பாகங்கள் போன்றவற்றையும் இவர்கள் தயாரித்து வருகின்றனர். குறைந்தளவு மின் பாவனையுடன் நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய வகையிலும் இந்த மின்சாரப் பம்பிகள் தயாரிக்கப்படுகின்றன. தனது தந்தையின் தொழிலைக் கைவிடாது பல இன்னல்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தவர் தான் இவர். இந்த வகையில் இது போன்ற பல முயற்சியாளர்கள் இன்றும் எமது நாட்டில் புதிய புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து முன்னேறி வருகின்றனர்.
எனவே மேற்கூறிய வகையில் சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மையானது கருதப்படுகின்றது. யாதேனுமொரு சிறு தொழிலை ஆரம்பித்து அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன் நாட்டிற்கும் பொருளாதார ஏற்றத்தை உண்டு பண்ணக் கூடிய வகையில் உள்ளதொரு சிறந்த தொழில் முறைமையே முயற்சியாண்மையாகும்.


வீ.அனித்தா,
நான்காம் வருடம்,
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :