நாவலரின் இறுதி நிமிடங்கள்
இரண்டு நாட்களாக திருமுறைகளைப் பாடுவதோடு மட்டும் நேரத்தைச் செலவு செய்தார். செவ்வாய்க்கிழமை இரவு நோயினால் பாதிக்கப்பட்டவர் புதன்கிழமை எழுந்து நீராட முடியாதளவு போய்விட்டது.
வேதாரணியத்து சைவ சிவாச்சாரியாரை அழைத்து நாவலர் நித்திய பூஜை செய்யும் ஆத்மார்த்த சிவலிங்கமூர்த்திக்கு பூஜைகள் நடைபெற்றது. பூக்களைக் கையிலெடுத்து ஒவ்வொன்றாகப் போட்டு தன்பாட்டிற் கும்பிட்ட வண்ணமிருந்தார் நாவலர்.
தன்னைச் சூழ இருந்தவர்களைப் பார்த்து தொடர்ந்து திருமுறைகளைப் பாடுங்கள் என்று கட்டளையிட்டார். எவரும் நாவலர் இறக்கப்போகின்றார் என்று கருதவில்லை. வெள்ளிக்கிழமை சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர் முதலிய புண்ணியத் தலங்களின் விபூதியை எடுத்து அணிந்தார். தான் அணியும் உருத்திராட்ச மாலைகளையும் அணிந்து கொண்டு தன் பூஜை அறையில் இருந்த கங்கைத் தீர்த்தத்தை பருகினார். சயனிக்கும் இடத்திற் தலையிற் கைகளைக் கூப்பிய வண்ணமாகக் கண்களை மூடித் தியானஞ்செய்தார்.
கார்த்திகை மாதம் 21ம் நாள் மக நட்சத்திரத்தில் இரவு 10 மணியளவில் அன்னாரது உயிர் பிரிந்தது. இவர் உயிர் பிரிவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன் இவரை அவதானித்த மாணாக்கர்கள், சுற்றத்தார்கள் இவருக்குச் சமீபமாகச் சென்று இவரிடம் சில விடயங்களைக் கேட்க முற்பட்டனர்.
வித்தியாசாலை விடயமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். 'கைலாசபிள்ளையைக் கூப்பிடுங்கள்' இதுதான் அவரது கடைசி வார்த்தை. அதன்பின் அவர் பேசவேயில்லை என்ன சொல்ல நினைத்தார் என்று இன்றுவரை தெரியவில்லை.
நாவலர் பெருமான் 56 வயது பதினொரு மாதம் 16ம் நாளில் இப்பூவுலக வாழ்வை நிறைவு செய்தார். வெள்ளிக்கிழமை இரவு சிவபதமடைந்த நாவலருக்கு சனிக்கிழமை கைலாசப்பிள்ளையார் கோயிலுக்கு சமீபமாக உள்ள அவரது வீட்டில் அந்திமக் கிரியைகள் நடாத்தப்பட்டன. பெருந்திரளான மக்கள் கூடி நாவலர் பெருமானுக்கு கண்ணீர்க் காணிக்கை செலுத்தினர். வரணி, கரணவாய் ஆதீனத்தார் முன்னிலையில் வேதாரணியத்து அப்புக் குருக்கள் எனப்படும் நமச்சிவாய தேசிகரால் நிர்வாண அந்தியேட்டி செய்யப்பட்டு அவரது வீட்டிலும் வண்ணார்பண்ணை கோம்பயன் மணற் சுடலையிலும் தேசிகராற் கிரியைகள் நிறைவேற்றப்பட்டன.
நாவலரது இறுதி ஊர்வலத்திற்காக பூக்களினால் ஒரு பூந்தேர் செய்யப்பட்டு பூதவுடல் வைக்கப்பட்டு அதற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான அன்பர்கள் நாவலரது பிரிவுத்துயர் தாங்க முடியாது அங்கப் பிரதட்சணமாக சுமார் 03 1/2 மைல் தூரம் சென்று சுடலையை அடைந்தனர் என்பது வரலாற்றில் மறக்கமுடியாத உருக்கமான ஒரு நிகழ்வு. கோம்பயன் மயானத்தில் இராத்திரிவேளை சந்தனக்கட்டைகள் அடுக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ நாவலரின் பூதவுடல் அக்கினியோடு சங்கமமாகியது.
'நானுயிரோடிருக்கும் போதே உங்களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள் உங்களிடத்துக் கைம்மாறு பெறுதலை சிறிதும் எண்ணாது 32 வருடகாலம் சைவசமய உண்மைகளைப் போதித்து வந்தேன்' இவை நாவலரின் கடைசிப் பிரசங்க வாசகங்கள். நாவலரைப் போல் நமக்கு யாருண்டு.
நாவலரின் வாழ்வு உண்மையானது. நாவலர் பெருமானுக்குப் பல நினைவுச்சின்னங்கள் இன்றுவரை நிறுவப்பட்டு வருகிறது. அவர் வாழுங்காலத்தில் அவருக்குச் சிலர் செய்த இடையூறுகளை நினைந்து நாம் வெட்கமடைய வேண்டும். அவரால் எம் சந்ததி பெற்ற பேறுகள் ஏராளம். ஈழநாட்டில் சைவமும் தமிழும் இன்று நிலைபெற்று உள்ளதென்றால். அதற்கு இப் புண்ணியவானே முக்கிய காரணம் என்பதை உணரவேண்டும். அப்பெருமகனின் சரித்திரத்தை, சிறப்புக்களை சாதனைகளை அனைவரும் முழுமையாக படிக்க வேண்டும். சைவப் பாடசாலைகள், சைவ நிறுவனங்கள், அனைத்திலும் நாவலர் நினைவுச்சின்னங்கள் நிறுவப்பட்டு நாவலர்பெருமானை எம் சந்ததி மீள நினைப்பதற்கு நாம் வழி செய்யவேண்டும்.
(சைவத்தமிழர்களின் கலங்கரை விளக்கம் எனும் நூலிலிருந்து.....)
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment