தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்புதற்காக ஓர் ஆவணத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அதில் இரு முஸ்லிம் கட்சித் தலைவர்கட்கும் கையொப்பமிட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் முஸ்லிம் தலைவர்கள் கையொப்பமிடுவது சமூகத்திற்கு ஆபத்தானது. எனவே, முஸ்லிம் தலைவர்கள் கையொப்பமிடக்கூடாது. அவ்வாறு கையொப்பமிட்டால், ஜம்இய்யா, முஸ்லிம் சிவில் அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்கள் அக்கையொப்பம் அவர்களது தனிப்பட்ட முடிவே தவிர, சமூகத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை; என்பதைப் பகிரங்கப் படுத்துவதன்மூலம் சமூகத்திற்கெதிரான எதிர்கால பாதிப்பைத் தவிர்க்க வேண்டும்; எனக்கோரி ஓர் சுருக்கமான பதிவை இட்டிருந்தேன். அது தொடர்பான விளக்கமான ஆக்கத்தை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். அவ்விளக்கத்திற்குள் இப்போது செல்வோம். இவ்வாவணம் இரு பிரிவைக் கொண்டிருக்கிறது. ஒன்று அதன் பிரதான கடிதம். இதில்தான் தலைவர்கள் கையொப்பமிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அடுத்தது பிரச்சினைகள் தொடர்பான ஓர் பட்டியல்.அப்பிரதான கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய விடயங்கள்.
சர்வதேச நியமங்கள், சட்டங்களுக்கு இசைவான, தமிழ்பேசும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டித் தத்துவம், “இலங்கை- இந்திய உடன்படிக்கையைத் தொடர்ந்து உள்வாங்கப்பட்டிருந்த ஆரம்ப ஏற்பாடுகளின்படி” 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல். அதாவது, வட கிழக்கு இணைப்பு, சில சமகாலப் பிரச்சினைகள். அதாவது, காணிபறித்தல், இயற்கை வழங்களை சூறையாடுதல், பாரம்பரிய தமிழ்ப் பிரேசங்களில் சிங்கள குடியேற்றம், மீனவர் பிரச்சினை போன்றவை மேலெழுந்தவாரியாக இணைத்துள்ள பட்டியலைப் பொறுத்தவரை காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட 13ஐ முழுமையா அமுல் படுத்தல், மொழியுரிமை. இவ்வாறு பல விடயங்கள் கூறப்படுகின்றன. பெரும்பாலானவை, நேரடியாக தமிழ்மக்களைப் பாதிப்பவை. சில, தமிழ், முஸ்லிம் தரப்புகளைப் பொதுவாகப் பாதிப்பவை. இவற்றுள் பிரதானமாக, ஒரே நாடு ஒரே சட்டம் மற்றும் தேர்தல்முறை மாற்றம் முஸ்லிம்களை அதிகமாக பாதிக்கக்கூடியவை.
அதேநேரம், இலங்கையில் முதலாவது பௌத்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்களே! என்பதை ஏற்றுக்கொள்ளல் என்பதும் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான கருத்துக்களை திரு விக்னேஸ்வரன் அவர்கள் அண்மையில் முன்வைத்து அவை பிரச்சினைகளுக்குள் மாட்டியதும் நாம் அறிந்ததே.
எனவே, இந்நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்; என முஸ்லிம் தலைவர்களும் கையெழுத்திடுவது ஏற்கனவே இருக்கின்ற இன வெறுப்புச் சூழ்நிலையில் வீண் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். ஆனால், இவ்வாவணத்தில் முஸ்லிம் தலைவர்கள் கையொப்பம் வைக்கக்கூடாது; என்பதற்கான காரணம் இப்பட்டியலில் உள்ளவை அல்ல. மாறாக பிரதான கடிதத்தில் உள்ளவையாகும். அவற்றைத்தான் இப்பொழுது பார்க்கபோகிறோம். வட கிழக்கு இணைப்பு
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து “உள்வாங்கப்பட்ட ஆரம்ப ஏற்பாடுகளின்படி” 13 ஐ முழுமையாக அமுல்படுத்தல். என்பது அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு என்றால் அல்லது 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதென்றால் நிச்சயமாக இணைந்த வட கிழக்கிற்குள்தான் தமிழ்த்தலைவர்கள் கோருவார்கள்; என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். வட கிழக்கு இணையாத ஒரு தீர்வை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதேநேரம், மேற்படி ஆவணத்தில் “ வடக்கு, கிழக்கு இணைப்பு” என்ற நேரடி வார்த்தைப் பிரயோகம் இல்லை. இதன் பொருளென்ன? வட கிழக்கு இணைப்பைத் தமிழ்த்தலைமைகள் கைவிட்டு விட்டனவா? அதனைக் கைவிட்டுவிட்டா, சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டித் தீர்வை தமிழ்த்தலைமைகள் கோருகின்றன.
அவ்வாறாயின் “வடக்கு-கிழக்கு” இணைப்பு என்ற வாசகம் ஏன் இடம்பெறவில்லை? இதுதான் சிந்திக்கக் கூடியவர்கள் எழுப்ப வேண்டிய கேள்வி- ஆம், அந்த வாசகத்தைத்தான் மறைமுகமாக, “ இலங்கை- இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உள்வாங்கப்பட்ட ஆரம்ப ஏற்பாடுகளின்படி ( original arrangements) 13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த ஆரம்ப ஏற்பாடுகளில் பிரதானமானதுதான் “ வட- கிழக்கு இணைப்பு”. அதனைத்தான் கோருகிறார்கள். அதற்குத்தான் நமது முஸ்லிம் தலைவர்களை கையொப்பம் வைக்கக் கோருகிறார்கள். மட்டுமல்ல, அந்த ஆவணத்தில் ஆங்கிலத்தில் “ the North and East “ என்றுதான் பாவிக்கின்றார்களே தவிர, the North and the East “ என்று பாவிக்கப்படவில்லை.
ஆங்கில இலக்கணம் தெரிந்தவர்களுக்குத் தெரியும், இவை இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு.
முதலாவது, ஒரே பிரதேசத்தைக் குறிக்கும். இரண்டாவது, இரு பிரதேசங்களைக் குறிக்கும். உதாரணமாக, The chairman and the Secretary என்பது இருவரைக் குறிக்கும். ஒருவர் chairman, அடுத்தவர் Secretary. The chairman and Secretary என்றால், இரு பதவிகளையும் வகிக்கின்ற ஒருவரைக் குறிக்கும். எனவே, அவர்கள் அர்த்தபுஷ்டியுடன்தான் The North and East என்று எழுதியிருக்கின்றார்கள். இதில் கையொப்பம் வைப்பவர்கள் எல்லோருக்கும் இது புரிகிறதோ, இல்லயோ, இந்திய ராஜதந்திரிகளுக்கு நிச்சயம் புரியும். இந்த முஸ்லிம் தலைவர்களிடம் சமூகம் எழுப்ப வேண்டிய முக்கிய கேள்வி: தமிழர்கள் தனிநாடு கேட்டுப்போராடினார்கள். யுத்தம் செய்தார்கள். தற்போது இணைந்த வட கிழக்கில் சமஷ்டித் தீர்வுகேட்கிறார்கள். அவர்கள் ஓர் தனி சமூகம். அது அவர்களுடைய நிலைப்பாடு. அது எங்களுடைய நிலைப்பாடா? அவர்கள் இந்தியாவிடம் விடுக்கும் கோரிக்கைகளை, “எங்களுடைய கோரிக்கையும் அவைதான்” என்று நாங்களும் கையொப்பம் வைக்க வேண்டிய தேவை என்ன?
வெறும் கண்துடைப்பிற்காக ‘ ஒரே நாடு, ஓரே சட்டம், தேர்தல் சீர்திருத்தம், ஒவ்வொரு சமூகங்களின் கலாச்சாரங்களைப் பேணுவது’ போன்ற பொதுவான ஒரு சிலவிடயங்களையும் அந்தப் பட்டியலில் உள்வாங்கிவிட்டு, பொதுவான பிரச்சினைகளுக்கான ஆவணமே இது என்று மக்களை ஏமாற்றி தமிழர்கள் அவர்களுக்காக பல்லாண்டுகளாக செய்துவரும் போராட்டத்தை தமிழ், முஸ்லிம் மக்களுடைய போராட்டமாக காட்டி இந்திய ஆதரவைக்கோர முஸ்லிம் தலைவர்கள் கையொப்பமிடவேண்டிய அவசியமென்ன?
இன்று நாட்டில் சிறுபான்மைகள் முகம் கொடுக்கின்ற சில பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தனியாக அடையாளம் கண்டு ஒரு பொது ஆவணம் தயாரித்தால் அது வேறுவிடயம். வட கிழக்குத் தீர்வு என்பது தனியான விடயம். அதில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. முஸ்லிம்களின் நிலைப்பாட்டைக் குப்பைக்கூடைக்குள் தள்ளிவிட்டு தமிழர்களின் நிலைப்பாட்டை பிரதானமாகக்கொண்ட கடிதத்தில் கையொப்பம் வைக்கவேண்டிய அவசியமென்ன? அன்று இந்தியாவாகவே, முஸ்லிம்களைப் புறக்கணித்தது. இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்களைக் கண்டு கொள்ளவில்லை. தமிழர்களின் பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து இலங்கை- இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது. அதனால்தான் மறைந்த தலைவர் அதனை நிராகரித்தார்.
முஸ்லிம்களை ஒரு தனித்துவ சமூகமாக கருதாத இலங்கை- இந்திய ஒப்பந்தம்தான் முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆலவிருட்சமாய் வளர பிரதான பிரச்சார காரணியாக அமைந்தது. இன்று மறைந்த தலைவர் ஏற்றுக் கொள்ளாத, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13ஐ முழுமையாக அமுல் படுத்தவும் அதன்பின் அதற்குமேல் சென்று சமஷ்டித் தீர்வையும் கோரிநிற்கின்ற ஆவணத்தில் முஸ்லிம் தலைமைகள் கையொப்பமிடுவது மறைந்த தலைவர் உருவாக்கிய கட்சியை வைத்துக்கொண்டு அவருக்குச் செய்கின்ற துரோகமில்லையா? சமூகத்திற்கு செய்கின்ற அநியாயமில்லையா? எந்த இந்தியா, முஸ்லிம்களை ஒரு தனித்துவ சமூகம்; என ஏற்றுக்கொள்ள மறுத்ததோ, எந்த இந்தியா, நீங்களெல்லாம் தமிழர்களே! தமிழர்களுக்கும் கோவிலுக்கு செல்கின்ற தமிழர்கள் இருக்கின்றார்கள்; தேவாலயத்திற்கு செல்கின்ற தமிழர்கள் இருக்கின்றார்கள். பள்ளிவாசலுக்கு செல்கின்ற தமிழர்கள் இருக்கின்றார்கள். உங்கள் வணக்கஸ்தலங்கள்தான் வேறே தவிர, நீங்களெல்லாம் தமிழர்களே! என்று எங்களை ஒரு தனித்துவ சமூகமாக அங்கீகரிக்க மறுத்ததோ.
அதே இந்தியாவுக்கு, நாங்கள் ஒன்றும் தனித்துவ சமூகம் அல்ல, தமிழர்களும் நாங்களும் ஒரே சமூகமே!. பெயரை மட்டும் தமிழர் என்று சொல்லாமல் “தமிழ்பேசும் மக்கள்” ( Tamil Speaking People) என்று போட்டால் போதும். நாங்கள் தனித்துவ சமூகமல்ல; என்று நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்களே. அக்கடிதத்தில் Tamil speaking people என்றுதான் எழுதப்பட்டுள்ளதே தவிர, Tamil speaking peoples என்றோ, Communities என்றோ குறிப்பிட்படவில்லை. அவர்கள் கோரியிருக்கின்ற சுயநிர்ணய உரிமை தொடர்பாக குறிப்பிடும்போது, இவ்விடயத்திற்குள் விரிவாகச் செல்வோம். அன்று இந்தியா சொன்னது “ நீங்கள் தனித்துவ சமூகமில்லையென்று”. அதற்கெதிராக தனித்துவ கட்சி உருவாகியது. இன்று அந்த தனித்துவ கட்சியே, நாங்கள் தனித்துவ சமூகமல்ல, நாங்களும் தமிழர்களும் ஒன்றுதான். தமிழர்களின் பிரச்சினைதான் எங்களின் பிரச்சினை. “எங்களைத் தமிழர் என்று அழைக்காமல் தமிழ் பேசும் மக்கள்” என்று அழைத்தால்போதும் என்கிறீர்களே.
நீங்கள்தான் மறைந்த தலைவரின் கட்சியின் இன்றைய தலைமையா? அன்று-2002 ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒஸ்லோவில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியபோது, முஸ்லிம்கள் தனித்தரப்பா? அரச தரப்பா? என்ற கேள்வி எழுந்தபோது, “அரச தரப்பாக செல்லுவோம்” என்று கட்சியின் உயர்பீடக்கூட்டத்தில் வந்து சொன்னீர்கள். ( அதை நாங்கள் எதிர்த்தோம், என்பது வேறு விடயம்). ஏன் அப்பொழுது தமிழ்த்தரப்பாய்ச் செல்வோம்; என்று கூறவில்லை. இப்பொழுது மட்டும் எவ்வாறு தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு தமிழ்த்தரப்பாய் ஆவணத்தில் கையொப்பமிடப் போகிறீர்கள். அன்று ஆகக்குறைந்தது தனித்தரப்பாய்ப் போவோம்; என்றாவது கூறாமல் அரச தரப்பாய்- அதாவது “பேரின வாதத்தரப்பாய் போவோம்;”என்றீர்கள். இப்பொழுது ஒரு முழுமையான “U” turn அடித்து தமிழ்த்தரப்பாய் மாறினீர்கள்?
எப்பொழுதாவது “ முஸ்லிம் தரப்பாய்” இருக்கின்ற நோக்கம் இருக்கின்றதா? ஆனாலும் நீங்கள் “முஸ்லிம் தனித்துவக் கட்சியின் தலைமை”. நீங்களும் அவ்வாறுதான் கூறுகின்றீர்கள்; மக்களும் அவ்வாறுதான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பேதைகள். நான் இத்தலைவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி நீங்கள் கொயொப்பமிட இருக்கும் இந்தக் கடிதத்தில் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக ஒரு வாசகமாவது இடம்பெற்றிருக்கிறதா? ஏன் இடம்பெறவில்லை. வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கவேண்டும்; என்பது முஸ்லிம்களின் நிலைப்பாடு; அதனைப் பெற ஆதரவளியுங்கள் இந்தியப் பிரதமரே!என்றாவது எழுதியிருக்கிறீர்களா?
சரி, அது போகட்டும்: வட கிழக்கில் தென்கிழக்கை அடிப்படையாகக் கொண்டு, வட கிழக்கில் அல்லது கிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களை இணைத்த ஓர் தனியலகு முஸ்லிம்களின் நிலைப்பாடு; எனவே, அதனைபெற உதவுங்கள், என்றாவது எழுதியிருக்கிறீர்களா? சரி, அதையும் விடுங்கள். ஆகக்குறைந்தது; தென்கிழக்கு அலகு முஸ்லிம்களின் நிலைப்பாடு; அதனைப் பெற்றுத்தர உதவுங்கள்; என்றாவது எழுதியிருக்கின்றீர்களா? முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக எதுவும் இல்லாத, முழுக்க,முழுக்க தமிழர்களின் நிலைப்பாட்டை மட்டும் கொண்ட ஓர் கடிதத்தில் நீங்கள் கையொப்பமிட உங்களைத் தூண்டும் சக்தி எது? அதைக்கூறுவீர்களா? முஸ்லிம்களை அடகுவைக்க ஏன் துணிந்தீர்கள். இந்த அரசாங்கம் இந்தியா சொல்வதற்காக வட கிழக்கை இணைத்துவிடும்; என்பதல்ல. இங்கு அமெரிக்காவும் செயற்பட இருக்கிறது. ஆனான ஜே ஆர் ஜயவர்த்தனாவே, இந்தியாவின் அழுத்தத்திற்குப் பயந்து வட கிழக்கை இணைத்தார்; என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இந்நிலையில் அழுத்தங்கள் காரணமாக, இலங்கை அரசு, இணைக்க நேர்ந்தால் அதற்கான ஏற்பாடு 13 வது திருத்தத்தில் ஏற்கனவே இருக்கிறது. தேவையெல்லாம் ‘மாகணசபைச் சட்டத்திற்கு ஒரு சிறிய திருத்தம் மாத்திரம்தான். அதற்கு சாதாரண பெரும்பான்மை போதும். அரசாங்கம், இந்திய, அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிகிறதோ, இல்லையோ, இக்கடிதம் ஓர் “ வரலாற்று ஆவணமாக மாறப்போகிறது” அதில் ‘வட கிழக்கு இணைப்பை முஸ்லிம் ஏற்றுக்கொண்டார்கள்’ என்று பதிநப்படப்போகின்றது; இவர்களது கையொப்பத்தால். ஜம் இய்த்துல் உலமா சபையினரே! சிவில் அமைப்பினரே! பள்ளிவாசல் நிர்வாகங்களே! இதனைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கப்போகிறீர்களா? இக்கையெழுத்தைத் தடுக்க முன்வரமாட்டீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நூருல் ஹுதா உமர்
0 comments :
Post a Comment