இலங்கையின் முதலாவது தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பேரவையானது தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களை நியமிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஏனைய ஊடகதுறை சார் செயற்பாட்டாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் அமைப்புக்களிடம் பரிந்துரைகளை கோரி அழைப்பு விடுத்தது. ஆணைக்குழுவின் நியமனங்களுக்கு 20 மேற்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற பேரவையானது தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தொடர்ச்சியான செயற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் பொருத்தமான பரிந்துரைகளை ஜனாதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வது பாராளுமன்ற பேரவையின் கடமை எனவும் இறுதியாக ஜனாதிபதியினால் குறித்த பதவிகளுக்கான நியமனங்களை வழங்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
கொவிட்-19 தொற்றின் பரவல் காரணமாக, பல தகவல் அறியும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் அல்லது தகவல் வழங்குவதில் தாமத நிலைமை ஏற்பட்டதன் காரணமாக அதிகளவான மேன்முறையீடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையானது பொதுமக்கள் தமக்கு தேவையான தகவல்களை அணுகுவதில் இன்னும் அதிகமான தாமதத்தினை ஏற்படுத்த வழிவகுக்கும்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது RTI ஆணைக்குழுவிற்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிப்பதன் முக்கியத்துவம் பற்றி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எடுத்துரைத்தது. மக்களின் தகவல் அறியும் உரிமையினை பாதுகாக்க மற்றும் RTI ஆணைக்குழுவின் சுதந்திரமான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க சுயாதீன ஆணையாளர்கள் நியமிக்கப்படுவது முக்கியமாகும்.
ஆகவே, தாமதமின்றி தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் நியமனங்களை துரிதப்படுத்துமாறு TISL நிறுவனமானது பாராளுமன்ற பேரவை மற்றும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment