புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்குதல், கிராம நிலதாரி பிரிவுகளை தோற்றுவித்தல் தொடர்பிலான சர்ச்சைகளுக்கு தீர்வு காண உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அந்த ஆணைக்குழு சிவில் நிர்வாக கட்டமைப்பை உருவாக்க போகிறது. அந்த ஆணைக்குழு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் ஆகியோர் முன்வைக்கும் தீர்மானங்களையும், யோசனைகளையுமே இறுதி தீர்வாக எடுக்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் கல்முனை, தோப்பூர், மூதூர், வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை கையாள வேண்டும் என்றால் அரசின் முக்கிய தலைவர்களிடம் பேசி எங்கள் மக்களின் பூர்வீக நிலங்கள் மற்றும் நகரங்களை காப்பாற்ற முடியும். இதனை விடுத்து அரசுடன் முரண்பாட்டு அரசியலை செய்யக்கோரும் ஒருசாரார் இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களின் கேள்வி என்னவென்றால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது யார்? எப்போது தீர்வு காண்பது? எல்லை நிர்ணய ஆணைக்குழு விவகாரங்ககளை கையாளப் போவது யார்? என்பதே. இந்த நாட்டில் இனவாதம் வெளிப்படையாக பேசப்படுகிறது. நாங்கள் நிதானமாக பயணிக்கவேண்டிய காலத்தில் உள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இப்போது எமது நாட்டில் மாடறுப்பு தடை வந்துள்ளது. இதனால் வர்தகர்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திலும் ஏற்படப் போகும் பாதிப்புக்கள், சவால்கள் பற்றி அரச முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு நாடு முழுவதிலும் நிறைய காணிப்பிரச்சினைகள் உள்ளது. இப்போது அரசினால் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் கொரோனா அலையினால் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வரும் இன்றைய சூழ்நிலையில் இந்த வரவுசெலவு திட்டம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் அணுகியிருக்கிறது.
இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு அப்பால் சென்று சில விடயங்களை பேச வேண்டியுள்ளது. அதனடிப்படையில் முஸ்லிம் சமூகம் பல்வேறு காரணங்களினால் பலத்த சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் எங்களின் கிழக்கிலிருந்தும் எனது மாவட்டமான அம்பாறையிலிருந்தும் முஸ்லிம் அரசியலை வேறு கோணத்திற்கு கொண்டு செலுத்த வேண்டிய தேவைகள் தொடர்பில் முக்கியஸ்தர்களும், சமூக அமைப்புக்களும் வலியுறுத்தல்களை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
பல நூற்றாண்டு காலமாக அனுபவித்து வந்த தனியார் சட்டங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டு சமூகம் சார்ந்த விடயங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதா அல்லது தொடர்ந்தும் பிரச்சினைகளை வைத்து வாக்கரசியல் செய்வதா என்ற இரு கேள்விகள் எங்கள் முன்னிலையில் உள்ளது. எங்களுக்கு மூத்த அரசியல் தலைவர்கள் எங்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டிவிட்டு சென்றுள்ளார்கள். கடந்த காலங்களில் எம்.சி. அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது சொந்த சொத்துக்களை கூட இந்த நாட்டுக்கு வழங்கி சமூக உரிமைகளை பெற்ற வரலாறுகள் இருக்கிறது. அதனை தொடர்ந்து சமூகத்தின் குரலாக ஒலித்த சேர் றாஸிக் பரீட், டீ.பி ஜாயா, எம்.சி.எம். கலீல், பதியுதீன் மஹ்மூத், எம்.எச்.எம். அஸ்ரப் என்று பட்டியல் நீள்கிறது. அவர்கள் அப்போதைய ஆட்சியாளர்களுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்ட வரலாறுகள் உள்ளது.
அந்த வரிசையில் நாங்கள் பாராளுமன்றத்திற்கு வந்த ஆரம்ப கட்டத்தில் முஸ்லிங்களின் ஜனாஸா எரிப்பு பிரச்சினை தலை தூக்கியிருந்தது. அந்த பொழுதுகளில் அரசினால் 20ம் திருத்த சட்டத்தை கொண்டு வந்து ஆதரவு தேடிக்கொண்டிருந்த நிலையில் மு.கா எம்.பிக்கள் நால்வரும், ம.கா எம்.பிக்கள் மூவருமாக நாங்கள் ஏழ்வரும் இணைந்து ஜனாஸா விவகாரம், தனியார் சட்ட விடயங்கள், பிராந்திய பிரச்சினைகள் பற்றி அரசின் உயர் மட்ட தலைவர்களுடன் பேசி தீர்வுகளை பெறவும், நடவடிக்கை எடுக்கவும் கோரி ஆதரவளித்தோம். அதனால் பல விமர்சனங்கள் நாடுதழுவிய ரீதியாக எங்களுக்கு எதிராக எழுந்தது. நாங்கள் ஓடி ஒழியாமல் முன்னின்று போராடி ஜனாஸா விடயத்தில் இறைவனின் உதவியுடன் வெற்றி கண்டோம்.
முஸ்லிம் விவாக- விவாகரத்து சட்டத் திருத்தத்திலும் நீதியமைச்சர் அலிசப்ரியுடன் பேசி முன்னேற்றகரமான திருத்தங்களை உருவாக்கினோம். துரதிஷ்டவசமாக கலகட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி செயலணியொன்றுக்கு தலைவராக நியமித்ததில் பல சங்கடங்களை நாங்கள் அனுபவித்தோம். அதுவிடயமாக அமைச்சர் அலி சப்ரியுடனும் அரச முக்கிய தலைவர்களுடனும் இந்த செயலணியினால் உருவாகப்போகும் பிரச்சினைகள் தொடர்பில் பேசி அதன் பின்னர் நீதியமைச்சரின் முயற்சியினால் அந்த செயலணியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் எம்.பிக்களின் சாமர்த்திய அரசியலின் வெளிப்பாடு என்றார்.
0 comments :
Post a Comment