ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நேற்றைய உயர்பீட தீர்மானத்தை கண்டித்து வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நண்பகல் கல்முனை முஹையதீன் ஜும்மாப்பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை கிளை செயலாளர் மௌலவி ஏ. எல்.எம்.நாஸர், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.எஸ்.எம். நஸீர், கல்முனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தேசமான்ய ஜௌபர், சுன்னத்துவல் ஜமாத் பேரவை தலைவரும், கல்முனை பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான ஏ.எம். ஹனீபா, கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்கள், பல நூற்றாண்டு காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்த முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் ஆட்சிபீடமேறிய சகல அரசாங்கத்துடனும் நெருக்கமான உறவை வளர்த்து வந்துள்ளது. ஆனால் இந்த நாட்களில் நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம் 69 லட்சம் மக்களின் வாக்குகளை பெற்று சிங்கள அரசை நிறுவியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தில் முஸ்லிங்களின் பக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இந்த அரசில் பலவீனமாக உள்ளார்கள். வாக்கெடுப்புக்கு வரவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்க கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று எடுத்திருக்கும் முடிவானது இலங்கையில் வாழும் முஸ்லிங்களுக்கு தீங்காக அமையப்போகும் தீர்மானமாகும். இந்த காலகட்டத்தில் பல்வேறு சிக்கல்களை முஸ்லிங்கள் சந்தித்து வருகிறார்கள். அவற்றை பற்றி சிந்திக்காமல் எடுத்த இந்த தீர்மானத்தை கண்டிக்கிறோம்.
தமிழர்களின் தரப்பில் பல்வேறு சக்திமிக்க அரசியல்வாதிகள் அரசாங்கத்தினுள் இருக்கத்தக்கதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வரவுசெலவு வாக்கெடுப்பில் எதிர்த்து நின்று அரசுடன் முட்டிமோதுவது அரசை முஸ்லிங்கள் விடயத்தில் பிழையான தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும். கல்முனையை துண்டாடவும், ஏனைய மாவட்டங்களிலுள்ள முஸ்லிங்களின் காணிகளை தமக்கு பெற்றுக்கொள்ளவும் முஸ்லிங்களுக்கு எதிராக பல்வேறு திட்டமிடல்களை செய்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், சில இனவாத பொது இயக்கங்களும் பகிரங்கமாகவே முஸ்லிங்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவு திட்ட விவகாரத்தில் அரசை பகிரங்கமாக பகைத்துக் கொண்டு எதிரணியில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது.
கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அடங்களாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிங்களின் கிராமங்கள், காணிப்புலங்கள், உரிமை சார் பிரச்சினைகள், எல்லைநிர்ணய ஆணைக்குழு என்று தொங்கிகொண்டுள்ள உரிமைகளை பெறவேண்டியவர்களாக உள்ளார்கள். கொழும்பில் இருந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட முக்கியஸ்தர்கள் கிழக்கிலுள்ள முஸ்லிங்கள் எதை இழந்தாலும் பரவாயில்லை வாக்கு அரசியல் தான் முக்கியம் என்பதை கிழக்கு முஸ்லிம்களுக்கு அவர்களின் தீர்மானமாக எடுத்துரைத்துள்ளார்கள். எனவே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சகல கட்சி எம்.பிக்களிடமும் நாங்கள் கேட்பது அரசிடம் மோதிக் கொள்ளாமல் தந்திரோபாய வியூகங்களை கையாண்டு பறிபோகும் நிலையிலுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே.
கல்முனை விடயங்களுக்கு மட்டுமின்றி முஸ்லிங்களுக்கு தேவையான அபிவிருத்தி சார் விடயங்கள், உரிமை பிரச்சினைகளை எதிர்காலத்தில் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள சிந்தனை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த காலங்களில் கல்முனை விடயங்களில் கரிசனை கொண்டவராக இருந்துள்ளார். தொடர்ந்தும் அந்த பணியை முன்னெடுத்துச் சென்று கல்முனைக்கானதும், முஸ்லிங்களுக்கானதுமான தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர கட்சி அரசியலுக்காக கல்முனையை தாரைவார்த்து கொடுக்க கூடாது. தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ நினைக்கிறார்கள் அவர்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளை தீர்த்து கொடுத்து நிம்மதியான வாழ்வுக்கு கல்முனை மக்களை வழிநடத்தவேண்டிய தேவை எச்.எம்.எம். ஹரீஸுக்கு உள்ளது.
ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவுக்கு ஞாசாராவின் நியமனம் தொடர்பிலான முரண்பாடுகளை கலைதல் , முஸ்லிம் தனியார் சட்ட பிரச்சினைகள், காணிப்பிரச்சினைகள், உரிமைசார்ந்த தேவைகளை எதிரணியில் இருந்துகொண்டு கூச்சலிட்டு எதிர்த்து சண்டையிட்டு பெறமுடியாது. ஆளும் அரசாங்கத்துடன் ஒன்றித்துச் சென்று பேசி இணக்கப்பாட்டுடன் நடந்து சாதிக்க வேண்டும். கல்முனை மக்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டோர் மு .காவுக்கு ஆதரவளிப்பவர்கள். அதனால் மு.காவை கேள்வி கேட்கும் அதிகாரம் கல்முனைக்கு உள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேச காங்கேசன்துறையில் உள்ள தமிழ் எம்.பிக்களும் தயாராக உள்ளார்கள். ஆனால் கல்முனையை பற்றி பேச மு.கா தலைவர் ஹக்கீம் கூட தயாராக இல்லை என்பதே கவலையான விடயம். மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்களின் தேவைகளை பிரச்சினைகளை தீர்க்க பெரும்பான்மை பலத்துடன் உள்ள அரசுடன் இணைந்து செல்ல வேண்டும். அதுவே எதிர்காலத்தை நோக்கிய புத்திசாலித்தமான நகர்வாக இருக்கும்.
இந்த பாதீடு தோற்குமாக இருந்தால் நாம் எதிர்ப்பது பற்றி சிந்திக்கமுடியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட இந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டம் தோற்க வாய்ப்பில்லை. அதனால் ஆதரவாக வாக்களித்து வெற்றியின் பங்காளிகளாக மாறி சமூக தேவைகளை வெல்ல வேண்டும். நாம் அதிகமாக வாக்களித்து நாம் உருவாக்கிய கடந்த நல்லாட்சியில் நாம் எதையும் சாதிக்கவில்லை. பலத்த சங்கடங்களை கடந்து வந்துள்ளோம். அதனால் இந்த வரவுசெலவுத்திட்டத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இல்லாது பாதீட்டை ஹரீஸ் எம்.பி எதிர்த்தால் கல்முனை மத்தியில் இருந்து அவருக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்குமென இங்கு கருத்து தெரிவித்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். நிஸார், ஏ.சி.ஏ. சத்தார், ஏ.எம். பைரூஸ், கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள் , அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை கிளை தலைவர் மௌலவி பீ .எம்.எம். ஜலீல், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கல்முனை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment