இலங்கை முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்



ந்நாட்டு முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்கு சிலர் முயற்சித்துக்கொண்டி ருக்கின்றார்கள். அதற்காகத்தான் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற செயலணியொன்றை அமைத்துக் கொண்டு மாவட்டம் மாவட்டமாக கூட்டம் நடத்தி திரிகின்றார்கள். இந்த விவகாரம் பெரும்பான்மை சமூகத்தவரிடத்திலும் கூட பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய, இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளா்கள் பற்றிய ஆய்வு நூலான 'திதுலன தாரக்கா' (மின்னும் தாரகை), கடந்த சனிக்கிழமை (04) , கொழும்பு அல்–ஹிதாயா தேசியப் பாடசாலை பஹார்தீன் கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது , பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைப் பெண்கள் மத்தியில் சிறந்த படைப்பாளிகள் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை நாடறிய செய்ய வேண்டுமென்ற நோக்கில் இந்த தொகுப்பை வெளியிட்டுள்ள நூறுல் அயின் சாமான்யமான பெண்ணொருவர் அல்லர். அவருடைய முழுக் குடும்பத்தையும் “கலைக் குடும்பம்” என்ற ழைக்கலாம். கண்டி மாவட்டத்தில் உடுதெனிய என்ற ஊரைச் சேர்ந்த அவர்,மொழிப் புலமை என்ற வகையில் சிங்களத்திலும், தமிழிலும் ஒரு சேர திறமை வாய்ந்தவர். அந்தக் கிராமத்தில் புகழ் பூத்த குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நாட்டு அரசாங்கத்தின் ஊடகங்களின் தொடர்பாடல் விடயத்தில் முக்கியமான இலங்கை தகவல் திணைக்களத்தில் அவர் நீண்ட காலமாக பணியாற்றியிருக்கிறார். கொழும்பு மாவட்ட செயலகத்திலும் நூறுல் அயின் ஊடகத்துறையில் கடமையாற்றியுள்ளார்.அவரது வெற்றியில் மிக முக்கிய பங்குதாரரானஅவரது கணவர் நஜ்முல் ஹுஸைன் நல்ல இலக்கியவாதியும்,சிறந்த கவிஞருமாவார்.

இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் காதர் மொகிதீன் கலந்து சிறப்பிப்பதும் சாலப் பொருத்தமானதும்,மகிழ்ச்சிக்குரியதுமாகும்.

பெண் படைப்பாளிகள் என்ற விடயத்தில், எழுத்தாளர் சம்மேளனத்தின் செயலாளர் கமல் பெரேரா இங்கு கூறியவாறு, பெண் எழுத்தாளர்களுக்கு எல்லைச் சுவர் எழுப்புவதில் ஆண்கள் முண்டியடித்துக்கொடுத்து தருகின்ற அவஸ்த்தையென்பது சங்கடமான விடயமாகவுள்ளது. அது மட்டுமல்லாது, உலமாக்கள் சிலரும், பள்ளிவாசல் நிருவாகங்களும் தலையிட்டு இவ்விடயம் தொடர்பில் “பத்வா”(மார்க்கத் தீர்ப்பு) வழங்குகின்ற விவகாரம் என்னைப் பொறுத்தமட்டில் மாறிவரும் இன்றைய சூழலில் முஸ்லிம் சமூகம் சம்பந்தமான தவறான பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, எங்களது சமூகத்திலுள்ள பெண்களின் படைப்பாற்றலை ஊனப்படுத்துகின்ற செயலாகவும் அமைந்துவிடுவதை நான் பார்க்கின்றேன். தேவையற்ற இந்த தலையீடு என்ற விவகாரம் மிகவும் வேதனைக்குரியது.அவ்வாறு பெரும்பான்மையின சகோதரரான அவர் கூறுவதை அவரது புரிதலின் அடிப்படையிலேயே நாம் எடுத்து நோக்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்சினை மிகவும் பூதாகரமாக வரக் கூடியது. இவ்விடயம் தொடர்பில் நாம் மிகவும் பக்குவமாக இருக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் எமது இந்தச் சமூகம் தீவிரவாத்திற்கு உடந்தையான சமூகம் என்று நிறுவுவதற்கு காத்துக்கொண்டிருக்கும் பலருக்கு துரும்பாக அமையக் கூடிய விடயங்கள் தான் இவ்வாறான விவகாரங்களாகும். இத்தகைய சமூக கட்டமைப்புக்குள் இருக்கின்ற சீரழிவிலிருந்து எவ்வாறு எமது சமூகத்தை காத்துக்கொள்வது என்ற பெரிய சிக்கலுக்குள் நாங்கள் இருக்கின்றோம்.

நான் உலமாக்களை குறை கூறவில்லை. அண்மையில் தன்னை ஆலீம் என்று சொல்லிக்கொண்டு ஒருவர், முக நூலில் படுமோசமான பதிவொன்றையிட்டிருந்தார். அதாவது, சமூக வலைத்தளங்களில் பெண்கள் தமது படங்களை பதிவிட்டால் அத்தகையவர்களுக்கு நிச்சயமாக நரகம்தான் கிடைக்கும் என அவர் பதிவிட்டிருந்தார்
அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதத்தில் எனது உறவினரொருவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றுகின்ற எழுத்தாளரும், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை வாய்ந்தவருமான லரீனா ஹக் என்பவர் விசனமடைந்து, நறுக்கென பேச்சு வழக்கில் நாட்டுப்புறப் பாணியில் அழகாக பதிவொன்றையிட்டுவிட்டார். நான் அதனைப் பார்த்துவிட்டு, அதற்கு கருத்துக் கூறினால் இந்தச் சமூகத்தில் உள்ள சிலர் என்னுடன் வரிந்துகட்டிக்கொண்டு வம்புக்கு வந்துவிடுவார்கள் என்றெண்ணி, "லைக் "மட்டும் கொடுத்துவிட்டு கருத்துக்கள் எதுவும் கூறாமல் மௌனித்து விட்டேன்.
உடனே அவர், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் ஆத்திரம் பொங்க கதைத்தார். நான் பொறுமையாக செவிசாய்த்து விட்டு, "இதன் பிறகு எதுவித அசம்பாவிதங்களும் உங்களை வந்தடையாமல் காத்துக்கொள்ளுங்கள் " என்று கூறினேன். ஏனெனில், இன்று இத்தகைய விவகாரங்கள் மிக மோசமான திக்குகளிலே போய்க்கொண்டிருக்கின்றன.
நல்ல படைப்பாற்றல் கொண்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களிலுள்ள சில சூட்சுமங்கள், இலக்கிய நயம், கற்பனை வளம் போன்றவற்றை இரசிப்பதை விடுத்து, ஒரு சாரார் வேறு எங்கேயோசென்று அவற்றிலுள்ள குறைகளைத் துருவித் துருவித் தேடித் திரிகின்றனர். இது மிகவும் சங்கடத்திற்குரிய விடயமாகும்.
சென்னையில் “அடையாளம்” பதிப்பகத்திலிருந்து நண்பர் சாதிக் இலங்கை வந்த போது என்னைச் சந்தித்தார். அப்போது அவர் மிக கவலையோடு என்னிடத்தில் ஒன்றைக் கூறினார் “நான் இங்கு கவிஞரொருவரை தேடி வந்தேன். இலங்கையில் மிகவும் அபூர்வமான எழுத்தாற்றல் கொண்ட பெண் கவிஞரொருவரது புத்தகங்களை நாங்கள் ஒப்பந்தம் செய்து வெளியிடலாம் என தேடி வந்தேன். ஆனால், என்னை முந்திக் கொண்டு, 'காலச்சுவடு' பதிப்பகம் அவ்வொப்பந்தத்தை செய்து கொண்டார்கள். எனக்கு மிகவும் மனவருத்தமாக இருக்கின்றது" எனக் கூறினார். "யார் அந்த எழுத்தாளர்?" எனக் கேட்டேன் அதற்கவர் "அனார் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?" எனக் கேட்டார்.
அதற்கு பின்னர்தான் இந்த அனார் என்பவர் யார் என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் கிழக்கு மாகாணத்தை அடித்தளமாக கொண்ட பிரதானமான அரசியல் கட்சியின் தலைமையாக இருந்தும் கூட அவரை அறியாதிருக்கின்றேனே என நினைத்தேன். பின்னர் அந்த எழுத்தாளரது புத்தகங்களை அவராகவே அன்றிலிருந்து இலவசமாக எனக்கு அனுப்பிவைக்கத் தொடங்கினார்.
அந்த இஸ்ஸத் ரிஹானா எனப்படும் அனார் சாய்ந்தமருதில் மௌலவி ஒருவரின் மகளாவார். அவர் இன்று தமிழ் எழுத்துலகில் மூலை முடுக்கெங்கும் பேசப்படுகின்ற ஒ ரு நல்ல கவிஞராக முன்னேற்றம் கண்டுள்ளார். கடந்த மாதம் லண்டனிலிருக்கின்ற மூன்று முக்கியமான பல்கலைக்கழகங்களில் அவருடைய கவிதை நூல்களை ஆய்வு செய்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பகுப்பாய்வு நடத்தினார்கள். எமது நாட்டு எழுத்தாளர்கள் தொடர்பில் இவ்விடயத்தில் நாங்கள் மகிழ்ச்சி யடைய வேண்டும்.

மீமெய்யியல்(Surrealism) என்ற விடயத்தை எமது நாட்டு கவிஞர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை எண்ணி நாங்கள் பெருமைப்பட வேண்டும்.
இதைவிடுத்து ,தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பிவிடக் கூடாது. இன்று பெரும்பான்மையினத்தவர்கள் கூட பெண் படைப்பாளிகள் தொடர்பில் விமர்சிக்குமளவுக்கு வந்திருப்ப து மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்திற்குள் எங்கெங்கெல்லாம் பிழைகளை கண்டுபிடிக்கலாமென ஓடித்திரிகின்ற கூட்டமொன்று உலாவரும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
பாராளுமன்றத்திலும் பெண்கள் சம்பந்தமாக நிறையப் புரளிகள் அவ்வப்போது கிளப்பப்படுகின்றன.

மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்தினவின் தந்தை மற்றும் கணவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களாவர். அவர் பெண் என்ற ரீதியில் பல விடயங்களை மிகவும் துணிகரமாக பேசுபவர். அண்மையில் அவ்வாறு பாராளுமன்றத்தில் எழுந்து நின்று பேசுகையில், எங்களது புதிதாக வந்த இளம் உறுப்பினரொருவர் தலையிட்டுச் சொன்ன விவகாரம் இன்று மிகப் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது.

சிலேடையாக அவர் கூறிய விடயம் இன்று பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரம் பெண்களுக்கு மிக ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற விடயமாக மாறி, விஷயம் தெரியாமல் உளரிக் கொட்டிய அந்த பாராளுமன்ற உறுப்பினரை சமூக வலைத்தளங்களில் கிழித்து வாங்குகின்றார்கள்.
பெண்கள் மீது பிரயோகிக்கும் தேவையற்ற வசனங்கள் என்ற விவகாரம் மிகவும் கண்டனத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது. இவ்வாறாக
இந்த நிலைமை இலங்கைப் பாராளுமன்றத்திற்குள்ளும் காணப்படுகின்றது.

இவ்விடயத்திற்காக நான் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை மன்னிப்புக் கேட்க சொல்ல வேண்டுமென சபாநாயகரிடம் சொன்னேன். சம்பந்தப்பட்டவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நான் சில வருட காலம் அந்த சபைக்குத் தலைமை தாங்கியவன் என்ற அடிப்படையில் , "குறைந்த பட்சம் உங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை ஒரு நாளைக்காவது பாராளுமன்றத்திற்கு வருகை தராமல் செய்து அடையாள ரீதியான தண்டனையையாவது வழங்குங்கள்" எனக் கூறினேன். அதையும் அவர் செய்யவில்லை.
பெண்களுக்கு மத்தியில் இவ்விடயம் பேசுபொருளாக ஓங்கியுள்ளது.

இந்த யுகம் மிகவும் வித்தியாசமானது. பெண்கள் சம்பந்தமான விடயங்களை தாங்கள் தான் நிர்வகிக்க வேண்டுமென ஆண்கள் நினைப்பது குடும்பத்தை மையப்படுத்தியே கூறப்பட்ட விடயமாகும். உழைக்கின்ற ஆண் குடும்ப நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருப்பான் என்பதே இதன் கருத்தாக உள்ளது.இதர விடயங்களிலும் அவ்வாறு பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.அதுபற்றிய திருக் குர்ஆன் வசனத்திற்கு சிலர் வித்தியாசமாகப் பொருள் கோடல் செய்கின்றனர். மேலும் ,எந்த தலைமை பதவிக்கும் பெண்கள் சரிவராது என்ற சொல்லுகின்ற காலமாகப் பார்க்க முடியாது. எங்கும் பெண்களுடைய தலைமைத்துவம் இருக்கின்றது. எத்தனையோ ஆண்கள் பாடசாலைகளுக்கு பெண்கள் அதிபராக இருக்கின்றார்கள். அரசியலில் கூட பெண்கள் உள்வாங்கப்படக் கூடாது எனக் கூறுவது இப்பொது இருக்கின்ற சூழலுக்கு ஒவ்வாத விடயமாகவே கருதப்படுகின்றது. அது பெண்களது வளர்ச்சிக்கு தடைபோடுகின்ற விடயமாக மாறிவிடுகின்றது. மேலும் இது சம்பந்தமான தவறான பார்வையை மாற்று சமூகத்தவர் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றது.
இப்போது நாங்கள் செய்யத் தவறிய ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு, இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்று இந்நாட்டில் இடம்பெறக் கூடிய சகல விதமான தீவிரவாதத்திற்கும் காரணம் முஸ்லிம்களது தனியார் சட்டமெனச் சொல்கின்றார்கள். முஸ்லிம்களது விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்துகின்ற விவகாரத்தில் தேவையில்லாமல் ஆன்மீக மற்றும் அரசியல் தலைமைகளும் இழுத்தடிப்புச் செய்தமையே இன்று "குரங்கின் கையில் பூமாலை"யாக மாறியுள்ளது. இப்போது ஆட்சியாளர்கள் தமக்கேற்றவாறு தயார்படுத்தவும், திரிபுபடுத்தவும் எமது குறைகளை அலசி ஆராய்கின்றனர்.

நீதி அமைச்சரும் பெரும் தடுமாற்றத்தில் இருக்கின்றார். அவரை குறை சொல்லவும் முடியாது. நானும் நீதி அமைச்சராக இருந்தவன் என்ற அடிப்படையில் என்னுடைய அமைச்சு காலத்திலும் கூட அதனை சரிசெய்ய முற்பட்டோம். பிரதம நீதியரசருடன் இணைந்து குழுவொன்று நியமித்து , அதற்கான இறுதி அறிக்கையை தயாரித்த போது ஆதரவாகவும், எதிராகவும் ஒன்பதுக்கு ஒன்பதாக இரண்டாகப் பிரிந்து விட்டார்கள். அதை வைத்துக்கொண்டு அவ்விவகாரம் இழுபறியானது. இடையில் சஹ்ரான் செய்த நாசகாரச் செயலால் இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. அதனை இலகுவாக விட்டுக்கொடுக்கவும் முடியாது. போராடத்தான் வேண்டும்.

ஆனால், இதில் எங்கு பிழை இருக்கின்றது என்று பார்த்தால், எங்களது தேவையற்ற இழுபறிகள் காரணமாகத் தான் இதனைச் சரி செய்ய முடியாதுள்ளது. சில விடயங்களை பொறுத்தமட்டில் கட்டாய விட்டுக்கொடுப்புக்களைச் செய்து தான் ஆகவேண்டியுள்ளது. இப்போது எல்லோரும் வந்து மூக்கு நுழைக்கின்ற விடயமாக நாங்களாகவே இதனை ஆக்கிவிட்டோம். இப்போது இருக்கின்றதையும் பறிகொடுக்கக் கூடிய நிலைமை வந்துவிடாமல் எப்படியாவது எங்களுடைய தனியார் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்.

மத்ரஸா பாடத்திட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள முற்படுகின்றார்கள். முஸ்லிம்கள் மத்தியில் ஒவ்வொரு விதமான சிந்தனா வட்டங்கள் இருக்கின்றன. விதவிதமான கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொண்ட பாட விதானங்களை ஒருசேர அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக முஸ்லிம் சமய,கலாசார விவகாரத் திணைக்களம் ஈடுபட்டிருக்கின்றது. அதற்கான நல்ல பரிந்துரைகளை செய்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. அவ்வாறிருக்க, இப்பொழுது அரபு மதரஸாக்களுக்கு மூடு விழா நடத்துவதற்கு அரசாங்கம் எத்தனித்து வருகின்றது.
வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஆய்வு செய்வதற்கென பேராசிரியர்கள் சிலரை இங்கு வரவழைத்துள்ளனர். ஜாமிஆ நளீமிய்யா தொடர்பிலும் கூட தேடிப் பார்க்கின்றனர். தேவையற்ற விபரீதங்களை இன்று முஸ்லிம்களுக்கு மேல் கொண்டுவருவதற்கான எத்தனங்கள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து மீள்வதற்கு எங்களுக்கு மத்தியிலும் மிக பக்குவமாகவும் நேர்மையாகவும் வாதாடிப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றை பயன்படுத்தி இன்றிருக்கின்ற சூழலில் சில சக்திகள் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஒருசிலர் முயற்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காகத் தான் “ஒரு நாடு ஒ ரு சட்டம்” செயலணியொன்றை அமைத்துக் கொண்டு மாவட்டம் மாவட்டமாக கூட்டம் நடத்தி திரிகின்றார்கள். இந்த விவகாரம் பெரும்பான்மை சமூகத்தவரிடத்திலும் கூட பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

அண்மைக்காலமாக இடம்பெற்று வரக் கூடிய சம்பவங்கள் தொடர்பில் சற்று ஆறுதலளிக்கின்ற வகையில் அசாத் சாலியின் விடுதலை அமைந்துள்ளது. மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் நேர்மையாக அமைந்திருந்தது. முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்காக நாங்கள் செல்ல இருக்கின்ற ஒரே இடம் தான் நீதிமன்றம். இன்று முதுகெலும்புள்ள நீதிபதிகளும் இருக்கின்றார்கள்.
அசாத் சாலியின் வழக்கில் மேல்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு கன்னத்தில் அறைந்தததைப் போன்று சொல்லப்பட்டிருந்தது. அவருடைய ஆறுதலுக்காக நான் இரண்டு நாட்கள் வழக்காடுகின்ற இடத்தில் போய் அமர்ந்து விசாரணையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சாட்சியங்களை நெறிப்படுத்துகின்ற போது நீதிபதி இதிலுள்ள உள்நோக்கங்கள் வேறு என்பதை உணர்ந்துக்கொண்டார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. தீர்ப்பைப் பார்த்த போது மிகவும் சந்தோஷப்பட்டேன்.
இந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டைக் கொண்டு வந்தவர்களை நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது.
வெறுப்பு பேச்சை குற்றமாகச் செய்ய சட்டமூலம் கொண்டுவந்த நோக்கம் வேறு. அதனை இவர்கள் பிரயோகிக்கும் முறை வேறு. அசாத் சாலி கூறியதை வைத்து இனங்களுக்கிடையில் பிரிவினையை கொண்டுவருகின்றார் என வியாக்கியானம் கொடுத்து அவரைத் தண்டிக்க முற்பட்டார்கள். அதற்கு நீதிமன்றம் இடமளிக்கவில்லை.
அதுமட்டுமல்லாது, அண்மையில் விலங்குகளுக்கு எதிராக வன்முறை செய்யக் கூடாதென்ற சட்டத்தைப் பாவித்து யானைகளை பலவந்தமாக வைத்திருக்க கூடாது என வழக்கு தொடரப்பட்டது. யானைகளை உரியவர்களுக்கு கையளிக்க வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்தது. உயர்நீதிமன்றம் இதனால் சட்டமா அதிபரை கண்டித்து இருக்கின்றது. அமைச்சரவை தீர்மானத்திற்கமைய வழக்குகளை வாபஸ் பெற முடியாது.அவர்களுக்கிருக்கின்ற சமூக கடமையை சிந்தித்து அவர்கள் அதில் செயற்பட வேண்டுமென மிக தெளிவான தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடுமையான விமர்சனமாக அந்த தீர்ப்பு வந்திருக்கின்றது. இவை நாட்டில் நீதித்துறையில் ஒருவிதமான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது என்றார்.
"தினகரன் "மற்றும் "தினகரன் வாரமஞ்சரி" பிரதம ஆசிரியர் செந்தில் வேலவா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் , கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீா் மாக்கார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன்ஆகியோரும், திருச்சி மௌலவி ஜலீல் சுல்தான்,தமிழக ஊடகவியலாளர் சாஹுல் ஹமீது, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளா் முன்னாள் இராஜதந்திரி எம். அன்சாா் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :