சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமைக்கு யார் பொறுப்பு? - ஆதாரங்களுடன் விளக்குகிறார் பழனி விஜயகுமார்



சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணயாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத பிரச்சினைக்கு பொறுப்புவாய்ந்தவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

குடும்ப நிறுவனமாக தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வந்த சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் மாற்றம் செய்து அதனை மக்களுக்கு நலன்பெறக்கூடிய வகையிலான திட்டங்களை முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் முன்னெடுத்த போதும் 52 நாட்கள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது மீண்டும் இந்த நிதியம் குடும்பமயப்படுத்தப்பட்டு அரசியல்மயப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து பழனி விஜயகுமார் விடுத்துள்ள அறிக்கையில்,

"சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்" என்பது இலங்கை பாராளுமன்றில் அதிகாரபூர்வமாக சட்டமாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த மன்றத்தின் கீழ் 1. பூல்பேங்க் தொழில் பயிற்சி நிலையம், 2. ரம்பொட கலாசார நிலையம், 3. நோர்வூட் விளையாட்டு அரங்கு, 4. பிரஜாசக்தி மத்திய நிலையங்கள் என நான்கு இணை நிறுவனங்கள் செயற்படுகின்றன.

இந்த மன்றத்தின் சட்டத்தின்படி மன்றத்தை ஆரம்பிப்பதற்கான நிதியை மாத்திரமே திரைசேறி வழங்கும். பின்னர் மன்றமே தமக்குத் தேவையான நிதியை நன்கொடை மூலமோ, உள்நாட்டு வௌிநாட்டு உதவிகள் மூலமோ, வேறு செயற்திட்டங்கள் மூலமோ தேடிக் கொள்ள வேண்டும். (ஆவணம் 1)

ஆனால் இந்த மன்றம் தொடங்கப்பட்ட நாள் தொடக்கம் அதன் ஆயுள்கால உறுப்பினராக இருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் மாறி மாறி வந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்த காரணத்தால் சலுகை அடிப்படையில் இந்த மன்றம் அவரது அமைச்சுக்கு கீழ் கொண்டுவரப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் சமூக அபிவிருத்தி என்ற திட்டத்தின் கீழ் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக செலவு செய்யப்பட்டன.

ஆனால் 2014ம் ஆண்டின் இறுதியில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் குறித்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களுக்கு கீழ் கொண்டுவரப்பட்டு மன்றமும் அதில் இணைக்கப்பட்டது. அப்போது இந்த மன்றத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதியை பெற முடியாமல் போனது. மாதக்கணக்கில் பணியாளர்கள் சம்பளம் இன்றி கஸ்டப்பட்டனர். புதிய அரசாங்கம் என்பதால் மன்றத்துக்கு நிதியை கோர முடியாத சட்ட சிக்கல் காணப்பட்டது.

எனவே இந்த சட்ட சிக்கலை தீர்த்து பணியாளர்களுக்கு தடையற்ற சம்பளத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் அமைச்சரவையில் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விசேட அனுமதி பெற்று சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கிய நிறுவனங்கள் மற்றும் அதன் நிரந்தர பணியாளர்களை நேரடியாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் கொண்டு வந்தார். அதற்கான ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. (ஆவணம் 2)

இந்த அமைச்சரவை அனுமதியின் பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் வெறும் மன்றமாக தனியாக விடப்பட்டது. ஆனால் அதன் இணை நிறுவனங்கள், பணியாளர்கள், அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அமைச்சின் கீழ் நேரடியாக கொண்டுவரப்பட்டது.

அதன்பின் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இணை நிறுவனங்களை இயக்கிச் செல்வதில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை. அமைச்சரின் இந்த திட்டத்தை அனைத்து பணியாளர்களும் பெரிதும் வரவேற்றனர். அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கு மன்றத்தின்பணியாளர்கள் உட்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு இருந்தது.

ஆனால் நாட்டில் ஏற்பட்ட 52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பின் போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மீண்டும் ஏற்படுத்தப்பட்டு அமரத்துவம் அடைந்த ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக பொறுப்பேற்ற போது அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து 1. பூல்பேங்க் தொழில் பயிற்சி நிலையம், 2. ரம்பொட கலாசார நிலையம், 3. நோர்வூட் விளையாட்டு அரங்கு, 4. பிரஜாசக்தி மத்திய நிலையங்கள் என்ற நான்கு நிறுவனங்களையும் மீண்டும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இணைத்துக் கொண்டு பழையபடி இந்த மன்றத்தை தங்களது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்தார்.

தற்போது அதன் பிரதிபலனை பணியாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மன்றத்திற்கு திரைசேறி நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தேவையான நிதியை மன்றமே தேடிக் கொள்ள வேண்டும் என கட்டளையும் சட்டத்தின்படி இடப்பட்டுள்ளது.

செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணியாளர்கள் அனைவரும் அரச ஊழியர்கள். எனவே அவர்களுக்கு உரிய சம்பளம் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். அதனை பொறுப்பு வாய்ந்த அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காலத்தில் சம்பளம் வழங்கப்படாமல் செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணியாளர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இந்த மன்றத்தின் பணியாளர்கள் பலரும் அரச சேவைக்கு அப்பால் காங்கிரஸ் கட்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அதனால் அவர்களது சம்பளப் பிரச்சினையை இழுத்தடிப்பு செய்யாது பெற்றுக் கொடுக்க வேண்டியது உரியவர்களின் பொறுப்பாகும்.

அமைச்சர் திகாம்பரம் அவர்களுக்கு செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணியாளர்கள் பலரும் எதிராக செயற்பட்ட போதும் அவர் அதனை அரசியலாக்காது அவர்களுக்கான சம்பளத்தையும் தொழிலையும் உறுதி செய்து தான் ஒரு பெருந்தன்மைமிக்க தலைவர் என்பதை காட்டியிருந்தார். அதனை செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணியாளர்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என நம்புகிறேன்" - இவ்வாறு பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இத்துடன் மன்றத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான கணக்காள்வாளர் திணைக்கள ஆவணமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :